மாடித்தோட்டத்தின் நன்மைகளை தெரிந்து கொள்வது ஏன் முக்கியம்?
பசுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபுசார் விவசாயம் நம்மைவிட்டு அதிக தூரத்துக்குச் சென்றுவிட்டது. ஓடும் நீரைத் தடுத்து நிறுத்தி, அணைகட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த நாம், இன்று புழுங்கல் அரிசிக்கும் பச்சரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்துவருகிறோம். உற்பத்தியை அதிகமாக்கும் நோக்கத்தில் ரசாயன உரங்களைக் கொட்டி வேதிப்பொருள்களின் தாக்கமுள்ளவற்றைத்தான் உணவாகத்தான் சாப்பிடுகிறோம்.
இயற்கைவழி விவசாயத்தில் விளைந்த காய்கறிகளைத்தான் நாம் உண்ண வேண்டும். அதற்கு மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, இயற்கை விவசாயம் செய்வது. இரண்டாவது, இயற்கை விவசாயப் பொருட்களை நம்பத் தகுந்த விவசாயிகளிடம் நேரடியாகப் பெறுவது. இறுதியாக, மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் மூலமாக இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்வது. இவற்றில் நகரவாசிகளுக்கு இருக்கும் வாய்ப்பென்பது மாடித்தோட்டம் அமைப்பதுதான்.
பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட, அவற்றைச் சரியாக அமைப்பது எப்படி என்பது குறித்த தெளிவு இல்லை. ஆனால், இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியிலும் அள்ள அள்ளக் குறையாத காய்கறிகளை அறுவடை செய்யலாம்.
மாடித்தோட்டம் எப்படி அமைப்பது?
மாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்யவேண்டியது இடத்தைத்தான். இதற்கெனத் தனியாக ஓர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும் வழியும் உள்ளன. இதனால் மொட்டைமாடியின் தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலித்தீன் விரிப்பை விரித்து அதன்மீது வைக்கலாம். இது தவிர, பிவிசி பைப்புகள், கட்டையாலான பலகைகள் எனப் பல தீர்வுகள் இருக்கின்றன. முதலில் நாம் தேர்வு செய்யவேண்டியது வெயில்படும் படியான இடம். அதிக வெயில் படும்படியான இடங்களில் நிழல் வலைக்குடில் அமைப்பது சிறந்தது. நிழல் வலைக்குடில் அமைப்பதற்குப் பல எளிய வழிமுறைகளும் இருக்கின்றன. தொட்டிகள் அமைக்கும்போது எல்லா தொட்டிகளையும் ஒன்றாக அமைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும், அதிக நேரம் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும் பிரித்து அமைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருட்களில் செடிகளை வளர்க்கலாம். இந்தத் தொட்டிகளில் செம்மண், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, ஆகியவை கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு, மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாகத் தக்கவைத்துச் செடிகளைக் காக்கும். அளவுக்கு அதிகமாகப் போட்டால் செடிகளுக்கு வேர் அழுகல் நோய் ஏற்பட்டு பாதிப்படையும். செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்களும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும். வேப்பம் பிண்ணாக்கு பயிர்களுக்கு நோய்கள் வராமல் தடுத்து, கிருமிகளை அழிக்கும். மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்கக்கூடாது. 7 முதல் 10 நாட்களில் நாம் தயார் செய்த மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் பிறகே அதில் எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் நிச்சயம்.
எப்படி விதைப்பது?
விதைகளைத் தேர்வு செய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை. பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இடவேண்டும். தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளிலிருந்து எடுக்கலாம். கடைகளில் வாங்கி வந்தும் நடவு செய்யலாம். விதைக்கும் விதை நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு. விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவுசெய்தால் போதுமானது. அதன்பின்னர், மண்ணால் மூடிவிட வேண்டும். கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவுசெய்வது மிக அவசியம். வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும். விதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும்.
தொட்டியில் அதிகமான ஆழத்தில் நடக்கூடாது, அதேபோல வழிய வழியத் தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரைத் தெளிக்க உதவும் பூவாளியைப் பயன்படுத்துவது நல்லது. காய்கறிகளின் விதைகளைப் பயன்படுத்தினால், செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என எதுவும் கிடையாது. கீரையாக இருந்தால் பாத்தி அமைப்பது போன்று நடலாம். மேலும் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எல்லா வகை பொருள்களிலும் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதற்காகப் பைகளில் அடியுரம் கலந்த மண்ணை நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக்கூடாது.
எப்போது விதைக்க வேண்டும்?
மாடித்தோட்டத்தில் காலநிலையைக் கவனிக்க வேண்டும். அதாவது ஜூன், ஜூலை மாதங்கள் மாடித்தோட்டம் அமைக்க சரியான மாதம். கோடைக்காலத்தில் எக்காரணம் கொண்டும் விதைகள் நடவு செய்யக்கூடாது. அதன் பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நடலாம். சிலர் குளிர்கால காய்கறிகளான பீட்ரூட், முட்டைகோஸ், அன்னாசி, கேரட் ஆகியவற்றை அக்டோபர் மாதங்களில் நடவு செய்கிறார்கள்.
எப்படிப் பராமரிப்பது?
மாடித்தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்புதான். ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி நிரம்பி வழியும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றக்கூடாது. மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிரி உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப்பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்குப் பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, வேப்பெண்ணெய்க் கரைசலை நீரில் கலந்துவிடலாம். தற்போது, பெரும்பாலான மக்கள் மாடித்தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனமும் அமைத்து வருகின்றனர்.
வாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்திவிட வேண்டும். மண்ணைக் கொத்திவிட்ட பின்பும் பஞ்சகவ்யா தெளிக்கலாம். காய்கள் முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிடவேண்டும். விதைகள் தேவைப்பட்டால், காய்களை முற்றவிடலாம்.
என்னென்ன இடுபொருட்களைப் பயன்படுத்தலாம்?
செடிகள் அதிக காய்களைத் தருவதற்கு, பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும். பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின்மேல் தெளிக்க வேண்டும். ஒருமுறை விளைந்த செடிகளின் மகசூலுக்குப் பின்னர் மீண்டும் அதில் மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, மாட்டு எரு ஆகியவற்றைக் கலந்து மீண்டும் அந்த மண்ணைப் பயன்படுத்தலாம்.
என்னென்ன இடுபொருட்களைப் பயன்படுத்தலாம்?
செடிகள் அதிக காய்களைத் தருவதற்கு, பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும். பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின்மேல் தெளிக்க வேண்டும். ஒருமுறை விளைந்த செடிகளின் மகசூலுக்குப் பின்னர் மீண்டும் அதில் மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, மாட்டு எரு ஆகியவற்றைக் கலந்து மீண்டும் அந்த மண்ணைப் பயன்படுத்தலாம்.
இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
மாடித்தோட்டத்தில் விளையும் பொருட்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதுதவிர, அவசர காலங்களுக்குத் தேவையான மூலிகைகளை வளர்ப்பது இன்னும் நன்மை தரும். மாடித்தோட்டத்தினால் வீடுகள் குளிர்ச்சியடையும். அதனால் வீட்டில் ஏ.சி போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடும் குறையும். மாடித்தோட்டத்தைப் பராமரிக்கும்போது, மனம் கவலையிலிருந்து விடுபடும். நாள் முழுவதும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் மாடித்தோட்டம் ஒரு சிறந்த உளவியல் மருந்து. வீட்டில் மக்கும் குப்பைகளான பழக்கழிவுகள், காய்கறித் தோல்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை வெளியில் கொட்டத் தேவையில்லை. செடிகளுக்கு உரமாகப் போடலாம். மாடித்தோட்டத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளைப் பக்கத்து வீடுகளுக்குக் கொடுப்பதன் மூலமாக நட்பையும் சம்பாதிக்கலாம். இதுபோல இன்னும் பல நன்மைகள் மாடித்தோட்டத்தில் இருக்கின்றன.
No comments:
Post a Comment