Search

தக்கலியை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? விலை அதிகரிக்கும் தக்காளி...

அதிக விலை கொடுத்து தக்காளியை வாங்கி சமைப்பது, பொருளாதார ரீதியாக பலருக்கு சுமையாக இருக்கும். தக்காளியை சிக்கனமாகப் பயன்படுத்தி சமைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம். 

 தினசரி சமையலில் தவறாமல் இடம்பிடிப்பது தக்காளி. இதைக் கொண்டு தக்காளி சாதம், சூப், சட்னி, குழம்பு, குருமா என விதவிதமாக சமைக்கலாம். மழைக் காலங்களில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது இயல்பானது. மற்ற காய்கறிகளை விட தக்காளியின் விலை பல மடங்கு உயரும் என்பது தான் இல்லத்தரசிகளைக் கவலைக்கு உள்ளாக்குவது.


தக்காளிக்கு இணையான புளிப்புச் சுவையைக் கொண்டது எலுமிச்சம்பழம். தக்காளி ரசத்தில் 2 அல்லது 3 தக்காளிகள் போடுவதற்கு பதிலாக, ஒரு தக்காளி மட்டும் பயன்படுத்தி ரசத்தை தயார் செய்யலாம். அடுப்பில் இருந்து இறக்கி வைத்த பின்பு, நீங்கள் விரும்பும் புளிப்பு சுவைக்கு ஏற்ப எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் கலந்தால் போதுமானது. ரசம் சுவையாக இருப்பதோடு தக்காளியின் பயன்பாடும் சிக்கனமான வகையில் இருக்கும்.



தக்காளி குழம்பு வைக்கும் போது, சின்ன வெங்காயத்தை சற்றே கூடுதலாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் 2 தக்காளிகளைக் கொண்டே குழம்பின் சுவை மாறாமல் தயாரிக்கலாம்.


தக்காளி சேர்க்காத குழம்பு வகைகளான கறிவேப்பிலை குழம்பு, வறுத்து அரைத்த குழம்பு, பருப்பு குழம்பு, வற்றல் குழம்பு போன்றவற்றை தயார் செய்வதன் மூலம் தக்காளியின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.


தக்காளிக்கு பதிலாக, மஞ்சள் பூசணிக்காயை வேகவைத்து மசித்து கலந்தால், சரியான பதத்தில் குழம்பு தயாரிக்கலாம். தக்காளிக்கு மாற்றாக புளியைப் பயன்படுத்தி புளி சட்னி, புளிக் குழம்பு, புளி சாதம் போன்றவற்றை அவ்வப்போது செய்யலாம்.



புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி ஆகியவற்றை செய்வதன் மூலம் தக்காளியின் தேவையைத் தவிர்க்கலாம். கீரை வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதன் மூலம், தக்காளியின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். மதிய உணவில் கீரை சமைப்பது சிறந்ததாக இருக்கும்.


தக்காளியின் விலை குறைவாக கிடைக்கும்போது வாங்கி, சுத்தப்படுத்தி, வேகவைத்து அரைத்து குளிர்சாதனப் பெட்டியில் உறைய வைக்கலாம். தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment