Search

மாதம் ரூ.35,000 குறைவான பராமரிப்பு நிறைவான லாபம்! பொறியாளரின் பால் பண்ணை!

 பால் பண்ணை ஆரம்பித்தவுடன் லட்சங்களில் வருமானம் கிடைத்து விடாது. மாட்டுப் பண்ணையைப் பற்றிய தெளிவான புரிதலும், சொந்த உழைப்பும், முழுமையான ஈடுபாடும் இருந்தால் மட்டுமே நல்ல வருமானம் பார்க்க முடியும்’’ என்கிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆனந்த சுந்தரம்.



கன்னியாகுமரியில் இருந்து 4 கி.மீ தொலை வில் உள்ளது மகாதானபுரம். அங்குள்ள அக்ரஹாரத் தெருவில் இருக்கிறது ஆனந்த சுந்தரத்தின் வீடு. வீட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறது மாட்டுப்பண்ணை. இதமான மழைச்சாரல் இருந்த ஒரு காலை நேரத்தில் அவரைச் சந்தித்தோம். “நம்ம மாட்டுப்பால்ல போட்ட காபியைக் குடிங்க இதமா இருக்கும்” என, ஆவி பறக்க சூடான காபியைக் கையில் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “அடிப்படையில் விவசாயக் குடும்பம். தாத்தா காலத்துல முழுமையா விவசாயம் நடந்துச்சு. வாழைதான் எங்க பகுதியில முக்கியமான சாகுபடி. ரஸ்தாலி, பூவன், செவ்வாழை ரக வாழைகளை ஆரம்பத்துல சாகுபடி செஞ்சோம். அப்பா டாக்டர்ங்கிறதுனால விவசாயத்துல சரியா கவனம் செலுத்த முடியல.

எனக்கு விவசாயம், மாடு வளர்ப்புல சின்ன வயசுல இருந்தே ஆர்வம் அதிகம். அதனால பள்ளிப்படிப்புக்குப் பிறகு, கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துல ‘பி.டெக்’ தோட்டக்கலை படிச்சு முடிச்சேன். பிறகு, குவைத்துல பண்ணை வடிவமைப்பு கம்பெனியில பொறியாளரா ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, மதுரையில ஒரு வங்கியில மூணு வருஷம் வேலை பார்த்தேன். இருந்தாலும் விவசாயம் சார்ந்த தொழிலைச் சொந்தமாச் செய்யணும்னு எனக்குள்ள ஆசை இருந்துச்சு. அதனால, மாட்டுப்பண்ணை வச்சு பால் விற்பனை மூலமா தினசரி வருமானம் பார்க்கலாம்னு தோணுச்சு.

ஆரம்பத்துல ரெண்டு மாடுகள வச்சு ஆரம்பிச்சேன். இப்போ 7 கலப்பின மாடுகள், ஒரு கிர் பசுன்னு மொத்தம் 8 மாடுகள், 3 கன்னுக்குட்டிகள் இருக்குது. கலப்பின மாடுகள்ல கறவை நிலையில 3 மாடுகளும், 4 சினை மாடுகளும் இருக்கு. இதோடு கிர் பசுவும் கறவையில இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல பசுந்தீவனத்துக்காக ‘சூப்பர் நேப்பியர்’ தீவனப்புல்லைச் சாகுபடி செஞ்சிருக்கேன்” என்றவர், வருமானம் மற்றும் விற்பனை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.



“கறவை நிலையில இருக்க 4 மாடுகள் மூலமா சராசரியா மாசம் 1,200 லிட்டர் பால் கிடைக்கிது. ஒரு லிட்டர் 40 ரூபாய்னு உள்ளூரிலயே விற்பனை செஞ்சிடுறேன். அந்த வகையில, மாசம் 48,000 ரூபாய் வருமானம் கிடைக்கிது. இதுல, கறவைப்பசு, சினை மாடுகள், கன்றுகளுக்கான தீவனம், பராமரிப்புச் செலவுகள்னு 30,000 ரூபாய் செலவாகுது. மீதி 18,000 ரூபாய் நிகரலாபமாக் கிடைக்குது.

