மதுரை மாவட்டம், மேலவளவில் இயங்கிவரும் ‘மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்’ என்ற மகளிர் குழு, தரமான இயற்கை உரத்தைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதால், சுற்றியிருக்கும் மாவட்டங்களி லிருந்துகூட விவசாயிகள் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
அக்குழுவைச் சந்திக்க மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மேலவளவு கிராமத் துக்குச் சென்றோம். பவானி, நதியா, ரேவதி, கவிதா, ஜோதி, சின்னம்மாள், சசிகலா, ஜெயா, வீரம்மாள், பாண்டிச்செல்வி, போதும்பொண்ணு, முத்துலட்சுமி, லட்சுமி, சித்ரா ஆகியோர் கொண்ட இக்குழுவில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கோபால் என்ற மென்பொருள் பொறியாளரும் இருக்கிறார்.
குழுவினரிடம் பேசிய போது, “நாங்களும் வீடு, வயல்னு வேலை செஞ்சுகிட்டும் பொழுது போக்கிட்டும்தான் வாழ்ந்துகிட்டிருந்தோம். என்னதான் மாய்ஞ்சு மாய்ஞ்சு விவசாயம் செஞ்சாலும் பெரிய லாபம் இல்லை. ரசாயன உரங்களால்தான் பாதிப்புனு தெரிஞ்சுகிட்டு அதை மாத்தணும்னு பேசுவோம். வெவசாயத்தில பொம்பளைப் புள்ளைங் களுக்கான வேலைனு பார்த்தா, நாத்து நடுறது, களை யெடுக்கிறதுதான். அதைத் தாண்டி நாமளும் விவசாயத்தை நல்லபடியா கொண்டு வர ஏதாவது பண்ணணும்னு நெனைச்சோம்.
அப்பதான் மதுரையில இருக்கிற வேளாண் கல்லூரி அறிவியல் மையம் மூலமா ‘டிரைக்கோடெர்மா விரிடி’ங்கிற இயற்கை பூஞ்சணக்கொல்லியைத் தயாரிக்கக் கத்துக் கொடுக்கிறத பத்தி கேள்விப்பட்டோம். அங்க கத்துக்கிட்டு, விநாயகபுரம், குடுமியான்மலை மையங்கள்லயும் பயிற்சி எடுத்துக்கிட்டோம். கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர், உரம் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க ஒரு லட்சம் ரூபாய் மானிய உதவி பண்ணினாங்க. நாங்க உரம் தயாரிக்க ஊராட்சி மன்றம் சார்பில் இந்தக் கட்டடத் தையும் கொடுத்தாங்க.
உரம் தயாரிப்புக்கான மூலப்பொருள்களை வேளாண் மையத்துல வாங்கிட்டு வந்து உரம் தயாரிக்க ஆரம்பிச்சோம். ஒரு வாரத்துல உரம் தயாரிச்சு பக்குவமா ஒரு கிலோ, அரைக் கிலோனு பாக்கெட்டுகள்ல போட்டு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். டிரைக்கோ டெர்மா விரிடி பத்தி விவசாயிகள்ட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சாங்க. அதை எங்க தோட்டத்தில் பயன்படுத்திக் காட்டினதும், பலனைப் பார்த்து எல்லோரும் வாங்க ஆரம்பிச்சாங்க. ஒரு கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டுருக்கோம். வாங்கிட்டுப்போனவங்க எல்லோருமே ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப சந்தோசம். இப்போ டன் கணக்கில் தயாரிச்சுட்டுருக்கோம்.
மண்புழு உரத்துல அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், விரிடி எல்லாம் கலந்து ஊட்டமேற்றிய மண்புழு உரமா விற்பனை செய்யுறோம். அதை கிலோ 30 ரூபாய்னு கொடுக்குறோம். இன்னும் சில உயிர் உரங்களையும் தயாரிக்க ஆரம்பிச்சுட்டோம். இப்ப மாசம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்றோம். ஆரம்பநிலையில இருக்குறதால அதிக லாபம் வைக்காம, விற்பனை செய்றோம். இதுல கிடைக்குற வருமானத்தை மறுபடியும் உற்பத்திக்காக முதலீடு செஞ்சிடுறோம்.
அரசாங்கம் எங்களுக்கு இன்னும் உதவி பண்ணினால் எங்கள் ஊரை வளப்படுத் திடுவோம். நாங்க உழைச்சு உற்பத்தி செஞ்சாலும் இப்போதைக்கு எங்களுக்குனு எந்தப் பங்கும் எடுத்துக்கல. வர்ற காலத்துல உற்பத்தியை அதிகப்படுத்தி, தமிழகமெங்கும் விற்பனை செய்யணுங்கிற ஐடியா இருக்கு. அது மூலமா நாங்க எல்லோரும் பொருளாதார ரீதியா முன்னேறணும்னு நினைக்கிறோம். அரசு கடனுதவி செஞ்சா, இதைத் தொழிற் சாலை மாதிரி லாபமா நடத்துவோம்” என்றனர்.
மேலவளவில் விவசாயிகளை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுவைத் தொடங்கி யிருக்கும் கோபாலிடம் பேசினோம். “சிறு, குறு விவசாயிகளை இணைத்து உருவாக்கி யுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுவில் கூட்டுப் பண்ணை விவசாயத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது 250 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் விவசாயத்துக்குத் தேவையான பொருள்கள், பண்ணைக் கருவிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறோம். வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைத்து எந்த நேரத்திலும் அவர்களுக்கு வேளாண்மை அதிகாரிகள்மூலம் தேவையான ஆலோசனை களை வழங்குகிறோம். விரைவில் உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தரகர் இல்லாமல் விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
மகளிர் உற்பத்திக் குழு தயாரிக்கும் இயற்கை உரம், இந்தப் பகுதி வாழை விவசாயி களுக்கு உபயோகமாக உள்ளது. இப்போது வெளி மாவட்டங்களிலிருந்தும் வாங்க வருகிறார்கள். முதலில் எங்கள் வட்டாரத்தை நஞ்சில்லாத பகுதியாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்த மகளிர் குழு பெண்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலமாகச் சம்பளம் கிடைத்தால் உற்பத்தி இன்னும் அதிகமாகும்” என்று கோரிக்கை வைத்தார்.
No comments:
Post a Comment