January 2022 - Agri Info

Adding Green to your Life

January 17, 2022

Fixed Deposit: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, FD Lock-in கால அளவில் விரைவில் மாற்றம்?

January 17, 2022 0
Fixed Deposit: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, FD Lock-in கால அளவில் விரைவில் மாற்றம்?

 வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



FD Lock-In Period: இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு ஒரு திட்ட வரைவை அனுப்பியுள்ளது. 2022 பட்ஜெட்டில் அதன் விதிகள் மாற்றப்பட வேண்டும் என்று IBA கூறியுள்ளது. 

வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கி எஃப்டிகளின் (Fixed Deposit) லாக்-இன் கால அளவை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைத்து, அதன் பிறகு அதை வரி எல்லையின் கீழ் கொண்டுவந்தால் மட்டுமே, மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது எஃப்டிகள் கவர்ச்சிகரமானதாக மாறும் என்றும், அப்போதுதான் முதலீட்டாளர்கள் இதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள் என்றும் ஐபிஏ தெரிவித்துள்ளது. 

வரி சேமிப்பு FD-களுக்கு மூன்று ஆண்டுகள் லாக்-இன் காலம் தேவை 

வரிச் சேமிப்பு (Tax Saving) வங்கி FD-க்களும் மூன்று வருடங்கள் லாக்-இன் கால அளவைக் கொண்டிருக்க வேண்டும் என்று IBA கோருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் வங்கிகளில் இருப்பு வைக்கும் தொகையின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் இதை மீண்டும் அதிகரிக்க முடியும். 

January 15, 2022

செலவு, சேமிப்பு, முதலீடு... உங்கள் நிதிப் பாதை சரியா..?

January 15, 2022 0
செலவு, சேமிப்பு, முதலீடு... உங்கள் நிதிப் பாதை சரியா..?

 சேமிப்பு


நாம் வாங்கும் சம்பளம் மற்றும் வருமானத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி யை எதிர்காலத் தேவைகளுக் காகச் சேமிப்பது அவசியம். ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தில் 10% முதல் 30% வரை சேமிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை எனக் கூறப் படுகிறது.


நம்மிடையே பலதரப்பட்ட மக்கள் பல்வேறு விதமாக அவர்களின் சம்பாத்தியத்தை செலவு செய்கிறார்கள்; சேமிக்கிறார்கள்; முதலீடு செய்கிறார்கள். இவர்களை ஐந்து விதமாகப் பிரிக்கலாம். இவர்களில் நீங்கள் எந்தப் பிரிவில் வருகிறீர்கள், நீங்கள் செலவு செய்யும் விதம், சேமிக்கும் விதம், முதலீடு செய்யும் விதம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம்.

1. பணம் எதுவும் மிச்சம் இருக் காது: வருமானம்- செலவு = 0

நம்மில் மிக அதிகம் பேர் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தை அந்த மாத இறுதிக்குள் செலவழிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் செலவுச் சூத்திரமானது வருமானம் - செலவு = 0 என்றுதான் இருக்கிறது.

இவர்கள் மாத ஆரம்பத்தில் ‘டாம் டூம்’ எனச் செலவு செய்துவிட்டு, மாதக் கடைசியில் ரசம், பழைய சாதம் எனச் செலவைக் குறைத்து விடுவார்கள்.

ஆனால், இவர்கள் கடன் வாங்க மாட்டார்கள். அதே நேரத்தில், எதிர்காலத்துக்கு பணத்தைச் சேமிக்க மாட்டார்கள். இது மாதிரியானவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமித்து வந்தால்தான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் சென்று பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி, சொந்த வீடு போன்றவற்றை அடைய முடியும்.




2. கட்டுப்பாடு இல்லாத செலவு: வருமானம் - செலவு = கடன்

சிலர் சம்பாத்தியத்தைக் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் செலவு செய்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் செலவுச் சூத்திரம் வருமானம் - செலவு = கடன் என்று இருக்கும். அதாவது, வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்து விட்டு, அதைச் சமாளிக்க கிரெடிட் கார்டு் கடன், தனிநபர் கடன், தங்க நகைக் கடன் வாங்குபவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் தங்க நகை இவர்களின் கழுத்தில் இருப்பதை விட வங்கியில் அடமானமாக லாக்கரில் அதிக நாள்கள் இருக்கும். இவர்கள் செலவைக் கட்டுப்படுத்தவில்லை எனில், எப்போதும் கடனாளியாகவே இருப்பார்கள்.



