பலரும் இயற்கை விவசாயத்தில் அசத்தி வரும் வேளையில், சற்று மாற்றி யோசித்து இயற்கை முறையிலான கால்நடைத் தீவனம், விதைக் கரணைகளை விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார் கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகேயுள்ள எடைச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த கலியன்.
அவரைச் சந்திப்பதற்காக ஒரு மாலை நேரம் பயணமானோம். வழியெல்லாம் இயற்கைச் சூழல் காட்சியளிக்க, வளைந்து நெளிந்து சென்ற சாலையில் ஓரமாக இருந்தது கலியனின் விளைநிலம். பசுமாட்டைக் கட்டிக்கொண்டிருந்த அவர், இன்முகத்தோடு வரவேற்று நம்மிடம் பேசத் தொடங்கினார்.
13 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்
“நான், 12-ம் வகுப்பு வரை படிச்சேன். அப்புறமா... தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிச்சேன். சில நாள்கள் ஜே.சி.பி ஆபரேட்டரா வெளியூர்ல வேலை செஞ்சேன். 2007-ம் வருஷம் விக்கிரவாண்டி பகுதியில நடந்த நம்மாழ்வார் கூட்டத்தில் கலந்துகிட்டேன். இருமடிபாத்தி பத்தில காய்கறிச் சாகுபடி செய்றத பத்தி பேசுனாங்க. அதுமூலமா வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமளே உற்பத்தி செய்து கொள்ளலாம்னு சொன்னாங்க. அப்பதான் இயற்கை விவசாயத்து மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு. ‘இனிமே ரசாயனத்தைப் பயன் படுத்தக் கூடாது’னு முடிவெடுத்தேன். தொடர்ந்து பசுமை விகடன் படிச்சுகிட்டு வர்றேன். இதோடு தூண்டுதலால 13 வருஷமா இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன்’’ முன்னுரை கொடுத்தவர், தனது விவசாயம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘என்கிட்ட இருக்கிறது மொத்தம் 4 ஏக்கர் நிலம். அதுல 3 ஏக்கர் இறவைப் பாசனம். ஒரு ஏக்கர்ல மானாவாரிச் சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். முதல் தடவையா காய்கறிகளைத்தான் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். அப்புறமா நெல் நடவு செஞ்சேன். கிச்சிலிச் சம்பா, கருங்குறுவை, பூங்கார், மாப்பிள்ளைச் சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்களைத்தான் சாகுபடி செஞ்சேன்.
இயற்கை விவசாயத்துக்கு மாறியதும் நம்மாழ்வார் சொன்னபடி நிலத்துல பலதானிய விதைப்பு செஞ்சேன். இடுபொருளா பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமிலம் கொடுக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல சுமார் 3 வருஷம் வரைக்கும் கொஞ்சம் மந்தமாதான் இருந்துச்சு. அதுக்கு அப்புறமாதான் பலன் கிடைக்க ஆரம்பிச்சது.
இடுபொருள் தயாரிப்பதற்காக மாட்டுச் சிறுநீரைப் பிடிக்கும்போதெல்லாம், என்னையைப் பார்த்து ‘பைத்தியக்காரன்’னு ஊர்ல சொன்னாங்க. இருந்தாலும் என் முடிவை நான் மாத்திக்கல. என் வேலையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன். நம்மாழ்வாரின் வார்த்தைகளுக்கு அடுத்த படியாக, பசுமை விகடன்தான் என்னுடைய இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டி. அந்தப் புத்தகத்துல பல விவசாயிகள் சொல்வதைப் படிச்சு, நான் செயல்படுத்திப் பார்த்திருக்கேன். ‘புத்தகம் எப்ப வரும்’னு காத்துக்கிட்டு இருந்து, பஸ் ஏறிப்போய் வாங்கிட்டு வருவேன்.
‘‘தீவன கரணைகளை ஒருமுறை வெச்சுட்டாப் போதும் 5 வருஷம் வரைக்கும் தொடர்ந்து பலன் கிடைச்சுகிட்டே இருக்கும்.’’
