தேவையான படிப்பு, கைநிறைய சம்பளம், கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம் பெயர்தல் என்று கிராமத்து வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டவர்கள், மீண்டும் கிராமத்து வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித் திருக்கும் காலம் இது. இளைஞர்களும்கூட வேலையை உதறிவிட்டு, இப்போது கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகளை மீட்பது, கால்நடை வளர்ப்பு என்று விவசாயத் தொழிலில் தடம் பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் பொறியியல் படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர் பாரதி கருணாநிதி, இப்போது நாட்டுமாடு வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு என பண்ணையத்தில் கால்பதித்து, மாதம் ரூ. 76,000 வரை வருமானம் பார்த்து வருகிறார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் உள்ள வளையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி கருணாநிதி. தனது பள்ளி கால நண்பரோடு சேர்ந்து, மோகனூர் வண்டிகேட் பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணையத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறார். மாடுகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த பாரதி கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம்.
“எங்களுக்கு 10 ஏக்கர் வரை நிலமிருக்கு. எங்க தாத்தா காலம்வரை விவசாயம் நடந்திருக்கு. அப்பா வங்கி வேலைக்குச் போய்ட்டதால, தொடர்ந்து விவசாயம் பண்ண முடியல. எனக்கு சின்ன வயசுல விவசாயத்துல ஆர்வம் வரல. அதனால, பி.இ இன்பார்மேஷன் டெக்னாலஜி இன்ஜினீயரிங் படிச்சிட்டு டெல்லியில் ஒரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு, அதே கம்பெனியின் பெங்களூரு கிளைக்குப் பதவி உயர்வுல வந்தேன். ஆனால், அந்த வேலை பிடிக்கல.
காசு பணத்தைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறதுனு நினைச்சேன். கிராமத்தில் விவசாயம் சம்பந்தமா ஏதாவது பண்ணணும்னு முடிவு பண்ணினேன். 2016-ம் வருஷம் மாசம் ரூ.54,000 சம்பளம் வாங்குன வேலையை ராஜினாமா பண்ணினேன். ‘உனக்குப் புத்திகித்தி கெட்டுப்போச்சா. நல்ல வேலையை விட்டுட்டு, இந்தக் குக்கிராமத்துல வந்து என்ன பண்ணபோற’னு வீட்டுல திட்டுனாங்க. ஆனால், நான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கிற முடிவுல உறுதியா நின்னேன்.
தோள் கொடுத்த தோழமை
கோயம்புத்தூர்ல சொந்தமா கம்பெனி வெச்சிருக்க என்னோட பள்ளித்தோழன் தினேஷ் பிரசாத் என்னோட இணைஞ்சு கிட்டான். இந்த மூன்றரை ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பிடிச்சேன். தேவையான கொட்டகை அமைச்சேன். முதல்ல, 4 முரா எருமைகள், ஒரு சாஹிவால் மாடு, ஒரு ஹரியானா மாடுனு 6 உருப்படிகள் வாங்கினேன். இதுக்கு ஏழரை லட்சம் செலவாச்சு.
அனுபவம் இல்லாததால, அதிக விலை கொடுத்து வாங்கியது அப்புறம்தான் தெரிய வந்துச்சு. அதோட, ரெண்டு எருமை கன்னுக்குட்டிகள் இறந்துபோச்சு. அப்பத்தான் பயம் வந்துச்சு. இருந்தாலும், முன்ன வெச்ச காலைப் பின்னே வைக்கக் கூடாதுனு ஆறு மாசம் மாடு வளர்ப்பைப் பற்றி முழுமையா ஆய்வு பண்ணினேன். அடுத்து, சரியான வேலை ஆள்கள் கிடைக்காத பிரச்னை ஏற்பட்டுச்சு. 2017-ம் வருஷம்தான் சரியான கூலி ஆள்கள் கிடைச்சாங்க.
2017-ம் வருஷ கடைசியில ஒரு மாடு ரூ.75,000 மதிப்புல 4 கிர் ரக மாடுகளை வாங்கினேன். பிறகு, அப்பா தன்னோட ஓய்வூதிய பணத்தைக் கொடுத்தார். அதுல, ராஜஸ்தான் ரகமான தார்பார்க்கர் மாடு 4, முரா எருமைகள் 4 வாங்கினேன். இப்படியே 6 கிர் மாடுகள், 12 முரா எருமைகள், 8 கன்னுக்குட்டிகள், 2 தார்பார்க்கர் மாடுகள், 2 கன்னுக்குட்டிகள், ஒரு சாஹிவால் பசு, ஒரு கன்னுக்குட்டி, ஒரு ஹரியானா மாடு, ஒரு கன்னுக்குட்டி, ஒரு குஜராத் ரக ராத்தி மாடு, ஒரு குஜராத் ரக காங்கிரேஜ் மாடு, ஒரு கன்னுக்குட்டி, ஒரு காங்கேயம் ரக மாடுனு மொத்தம் 70 மாடுகள் சேர்ந்திடுச்சு. அதுதவிர, 20 நாட்டு வெள்ளாடுகள், 30 பெருஞ்சாதி கோழிகளையும் வாங்கினேன். இது எல்லாத்தையும் சேர்த்து மொத்த முதலீடு 20 லட்சம் ரூபாய் ஆகிடுச்சு. அதுல, பாதி தினேஷ் பிரசாத் கொடுத்தது” என்றவர், பண்ணையைச் சுற்றிக் காட்டினார்.
“எப்பவும் 100 லிட்டர் வரை பால் கிடைக்குமாதிரி மாடுகள பராமரிச்சிட்டு வர்றோம். பால் விற்பனைக்கென்றே கரூர் காந்திகிராமத்துல பால் அங்காடி ஒண்ணைச் சொந்தமா தொடங்கி, அங்கே கொண்டுபோய்ப் பாலை விற்க ஆரம்பிச்சோம். கரூர் அங்காடியில நாட்டுமாட்டுப் பால் லிட்டர் ரூ.80, எருமைப் பால் லிட்டர் ரூ.60 விலையில விற்பனை செய்றோம். இங்க விக்காம மிச்சமாகுற பாலை ஒண்ணாக் கலந்து ஒரு லிட்டர் 46 ரூபாய்னு விற்பனை செய்றோம்.
காங்கேயம் காளைகளை வெளியில் இனச்சேர்க்கை செய்யப் பயன்படுத்துகிறோம். அதுக்கு, ஒருமுறை இனச்சேர்க்கைக்கு 500 ரூபாய் வாங்குறோம். காளை கன்னுக்குட்டிகளை வருஷத்துக்கு ஒரு தடவை விற்பனை செய்றோம். அதுல 10,000 முதல் 15,000 ரூபாய் வரை வருமானம் வருது. பண்ணையில சேகரமாகும் ஆடு, மாடு சாண எருவை விற்பனை செய்றோம். ஒரு டிப்பர் எரு 2,000 ரூபாய் விலையில மாசத்துக்கு 5 டிப்பர் சாண எருவை விற்பனை செய்றோம்” என்றவர், வேலை ஆள்களுக்கு வேலைகளைக் கொடுத்துவிட்டு, நம்மிடம் வரவுச் செலவு, லாபக்கணக்கை விவரிக்கத் தொடங்கினார்.
மாதம் ரூ.2 லட்சம் வருமானம்
“தினமும் நாட்டு மாட்டுப் பால் 60 லிட்டர் கிடைக்கும். அதுல 30 லிட்டர் பாலை அங்காடியிலேயே ஒரு லிட்டர் 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். அதுமூலமா, 2,400 ரூபாய் கிடைக்குது. தினமும் 40 லிட்டர் எருமைப் பால் கிடைக்குது. இதுல 30 லிட்டர் பாலை ஒரு லிட்டர் 60 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 1,800 ரூபாய் கிடைக்கும். இரண்டிலிருந்தும் மீதமாகும் 40 லிட்டர் பாலை, ஒரு லிட்டர் 46 ரூபாய்னு வியாபாரிகளுக்கு விற்பனை செய்றோம். அந்த வகையில 1,840 ரூபாய் வரை கிடைக்கும். இப்படி, மூணு வகையிலும் தினமும் 6,040 ரூபாய் வரை வருமானம் வரும். ஒரு மாசத்துக்கு 1,81,200 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
அதேபோல், ஆடு, மாடு சாண எரு விற்பனை மூலமா மாசம் 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிர, மாசத்துக்குச் சராசரியாக 3 ஆடுகள், 10 கோழிகள் விற்பனை செய்யுற வகையில் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இப்படி, ஒரு மாசத்துக்கு மொத்தம் 2,06,200 ரூபாய் வரை வருமானம் வருது. இதுல, செலவுன்னு பார்த்தால், ஒரு மாட்டுக்குத் தினமும் 6 கிலோ வரை தீவனம் செலவாகுது. கறவை மாடுகள் 10 மாடுகளுக்கு 60 கிலோ தீவனத்துக்குக் கிலோ 22 ரூபாய் கணக்குல மொத்தம் 1,320 ரூபாய் செலவாகுது. வேலை ஆள்களுக்குத் தினமும் சம்பளம் 2,500 ரூபாய் வரை போகுது. மாடுகளுக்குத் தீவனச் செலவு, கூலி ஆள் செலவு மட்டும் தினமும் 4,000 ரூபாய் வரை அகுது. ஒரு மாசத்துக்கு 1,20,000 ரூபாய் வரை செலவாகும். பெட்ரோல் செலவு மாசம் 5,000 ரூபாய். அதேபோல, ஆடு, மாடுகளுக்கு மருந்து வாங்க மாசம் 5,000 ரூபாய் வரை செலவாகும். இப்படி மொத்தமாக, மாசத்துக்கு 1,30,000 ரூபாய் வரை செலவாகும். மொத்த வருமானமான 2,06,200 ரூபாயில், செலவாகுற 1,30,000 ரூபாயை கழித்தால், 76,200 ரூபாய் லாபமாக நிக்கும். 100 மாடுகள்வரை அதிகரிக்கும்போது, வருமானமும் அதிகரிக்கும்’’ என்றவர் நிறைவாக,
‘‘சொந்தமா இடம் வாங்குற முயற்சியில் இருக்கிறோம். போனவருஷம்தான் எனக்கு கல்யாணம் நடந்துச்சு. என் மனைவி பிரியதர்ஷனி, பி.டெக் படிச்சிருக்காங்க. அவங்களும் மட்டுப்பண்ணை வேலைகள்ல எனக்கு ஒத்தாசையா இருக்காங்க. நண்பர் தினேஷ் பிரசாத் வாரத்துக்கு ஒருதடவை பண்ணைக்கு வந்து பார்த்துட்டுப் போறார். கரூர்ல 3 கடைகள் ஆரம்பிக்கிற ஐடியாவும் இருக்கு. தவிர, நாமக்கல் மாவட்டம் முழுக்க எங்க பண்ணைப் பாலை கொண்டு சென்று விற்பனை செய்யவும் திட்டம் இருக்கு” என்று சொல்லி முடித்தார்.
No comments:
Post a Comment