3. பண விஷயத்தில் பொறுப்பானவர்கள்: வருமானம் - செலவு = சேமிப்பு

பணத்தைச் செலவழிப்பதில் சிலர் மிகவும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். இவர் களின் மாத வருமானத்தில் செலவு போக உள்ள தொகையைச் சேமிப்பார்கள்.

இவர்களின் செலவுச் சூத்திரம் வருமானம் - செலவு = சேமிப்பு என்று இருக்கும். இவர்கள் தங்கள் பணத்தைப் பெரும்பாலும் பீரோவில் மற்றும் வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதால், அந்தப் பணம் பெரிதாக வளராது.

இவர்களின் பணம், பணவீக்கத்தைத் தாண்டி பெருகாததால், இவர்களின் வாழ்க்கைத் தரமும் பெரிதாக மேம்பட்டி ருக்காது. மிக அதிகமாக சம்பாதிப்பவர்களின் வாழ்க்கைத்தரம்தான் மேம்பட்டதாக இருக்கும்.


4. பண விஷயத்தில் ஒழுங்கைப் பின்பற்றுபவர்கள்: வருமானம் - சேமிப்பு = செலவு

சிலர் தங்களின் சம்பளம் அல்லது சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கு எனத் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள பணத்தை மட்டும் திட்டமிட்டுச் செலவு செய்வார்கள். பணத்தைச் செலவு செய்வதில் நல்ல ஒழுங்கைப் பின்பற்றுபவர்கள் என்று இவர்களைக் குறிப்பிடலாம்.

இவர்களின் செலவுச் சூத்திரம், வருமானம் - சேமிப்பு = செலவு என்பதாக இருக்கும்.

பண விஷயத்தில் ஒழுங்கைப் பின்பற்றுபவர்கள் சம்பளம், போனஸ் என எந்த வரவு வந்தாலும், அதில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது தொகையைத் தனியே வைத்துவிட்டு மீதியைத்தான் செலவு செய்வார்கள். இதனால், இவர்களிடம் எப்போதும் பணம் தாராளமாகப் புழங்கிக் கொண்டிருக்கும்.

அவசரச் செலவுகளைக் கண்டு கலங்க மாட்டார்கள். நீண்ட காலத்தில் இவர்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் அதைக் கொண்டு தங்கநகை, நிலம் போன்றவற்றை வாங்கி வருவார்கள். இப்படி சேர்க்கும் தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடுபவர்களும் இருக்கிறார்கள்.

5. மிகச் சிறந்த புத்திசாலிகள்: வருமானம் - முதலீடு = செலவு

வெகு சிலர், சம்பளம் வந்தவுடன் அதிலிருந்தே குறிப்பிட்டத் தொகையை மாதம்தோறும் வங்கி, தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டம் (ஆர்.டி) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் சீரான முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்.ஐ.பி) போட்டு வருகிறார்கள்.

இவர்களின் செலவுச் சூத்திரம், வருமானம் - முதலீடு = செலவு என்பதாக இருக்கும். இப்படி பணத்தை நேரடியாக முதலீட்டுக்குக் கொண்டு செல்வதால், நீண்ட காலத்தில் அதிக வருமானம் மற்றும் அதிக செல்வம் சேரும்.

நீங்கள் எந்த வகை..?

இந்த ஐந்து வகையில் நீங்கள் எந்தப் பிரிவுக்குள் வருகிறீர்கள் என்பதைப் பாருங்கள். இந்த நான்கு பிரிவு களில், கடைசி இரு பிரிவுக்குள் இருந்தால், நீங்கள் நிச்சயம் பாராட்டுக்குரிய மனிதர்தான்.

நீங்கள் நான்காவது பிரிவில் இருப்பவர் எனில், ஐந்தாவது பிரிவுக்கு வர முயற்சி செய்யவும். தேவைப்பட்டால் நிதி ஆலோச கரின் உதவியை நாட நீங்கள் தயங்கக் கூடாது.

நீங்கள் முதல் மூன்று பிரிவுக்குள் இருந்தால், கடைசி இரு பிரிவுக்குள் வர முயற்சி செய்வது அவசியம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைவரும் ஐந்தாவது பிரிவினரைப்போல, முதலீடு செய்ய வேண்டும்; அதன்பிறகே செலவு செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை!