உழவர் மன்றத் தலைவர்
2013-ம் வருஷம் பசுமை விகடன்ல உழவர் மன்றம் தொடர்பா ஒரு தகவல் வந்துச்சு. புத்தகத்தில இருந்த போன் நம்பருக்கு போன் பண்ணிப் பேசினேன். இன்னைக்கு நான், எங்க கிராமத்துல உழவர் மன்றத் தலைவராக இருக்கேன். என்னையும் இப்போ மக்கள் மதிக்கிறாங்க. அதற்குக் காரணம் பசுமை விகடன்தான். நபார்டு மூலம் ஆண்டுதோறும் சிறிய ஊக்கத்தொகையும் கிடைக்குது. எனக்கு இந்தப் பொறுப்பு கிடைச்சதால, எங்க ஊர்ல ஒற்றை நெல் சாகுபடி பண்ணச் சிலருக்கு அரசு மானியத்தை வாங்கிக் கொடுக்க முடிஞ்சது. ஊர்ல பல இடங்கள்ல மரங்களையும் நட்டுக்கிட்டு வர்றேன்’’ என்றவர் காய்கறி வயலைச் சுற்றிக்காட்டினார்.
66 சென்ட்... 16 மூட்டை
‘‘இயற்கை விவசாயம் செய்றது, ஆடு, மாடு வளர்ப்பது மட்டுமே போதாது. அதை லாபகரமாகக் கொண்டு போறதுதான் முக்கியம். அதையும் பசுமை விகடன் மூலமாகத்தான் தெரிஞ்சுகிட்டேன். அதைத் தொடர்ந்துதான் இப்போ ஆடு, மாடுகளை வளர்த்துகிட்டு வர்றேன். போன கார்த்திகை மாசம் நேரடி நெல் விதைப்பு முறையில் 66 சென்ட் நிலத்துல கிச்சிலிச் சம்பா விதைச்சேன். தை மாசம் அறுவடையில 16 மூட்டை (75 கிலோ) கிடைச்சது. ஒரு மூட்டை 2,110 ரூபாய்னு விதைக் காகக் கேட்டவங்களுக்கு கொடுத்துட்டேன். செலவு எல்லாம் போக 24,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைச்சது.
இப்போ 40 சென்ட்ல வெண்டை, முருங்கை, புடலங்காய், சுரைக்காய், கத்திரி போட்டிருக்கேன். ஊர்ல இயற்கை விவசாயத்தைப் புரிஞ்சுகிட்ட சிலர், தொடர்ச்சியா காய்கறிகளை வாங்கிக்கிறாங்க. உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு சில கடைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துகிட்டு வர்றேன். சென்னையிலிருந்து இப்போதான் காய்கறிகளைக் கேட்டிருக்காங்க. அனுப்பலாம்னு இருக்கேன்.
வெண்டை கிலோ 25 ரூபாய், முருங்கை 60 ரூபாய், புடலங்காய் 30 ரூபாய், சுரைக்காய் ஒண்ணு 10 ரூபாய், கத்திரிக்காய் 40 ரூபாய் விலையில கொடுக்குறேன். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை காய்கறி பறிக்கிறேன். காய்கறி பறிக்கிற அன்னைக்கு 700 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. என்னோட நிலத்துல விளையுற பயிர்களுக்குச் சுமார் 6 வருஷமா சொட்டுநீர்ப் பாசனமும் பயன்படுத்துறேன். இடுபொருளை அதுல கலந்துவிட்டால் போதும். நேரடியா பயிர்களோட வேர்கிட்டே போயிடும். காய்கறித் தோட்டத்துக்கும், தீவனப் பயிர்களுக்கும் சொட்டுநீர்ப் பாசனம் பயன்படுத்துறேன்’’ என்றவர் கால்நடைத் தீவனச் சாகுபடி பற்றிப் பேசத் தொடங்கினார்.
