Search

ஆடு வளர்ப்பில் அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி.!

 தகுந்த வேலை கிடைக்காததால் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு அதிக வருமானம் ஈட்டி அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி.

சரியாக படிக்கவில்லை என்றால் ‘ஆடு மாடு’ தான் மேய்க்க வேண்டும்  என்று பெற்றோர்கள் பல முறை கூற கேட்டிருப்போம். ஆனால் இங்கு படித்து  பட்டம் வாங்கியும் ஆடு மேய்க்கும் நிலை.

படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் பொறியியல் (Engineering) பட்டதாரிகளின் நிலை மிகவும் கவலை கிடமாக மாறி வருகிறது.

இந்நிலையில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் வேல்வேந்தன் சற்றும் மனம் தளராது தான் செய்யும் வேலையை ரசித்து செய்து வருகிறார்.

புதுக்கோட்டை அருகே சிலட்டூரைச் சேர்ந்த வேல்வேந்தன் பொறியியல் முடித்த பட்டதாரி. ஆரம்பத்தில் மற்ற பட்டதாரிகளை போல படிப்பை முடித்ததும் அதற்கு ஏற்ற வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்த படிப்பிற்கான வேலை தேடிச் சென்றார். ஆனால் சென்ற இடமெல்லாம் ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் சற்றும் மனம் தளராமல் தனது சொந்த ஊரிலேயே ஆடு வளர்ப்பது, நாற்று நடுவது, தென்னங்கீற்று பின்னுவது, கேட்டரிங் என கிடைத்த வேலையை ரசித்த மனதோடு செய்து மற்ற வேலை இல்லா பட்டதாரிகளுக்கு முன்னுதாரமாக விளங்கி வருகிறார்.

இதை பற்றி வேல்வேந்தன் கூறியதாவது

புதுக்கோட்டையில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் முடித்து விட்டு மற்ற பட்டதாரிகளை போல சென்னைக்கு வேலை தேடி சென்றேன் ஆனால் ஒவ்வொரு இடத்திலும் ஏமாற்றமே கிடைத்தது. இன்னும் சிறிது நாள் தங்கி வேலை தேடுவதற்கு போதுமான பணம் இல்லை. ஒரு புறம் குடும்ப சூழ்நிலை, மேலும் பெற்றோர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டிய நிலைமை. இன்ஜினீயரிங் முடித்த என்னை உதவியாளராக கூட எந்த நிறுவனமும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வில்லை.

velventhan civil engineer

வெளியூரை சேர்ந்த சிலர் வீட்டு பக்கத்தில் ஆடு கிடை போட்டிருப்பதை பார்த்து நாமும் ஆடு வளர்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. சிறிது சிறிதாக சேமித்த வைத்த பணத்தை கொண்டு முதலில் 2 ஆட்டு குட்டிகள் வாங்கி வளர்த்தேன். இப்போது மொத்தம் 18 ஆடுகளாக பெருகி இருக்கிறது. ஆடு வளர்ப்பில் கிடைக்கும் இடைவேளைகளில் கேட்டரிங் வேலையை பார்த்து வருகிறேன். கேட்ரிங் வேலை இல்லாத நேரங்களில் தென்னங்கீற்று பின்னும் வேலையை செய்து வருகிறேன். சில சமயங்களில் அப்பாவுடன் கூலி வேலைக்கும் செல்வேன்.

இப்படி படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காமல் 'ஆடு மேக்கிறான்' என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் கவலைப் படாமல் நான் பார்க்கும் வேலையை ரசித்து மனதார செய்து வருகிறேன். வாழ்க்கையில் இதுவும் ஒரு அனுபவம் தான், ஆனால் நிச்சயம் ஒரு நாள் நான் படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கும் என்றும் அதில் நான் சாதித்து காட்டுவேன் என்றும் மனம் தளராது வேலை இல்லா பட்டதாரிகளுக்கு வேல்வேந்தன், ஆடு வளர்ப்பது தலை குனிவான தொழில் இல்லை என்பதை கூறி ஓர் முன்னுதாரணமாக விளங்கினார் வருகிறார்.

0 Comments:

Post a Comment