உங்கள் உணவில் கெட்ட கொழுப்புகளை தவிர்க்க வேண்டுமா?

January 15, 2022 0
உங்கள் உணவில்   கெட்ட  கொழுப்புகளை தவிர்க்க வேண்டுமா?

 திக கொழுப்பு ஆரோக்கியத்தின் எதிரி என்பதை எல்லோருமே அறிவோம். உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இதுதான் காரணம். ``உடற்பயிற்சியும் உடலுழைப்பும் இல்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்றவை தவிர சில பழக்கவழக்கங்களும்கூட கொழுப்பை அதிகரிக்கலாம். அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை சாத்தியமாக்கலாம்” என்கிறார் பொது மருத்துவர் சாருமதி. கொழுப்பைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பட்டியலிடுகிறார் அவர்



பசித்த பிறகு சாப்பிடுங்கள்!


நாம் உண்ணும் உணவு செரிமானமாக இரண்டு முதல் நான்கு மணிநேரம்வரை ஆகலாம். அது முழுமையாக செரிமானமாகாதநிலையில் டீ, காபி போன்றவற்றைக் குடிப்பதையும், எண்ணெயில் பொரித்த வடை, போண்டா போன்றவற்றைச்  சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். எந்த வேளையாக இருந்தாலும், பசித்த பிறகு சாப்பிடுவதே நல்லது. சாப்பிட்டவுடன் இனிப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கிய உணவுகள்!

வீடு திரும்பியதும் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படும். பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றை வீட்டில்வைத்திருந்தால் அவற்றைச் சாப்பிடலாம். வீட்டில் நம் பார்வையில் படும்படி ஆரோக்கியமான தின்பண்டங்களை வைத்திருப்பது வெளி உணவுகளைத் தவிர்க்க உதவும்.

பயணப் பாதையை மாற்றுங்கள்!

அலுவலகம் செல்லும் வழியில் அல்லது வீடு திரும்பும் வழியிலிருக்கும் கடைகளில் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அப்போது நொறுக்குத்தீனிகள், ஆரோக்கியமில்லாத உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவார்கள். உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும், அவற்றைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். எனவே, அந்தப் பாதையைத் தவிர்க்க வேண்டும்.



துரித உணவு தவிர்ப்போம்!

இன்றைக்கு பீட்சா, பர்கர், ஃபிரைடு ரைஸ் என சத்துகளில்லாத, கொழுப்பு நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. துரித உணவுகளால் ஏற்படும் அபாயத்தை, குடும்பத்தினரோடு பேச வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது விழித்துக்கொண்டால், மற்றவர்களும் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வார்கள்.

நடைப்பயிற்சியை நண்பனாக்குவோம்!




`உடற்பயிற்சி செய்ய நேரமில்லை’ என்பது  ஏற்றுக்கொள்ள முடியாத காரணம். நேரமில்லாதவர்கள் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ளலாம். பக்கத்திலிருக்கும் கடைகள், இடங்களுக்கு நடந்து செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். வெளியூர் பயணங்களில், பார்க்க வேண்டிய இடங்களை நடந்தே சுற்றிப் பார்க்கலாம். முடிந்தவரை வாகனப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

வேண்டாம்... கூகுள் சமையல்!

சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் உணவு செய்முறைகள் வீடியோக்களாகப்  பதிவிடப்படுகின்றன. ஆரோக்கியத்தை விட்டுவிட்டு, சுவையை மட்டுமே மையப்படுத்தும் சமையல் வீடியோக்களைப் பார்ப்பதையும் அந்த உணவுகளைச் சமைத்து உண்பதையும் தவிர்க்கலாம்.

வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம்!

உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் பல்வேறு ரசாயனங்களைச் சேர்ப்பார்கள். அவை மிக எளிதாகக் கொழுப்பை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, வெளியிடங்களில், சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், தேவையற்ற தொற்றுகளையும் குடல் உபாதைகளையும் தவிர்க்கலாம்.

தேவைக்கேற்ப வாங்குங்கள்!


