நாம் எல்லோரும் பள்ளிக்கு செல்லும் காலத்தில் எப்படா மணி அடிப்பாங்க வீட்டிற்கு செல்லலாம் என்று தான் இருந்திருப்போம். ஆனால் இங்கு இந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன் தனது 14 வயதிலேயே காலையில் பள்ளிப்படிப்பு, மாலையில் கோழிப்பண்ணை என்று இந்த வயதிலேயே பண்ணை முதலாளியாக மாறியுள்ளார் பொன் வெங்கடாஜலபதி.
விவசாயியான தன் தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் பண்ணையில் உள்ள கோழிகளுக்கு தண்ணீர் வைப்பதும், தீவனம் அளிப்பதும் என்று பொன் வெங்கடாஜலபதிக்கு கோழிகள் மீது தனி பிரியம் ஏற்பட்டு விட்டது.
இதே போல் தன் வீட்டிலும் ஒரு கோழிப்பண்ணை அமைக்க பெற்றோரிடம் கேட்டு இறுதியில் ஒரு கோழிப்பண்ணையும் அமைத்து விட்டார். இதற்கு ரூ. 10,000 செலவில் தொடக்கமாக 10 கோழிக்குஞ்சுகளை வாங்கி மேய்ச்சல் முறையில் துவங்கினார். அடிக்கடி வரும் சந்தேகங்களுக்கு அப்பாவையும், தாத்தாவையும் அணுகினாலும், யூடியுப்பை (You Tube) தன் ஆசானாக ஆக்கிக்கொண்டான். சிறிது சிறிதாக கற்றுக்கொண்டாலும் நோய் மேலாண்மை குறித்து இன்று வரை சற்று சிரமமாக தான் இருக்கிறது.
ஆரம்பத்தில் வாங்கிய 10 கோழி குஞ்சுகளுக்கு பிறகு மீண்டும் 20 கோழி குஞ்சுகள் வாங்கினோம். ஆனால் 20 கோழி குஞ்சுகளும் வெள்ளை கழிசல் நோயால் இறந்து விட்டது. ஒரு சமயம் டாக்டரிடம் தடுப்பூசி போடுவேன், பின்னர் வெள்ளை கழிசல் நோய் என்றால் மஞ்சள் கலந்த சின்ன வெங்காயம் நறுக்கி வைத்து விடுவேன். அம்மை நோயாக இருந்தால் வேப்ப இலையும், மஞ்சளும் அரைத்து தடவுவேன்.
தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் கோழிகளுக்கு தீவனம் வைத்து, இடத்தை சுத்தம் செய்வேன். பின்னர் பள்ளிக்கு சென்று மாலை 5 மணி வீடு திரும்பி மீண்டும் ஒரு மணி நேரம் பண்ணை வேலை செய்வேன். சில சமயம் அப்பா உதவுவார்கள் ஏன் என்றால் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் போது சில சமயம் காக்க தூக்கி கொண்டு போய்விடும்.
மேலும் இதில் அதிசயம் என்னவென்றால் பண்ணை வேலை மட்டுமன்றி, தாய் கோழியை பெருக்குதல் தொடங்கி விற்பனை வரை அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார் பொன் வெங்கடாஜலபதி.
கோழிகளுக்கு தேவையான தீவனங்களை மாதம் ஒரு முறை நானே சென்று வாங்கி வருவேன். பண்ணை தொடங்கிய ஆறு மாதத்திலேயே விற்பனையை ஆரம்பித்து விட்டேன். எனது பண்ணைக்கு "P V சிக்கன் பார்ஃம்" என்று பெயர் வைத்துள்ளேன்.
கோழிக்குஞ்சுகளை மட்டும் விற்க மாட்டேன். வெயில் காலங்களில் முட்டைகளை விற்று விடுவேன். தாய் கோழி மட்டும் கிலோ ரூ.400 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கோழிக்குஞ்சு தாய்கோழியாக மாற 4 மாத காலமாகும், இந்த 4 மாதத்தில் அதற்கான தீவனம், மருந்து என்று ஒரு தாய்கோழியை உருவாக்க ரூ.200 வரை ஆகும்.
கடந்த ஓர் ஆண்டில் தாய் கோழி விற்பனையில் மட்டும் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளேன். மேலும் தற்போது 2 ஆடும் மற்றும் 2 வாத்தும் வாங்கி வளர்த்து வருகிறேன். எதிர்காலத்தில் வேளாண் கல்வி பயின்று ஒருங்கிணைந்த பண்ணை வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை கனவு என்று பெருமிதத்துடன் கூறினார் பொன் வெங்கடாஜலபதி.
0 Comments:
Post a Comment