கோவை வடவள்ளி அருகேயுள்ள கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக 5-வது முறையாக, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் நாடகப் பிரிவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள், விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரியில் நடந்தது. இதில் 5 வகைகளில் 36-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. நாடகத்தில் பாவனை நடிப்பு, குழுநடிப்பு, பொம்மலாட்டம் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், குழு நடிப்பில் கல்வீரம்பாளையம் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குழு நாடகப் பிரிவில் பல்வேறு பள்ளிகள் பங்கெடுத்தாலும், கோவை கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து சாதித்து வருகிறது.
பள்ளி மாணவிகள் எஸ்.சுபஸ்ரீ, எஸ்.ப்ரீத்தி, ஆர்.அசோக், ஏ.ஸ்ரீதர், எஸ்.பிரதீப் ஆகிய 5 பேர் கொண்ட குழு மாநில அளவில் முதல் பரிசு பெற்றது. இதில் எஸ்.ஸ்ரீதர் மட்டும் பிளஸ் 1 மாணவர், மற்றவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர்.
இது தொடர்பாக மாணவர்கள் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5-ம் ஆண்டாக மாநில அளவிலான நாடகப் பிரிவில் முதலிடம் பிடித்து வருகிறோம். 'இளையோர் திறன் என்ற தலைப்பு எங்களுக்கு தரப்பட்டிருந்தது. தற்போது பலரும் ரீல்ஸ், யூ டியூப் என சமூக வலைதளத்தில் நேரத்தை பொழுதுபோக்காக செலவிடுகின்றனர். இதை ஆக்கப்பூர்வமாக மாற்றும் வகையில் கதையை கட்டமைத்தோம். 10 நிமிடத்தில் 3 கதைகளை கூறினோம்.
டெல்லி யமுனை நதிக்கரையோரம் குடிசைப் பகுதியில் வாழும் ஏழை மாணவிகள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான பிரயன்சி பக்கா தன் வீட்டு பணிப்பெண் மூலம் அறிந்து கொண்டார். நதிக்கரை பகுதியில் வாழும் ஏழை குழந்தைகளுக்காக, நாப்கின் விநியோகத்தை ஒரு இயக்கமாக மாற்றி அனைவருக்கும் அந்த சிறுமி வழங்கினார் என்பது முதல் கதை.
2-வதாக உச்சபட்ச வறட்சியும், உச்சபட்ச இயற்கை சீற்றமும் கொண்ட 'எல் நினோ' பாதிப்பு மூலம், மனித சமூகம் எதிர்கொள்ளும் பேராபத்தை கதையாக கட்டமைத்தோம். 3-வதாக போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமை குறித்த கதை. இந்த 3 கதைகளையும் ஒன்றாக இணைத்து நாடகத்துக்கான திரைக்கதையாக ஆக்கினோம்.
காலாண்டு விடுமுறையில் கடும் பயிற்சி எடுத்தோம். 10 நிமிட நாடகம் முடிந்ததும், பார்வையாளர்கள் பலரும் பாராட்டினர். எங்கள் பள்ளி தொடர்ந்து 5-ம் முறையாக வெற்றி பெற்றுள்ளது. தற்போது முதல் பரிசு பெற்றிருப்பது. மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி தரும் ஆசிரியை வை.சசிகலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எல். சிவக்குமார் தரும் உற்சாகமும், ஊக்கமும் எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதேபோல, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான, பிற வகை நடனப் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். சர்வதேச அளவில் கபடி மற்றும் ஹாக்கியில் வென்றதையும் நடனத்துடன் கருத்துருவாக வைத்து மாணவிகள் தன்வந்தி, சாயாஸ்னீ. கோபிகா, புவனேஸ்வரி, சுரஜா தாபா, பூர்ணிமா, சைனி மிராக்ளின் மற்றும் ஸ்ரீ லட்சுமி ஆகிய மாணவிகள் கொண்ட குழு வென்றுள்ளனர்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க