சாக்லேட், ரொட்டி, குக்கீஸ், இனிப்புகள் மற்றும் நொறுக்குத்தீனிகளை வாங்கி வீட்டில் சேர்த்துவைப்பதைத் தவிர்க்கவும். நொறுக்குத்தீனிகள் இருப்பிலிருந்தால் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.

ஆரோக்கிய உணவு அறிவோம்!

நோய் தாக்கும் தன்மையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் உணவுப் பட்டியலை தயாரிக்க வேண்டும். உதாரணமாகச் சில உணவுகள்...

• அவகேடோ, வால்நட், ஆளி விதைகள் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்.

• பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர், புரொக்கோலி.

• தயிர், மோர் போன்ற ‘நல்ல’ பாக்டீரியா நிறைந்த புரோபயாட்டிக் (Probiotic) உணவுகள்.

• பாலாடைக்கட்டி, யோகர்ட், வேகவைத்த முட்டை போன்ற புரத உணவுகள்.

ஒவ்வாமை தரும் உணவுகளை ஒதுக்குங்கள்!

பால் பொருள்களிலிருக்கும் லாக்டோஸுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்ப்பினால் உண்டாகும் அலர்ஜிக்கு, `பால் ஒவ்வாமை’ (Lactose Intolerance) என்று பெயர். பால் ஒவ்வாமை உள்ளவர்கள் சிறுதானியங்களான சாமை, தினை, கேழ்வரகு, தேங்காய், முட்டை, சோயா, ராஜ்மா, கொண்டைக்கடலை, கீரை மற்றும் அசைவ உணவுகளின் மூலம் பாலிலுள்ள அதே சத்துகளைப் பெறலாம்.

கோதுமை, பார்லி, கம்பு போன்றவற்றிலுள்ள குளூட்டன் என்னும் புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்கள் பீன்ஸ், நிலக்கடலை, நட்ஸ், இறைச்சி, சோயா, கடல்மீன் போன்ற குளூட்டன் புரதம் இல்லாத (Gluten Free) உணவுகளை உட்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கான பல் பராமரிப்பு - 10 கட்டளைகள்

January 15, 2022 0
சர்க்கரை நோயாளிகளுக்கான பல் பராமரிப்பு - 10 கட்டளைகள்

 டலில் அதிக வேலைப்பளுவைச் சுமக்கும் உறுப்புகளில் ஒன்று பல். பற்களின் ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், ‘சர்க்கரை நோயாளிகள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.



``சர்க்கரைநோய் வந்தால் கால்கள் பாதிக்கப்படும் என்பது பலருக்குத் தெரியும். ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு பற்களையும் பாதிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை’’ என்கிறார் பல் மருத்துவர் கல்பனா. சர்க்கரை நோயாளிகளுக்கான பல் ஆரோக்கியம் குறித்து விளக்குகிறார் அவர்.

``சர்க்கரை நோயாளிகளுக்குப் பற்களில் பிரச்னை ஏற்பட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருந்தால்தான் சிகிச்சையளிக்க முடியும். இவர்களுக்கு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால், ரத்தச் சர்க்கரை அளவை சீராகவைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோயாளிகள் பற்களைப் பாதுகாக்க 10 விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

01. தினமும் இரண்டு முறை பல் துலக்குவது எல்லோருக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

02. மிருதுவான நார்ப்பகுதி (Bristle) உள்ள பிரஷ்ஷைப் பயன்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரஷ்ஷைக் கட்டாயம் மாற்ற வேண்டும்.

03. சர்க்கரை நோயாளிகள் ஃப்ளோரைடு கலந்த  டூத்பேஸ்ட்டால் பல்துலக்க வேண்டும். 

04. பல் இடுக்குகளிலுள்ள உணவுப் பொருள்களை நீக்க, `டென்டல் ஃப்ளாஸ்’ (Dental Floss) எனப்படும் ஒருவித நூலைப் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

05. வாய் சுகாதாரத்தில் குறைபாடு ஏற்பட்டால், பாக்டீரியா அதிகரிக்கும். எனவே, எந்த உணவைச் சாப்பிட்டாலும் சுத்தமான நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். அசைவ உணவுகளை உண்டதும் பல்துலக்க வேண்டும்.