மாட்டுச்சாணம் மூலம் மாசம் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிது. இதுதவிர, வருஷத்துக்குச் சராசரியா 3 சினைமாடுகளை விற்பனை செய்றேன். ஒரு மாடு 60,000 ரூபாய் கணக்கில 1,80,000 ரூபாய் வருமானம் கிடைக்கிது. இதை மாசக்கணக்குல பார்த்தா 15,000 ரூபாய். ஆக, மொத்தம் பால், சாணம், சினை மாடு விற்பனை மூலமா மாசம் 35,000 ரூபாய் லாபம் கிடைக்கிது. சீக்கிரம் 20 மாடுகளை வச்சு, பால் மட்டுமல்லாம நெய், பால்கோவானு மதிப்புக்கூட்டி விற்பனை செய்யுற திட்டமும் மனசுல இருக்கு” என்றவர் நிறைவாக,

“மனசுக்குப் பிடிச்ச வேலையைச் செய்யணும்ங் கிறதுல உறுதியா இருக்கேன். அதிக வேலைப்பளு, மன உளைச்சல், இறுக்கமான மனநிலையில ஒரு மெஷின் மாதிரி வேலை பார்த்து கை நிறையச் சம்பாதிச்சாலும் அதுல சந்தோஷம் இருக்காது. எனக்கு இதுல வருமானம் குறைச்சலாக் கிடைச்சாலும் அளவில்லா சந்தோஷத்தோட இருக்கேன்” என்றபடி விடைகொடுத்தார்.

மாடுகளைத் தேர்வு செய்வது எப்படி?

கறவைக்காகக் கலப்பின மாடுகளை தேர்வு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்துப் பேசிய ஆனந்த சுந்தரம், “8 முதல் 9 மாதச் சினையாக இருக்கும்போது மாடுகளை வாங்குவது நல்லது. சினை நிலையில் இருக்கும் மாடுகள் நம்மிடம் நன்கு பழகிவிடும். மாடுகளின் மேல்தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். காது சிறிதாகவும், உள் வளைவான கொம்பு உடையதாகவும் இருக்க வேண்டும். ஒரு காம்புக்கும் அடுத்த காம்புக்கும் 4 விரல் அளவு இடைவெளி இருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் இருந்து காம்பைப் பார்த்தால் அடுத்த காம்பு தெரியக் கூடாது.

4 காம்புகளும் வளைவில்லாமல் நேராக இருக்க வேண்டும். மாட்டின் மடிப்பகுதி, கால் மூட்டு இணைப்புக்கீழ் தொங்கக்கூடாது. மாட்டினை நடக்கவிட்டு இவற்றைத் தெளிவாக கவனிக்க வேண்டும். இந்த அம்சங்கள் உள்ள மாடுகள் ஆரோக்கியமானதாகவும், அதிக பால் உற்பத்தி தருவதாகவும் இருக்கும். புதிதாக வாங்கும் மாடுகளை இரண்டு வாரம் வரை தனியாகப் பராமரித்த பிறகு, பண்ணையில் உள்ள மற்ற மாடுகளுடன் சேர்க்கலாம். புதிய மாட்டுக்கு நோய்த்தொற்றுகள் ஏதும் இருந்தால் கண்டுபிடித்து விடலாம். அத்துடன், இங்குள்ள தீவன முறையையும் அவை பின்பற்றிவிடும்.

அடர்தீவனம் எவ்வளவு கொடுக்கலாம்

மாட்டுக்கான கொட்டகை அமைப்பது, மாடுகளுக்கு அடர்தீவனம், பசுந்தீவனம் கொடுப்பது குறித்து ஆனந்த சுந்தரம் சொல்லிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

கொட்டகைச் சுத்தம் அவசியம்

மாட்டுப்பண்ணைக்கு கிழக்கு, மேற்காக கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதி, தண்ணீர்த் தேங்கி நிற்காத வகையில் சரிவாக இருக்க வேண்டும். தரையில் இருந்து ஒன்றேகால் அடி உயரத்தில் தளம் அமைத்து, அதிலிருந்து 2 அடி உயரத்தில் தீவனத்தொட்டி அமைக் கலாம். மாட்டுச் சாணம் ஆங்காங்கே தேங்கிவிடாமல், அவ்வப்போது அகற்றிக்கொண்டே இருக்க வேண்டும். கொட்டகையைத் தினமும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சீதோஷ்ண நிலையைப் பொறுத்து மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும். கோடைக்காலமாக இருந்தால் மதிய வேளையில் குளிப்பாட்டுவது நல்லது. மழைக்காலத்தில் குளிப்பாட்ட தேவையில்லை.