‘‘கால்நடை தீவனத்தை உற்பத்தி செஞ்சு விதைப் புல்லாக விற்பனை செய்துகிட்டு வர்றேன். சூப்பர் நேப்பியர், குட்டை நேப்பியர், சிவப்பு நேப்பியர், ஜிஞ்சிவா (Jinjwa Grass) புல், மல்பெரினு வளர்க்கிறேன். இந்த 5 வகைக் கால்நடைத் தீவனங்களையும் இப்போ சரியா 2 ஏக்கர்ல போட்டிருக்கிறேன். விதைக்காக விற்பனை செய்றதோடு இல்லாம, நான் வளக்குற ஆடு, மாடுகளுக்கும் இதைத் தீவனமா பயன்படுத்துறேன். கால்நடை தீவன விதைக்கரணையை விற்பனை செய்றேன். சூப்பர் நேப்பியர் ஒரு கரணை 70 காசு, குட்டை நேப்பியர் கரணை 1.50 ரூபாய், சிவப்பு நேப்பியர் 1.50 ரூபாய், மல்பெரி 1 ரூபாய், ஜிஞ்சிவா புல் 70 காசுனு கொடுக்கிறேன்.
இந்தத் தீவன கரணைகளை ஒருமுறை வெச்சுட்டாப் போதும் 5 வருஷம்வரைக்கும் தொடர்ந்து பலன் கிடைச்சுகிட்டே இருக்கும். ஜிஞ்சிவா புல் மட்டும் 30 வருஷம்வரைக்கும் பலன் கொடுக்கும்னு சொல்லுறாங்க. இந்தக் கால்நடை தீவனங்களை முதல் தடவை 60 முதல் 70 நாள்கள்ல அறுவடை பண்ணலாம். அடுத்த முறையிலிருந்து 45 நாள்களிலேயே அறுவடை பண்ணிக்கலாம். இடுபொருளைச் சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுக் கிறேன். தேவைப்படும்போது மாட்டுச்சாண எரு கொடுக்கிறேன். வேற எதுவும் கொடுக்கல’’ என்றவர் நிறைவாக,
விற்பனைக்கு கைகொடுத்த விகடன்
‘‘என்னுடைய இந்த விற்பனைக்குப் பெரிதும் கைகொடுத்தது பசுமை விகடன்தான். ‘பசுமை சந்தை பகுதி’யில் கால்நடை தீவன விதைக்கரணை கிடைக்கும்னு தகவல் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் கரணை கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதிகப்படியா வேலூரைச் சேர்ந்த ஒருத்தர், 36,000 ரூபாய்க்கு ஒரே தவணையில விதைக் கரணை வாங்கினார்.
இப்போ சூப்பர் நேப்பியர் 60 சென்ட், குட்டை நேப்பியர், ரெட் நேப்பியர் தலா 20 சென்ட், வேலிமசால், கோ.எஃப்.இ 31, 29 ரகங்கள் 20 சென்ட், ஜிஞ்சிவா புல் மற்றும் மல்பெரி தலா 40 சென்ட்ல இருக்குது. ஒரு தீவன விதைக்கரணையை விதைச்சு 4 மாசம் வளர்த்தால், அதிலிருந்து சராசரியா 10 கரணைகள் கிடைக்கும். இந்த மாதிரி 2 ஏக்கர்ல விதைச்சு அதை அறுவடை செஞ்சு விற்பனை செய்திட்டு வர்றேன். 4 - 5 மாசத்துக்கு ஓர் அறுவடை நடக்கும். போன முறை 2 ஏக்கர்ல தீவனப் புல் விதைக்கரணைக் கென்று விதைச்சேன். அந்த விதைக்கரணையை 70 காசிலிருந்து 1.50 ரூபாய் விற்பனையாச்சு. 2 ஏக்கர் நிலத்துல சாகுபடி செய்த விதைக் கரணைகள் மூலமா 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல அறுவடைக்கூலி, போக்கு வரத்து, பராமரிப்புனு 2 லட்சம் ரூபாய் வரை செலவாச்சு. செலவுகள் போக, 3 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைச்சது. விதைக்கரணை உற்பத்தியோடு காய்கறி உற்பத்தியும் செஞ்சிட்டு இருக்கேன். இந்தக் காய்கறிகளைச் சென்னை முதல் வெளி நாடுகள்வரை விற்பனைக்கு அனுப்பணும். அதுதான் என்னோட ஆசை” என்று உற்சாகமாக சொல்லி முடித்தார்.
0 Comments:
Post a Comment