காலை, மாலை அடர்தீவனம்

தினமும் காலை 4.30 மணிக்கு கொட்டகையை சுத்தம் செய்து, கறவை மாடுகளுக்கு தலா மூன்றரை கிலோ அடர்தீவனம், அரைக்கிலோ கோதுமைத்தவிடு கலந்து தோசைமாவு பதத்தில் வைக்க வேண்டும். சினை மாடுகளுக்கு ஒரு கிலோவும், கன்றுக்குட்டிகளுக்கு அரைக்கிலோவும் வைக்க வேண்டும். மாலை 3.30 மணிக்கு இதே அளவு அடர்தீவனத்துடன் 50 கிராம் தாது உப்பு, அரை லிட்டர் சிப்பிச் சுண்ணாம்பு நீர் கலந்து கொடுக்க வேண்டும் (கன்றுக்குட்டிகளுக்கு 250 மி.லி சுண்ணாம்பு நீர், 25 கிராம் தாது உப்பு) அடர் தீவனம் வைத்த பிறகு பால் கறக்க வேண்டும்.

கறவைக்குப் பிறகு உலர், பசுந்தீவனங்கள்

பால் கறந்து முடித்தவுடன் மாடுகளை, உடனே தரையில் படுக்கவிடக் கூடாது. அப்படி படுத்தால், காம்புகளில் நோய்க்கிருமிகள் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கறவை முடிந்தவுடன் பசுந்தீவனமோ, உலர் தீவனமோ கொடுத்தால் மாடுகள் நின்றுகொண்டே தீவனம் எடுக்கும். அந்த நேரத்தில் காம்புகளும் மூடிக்கொள்ளும். ஒரே அளவில் தீவனம் போட வேண்டும். தீவனத்தின் அளவு கூடினால் செரிமானம் ஆகாது. பால் உற்பத்தியும் குறையும். காலையில் கறவைக்குப் பிறகு, 5 கிலோ வைக்கோல், மாலையில் கறவைக்குப் பிறகு 15 முதல் 20 கிலோ கோ-4 அல்லது கம்பு நேப்பியர் பசுந்தீவனத்தைக் கொடுக்கலாம்.

சுண்ணாம்பு நீர்

50 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 7 கிலோ சிப்பிச் சுண்ணாம்பைப் போட்டு, அதில் 20 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு, தினமும் அதில் தெளிந்த நீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சுமார் 10 லிட்டர் கிடைக்கும். எத்தனை லிட்டர் தெளிந்த நீர் எடுக்கிறோமோ, அதே அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதாவது எப்போதும் டிரம்மில் 20 லிட்டர் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 30 நாள்கள் வரை இப்படிச் செய்யலாம். பிறகு, டிரம்மைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் சிப்பிச் சுண்ணாம்பைப் போட்டு தெளிந்த நீர் எடுக்கலாம்.

மடிநோய்க்கு மருத்துவம்:

மடிநோய்க்குச் செய்ய வேண்டிய மருத்துவ முறைகள் குறித்து ஆனந்த சுந்தரம் சொல்லிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

மாட்டின் வயிற்றில் புளிப்புத்தன்மை அதிகமாவதால் மடிநோய் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். இதைத் தடுக்க வீட்டில் மிஞ்சிய தோசை, இட்லி, மாவுப் பொருள்கள், பழைய சாதம் போன்ற புளிப்பு மிகுந்த பொருள்களை மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அஜீரணம், வயிற்று மந்தம் ஏற்பட்டு மடிநோயாக மாறிவிடும். அசைபோடாமல் இருத்தல், மந்தமாக இருத்தல், காம்புகளில் வீக்கம், பால் திரிந்து தயிர்போலக் காணப்படுதல் ஆகியவை மடிநோயின் அறிகுறி. இந்நோய் தென்பட்டால், தாமதிக்காமல் 50 கிராம் சோடா உப்புத்தூளை வாய் வழியாகக் கொடுக்க வேண்டும்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பாலைக் கறந்துவிட வேண்டும். இப்படி இரண்டு நாள்கள் வரை செய்ய வேண்டும். இதில், எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தூள் 150 கிராம், மிளகுத்தூள் 100 கிராம் ஆகியவற்றை 150 கிராம் பசுநெய்யுடன் சேர்த்து உருண்டையாக உருட்டி கொடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அடர் தீவனத்துடன் 50 கிராம் சோடா உப்பு கலந்து கொடுத்தாலே முடிந்தவரை மடிநோய் வருவதைத் தடுக்க முடியும்.

புதிதாகப் பால் பண்ணை தொடங்குபவர்களுக்கு.

“படிச்ச இளைஞர்கள் ஆர்வமா பால் பண்ணை ஆரம்பிக்குறாங்க. ஆனா, 6 மாசத்துலயே நஷ்டம்னு சொல்லி மூடிடுறாங்க. பால் பண்ணையை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி குறைந்தபட்சம் 10 பண்ணைகளையாவது பார்வையிடணும். அதிக மாடுகள் இருக்குற பண்ணைகளைப் பாக்குறதைவிட, குறைவான எண்ணிக்கையில எளிமையா நடக்குற பண்ணைகளைப் பார்க்கணும். கறவை மாடுகள் பராமரிப்பு, தீவனம், நோய் மேலாண்மை முதல் விற்பனை வரைக்கும் எல்லா விஷயங்களையும் உன்னிப்பா கவனிக்கணும்.

அதுக்கு பிறகுதான், பண்ணையை ஆரம்பிக்கணும். அதுவும் முதல்ல 3 முதல் 5 மாடுகளை வச்சு ஆரம்பிக்கணும். குடும்பத்தில இருக்க ஒருத்தராவது பண்ணைப் பராமரிப்பில ஈடுபடணும். பசுந்தீவனங்களை முடிஞ்சவரைக்கும் விலை கொடுத்து வாங்குறதைத் தவிர்த்துட்டுச் சொந்தமா சாகுபடி செய்றது நல்லது. செலவுகளைக் குறைச்சாதான் பண்ணையை நிர்வகிக்கவும், லாபம் பார்க்கவும் முடியும். தீவனம் போடுறதும், பால் கறக்குறதும் சரியான நேரத்தில செய்யணும். இதையெல்லாம் செய்தாலே பால் பண்ணைத் தொழில்ல வெற்றி பெறலாம்” என்கிறார் ஆனந்த சுந்தரம்.

கன்று ஈன்ற பிறகு செய்ய வேண்டியவை:

கன்று ஈன்ற பிறகு தாய்ப் பசுவுக்கு 2 கிலோ வெண்டைக்காய் அல்லது ஒரு கிலோ முள்ளங் கியைக் கொடுக்க வேண்டும். இதனால், நஞ்சுக்கொடி எளிதாகவும் விரைவாகவும் வெளியே வரும். தாய்ப்பசுவுக்கு 3-வது நாளும், கன்றுக்கு 15-வது நாளும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு மருந்தைக் கொடுக்க வேண்டும்.

10 நாள்கள் வரை சோம்பு, மஞ்சள், ஓமம், சுக்கு தலா 250 கிராமை தனித்தனியாகப் பொடி செய்து, பிறகு ஒன்றாகக் கலந்து இதிலிருந்து 50 கிராம் எடுத்து வெறும் வயிற்றில், காலை, மாலை இருவேளை மாட்டுக்குக் கொடுத்தால் கசடுகள் முழுமையாக வெளியேறும். கன்று ஈன்ற 3-வது மாதத்தில் மீண்டும் இணை சேர்க்கலாம். கோடைக்காலத்தில் கால் கானம், வாய்க் கானத்துக்கான பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டும்.

0 Comments:

Post a Comment