06. புகையிலை, மதுப்பழக்கம் போன்றவை ஈறுகளில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் புகைப்பழக்கம் இருந்தால், பற்கள், ஈறுகளில் தீவிர பாதிப்புகள் உண்டாகும். பற்களை இழக்கவும் நேரிடலாம். எனவே, அந்தப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

07. சர்க்கரை நோயாளிகளுக்கு உமிழ்நீர் சுரக்கும் அளவு குறைவதால், அடிக்கடி வாய் வறண்டுவிடும். ‘சுகர்லெஸ் சூயிங்கம்’ மெல்லுவது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்.

08. பல்செட் பயன்படுத்துபவர்கள் தினமும் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்னர் பல்செட்டைக் கழற்றி வைத்துவிட வேண்டும்.

09. ஈறுகள் கீழே இறங்கி, பல் ஆடும் நிலையிலிருந்தால், மயக்க ஊசி போட்டு ஈறுகளைச் சரிசெய்யும் ‘டீப் கிளீனிங்’ (Deep Cleaning) சிகிச்சையைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஈறுகளிலுள்ள அழுக்குகள் எலும்பை அரித்துவிடும். ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டால், மருத்துவரை அணுகி பாதிப்பைக் கண்டறிய வேண்டும்.

10. ஈறுகள் அதிகம் சிவந்துபோயிருந்தாலோ, வீக்கம், ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


மாதம் 50,000 ரூபாய்... வீட்டுத்தோட்டத்திலேயே மண்புழு உரம், பஞ்சகவ்யா விற்கலாம்!

January 15, 2022 0
மாதம் 50,000 ரூபாய்... வீட்டுத்தோட்டத்திலேயே மண்புழு உரம், பஞ்சகவ்யா விற்கலாம்!



வீட்டுத்தோட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சித்ராதேவி. வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளார். ஒரு காலைப் பொழுதில் அவருடைய வீட்டில் சந்தித்தோம். ‘‘திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புத்தூர்தான் என்னோட சொந்த ஊர். விவசாய குடும்பம். எங்க நிலம் வானம் பார்த்த பூமியா இருந்ததால விவசாயம் செய்ய முடியாம, கூலி வேலைக்கும் கொத்தனார் வேலைக்கும் போக ஆரம்பிச்சாங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ரொம்ப ஆர்வம்.

வீட்டுக்குப் பக்கத்துல சின்னச் சின்ன செடிகளை நட்டு வளர்ப்பேன். அது வளர்றதைத் தினமும் பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கும். என்கூடப் பிறந்தது 5 அக்கா தங்கச்சிகள். நான்தான் முதல் பட்டதாரி. கணினி தொடர்பான முதுகலைப் படிப்பை முடிச்சுட்டு, 2 வருஷம் ஒரு நிறுவனத்துல வேலை பார்த்தேன். ஆனாலும், விவசாயம் செய்யணும்ங்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்ல. இந்நிலையில எனக்குத் திருமணம் ஆச்சு.

என்னுடைய கணவர் துபாயில இருக்க ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்திட்டு இருந்தார். திருமணம் முடிஞ்சு, அவர் மறுபடியும் வேலைக்காகத் துபாய் போறப்ப நானும் அவர்கூடப் போனேன்.

அந்த நாட்டுல பாலைவனத்துல விவசாயம் பண்றதைப் பார்க்க ஆச்சர்யமா இருந்தது. பக்கத்துல இருந்த ஷார்ஜா, சவுதி அரேபியா நாடுகளுக்கும் போய் அங்க எப்படி விவசாயம் செய்றாங்கன்னு பார்த்தேன். பாலைவனத்தில, குறைஞ்ச மழை. அதுலயே விவசாயம் செய்யும் போது நம்ம நாட்டுல எவ்வளவு வளங்கள், வழிகள் இருக்கு. நம்ம ஊர்ல ஏன் விவசாயம் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. உடனே கணவர்கிட்ட பேசுனேன்.

அவர் வேலையைவிடச் சொன்னேன். அதை விட்டுட்டு இந்தியா வந்துட்டோம். எங்க முடிவுக்கு வீட்டுல பலத்த எதிர்ப்பு. எல்லோர்கிட்டயும் திட்டுகளும் ஏச்சுகளும் வாங்குனோம். ஆனாலும், என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

அவர் இங்கேயே வேலை பார்க்க ஆரம்பிக்க, நான் நாட்டு விதைகளைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பிச்சேன். இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகளைக் கத்துகிட்டேன். பல ஊர்களுக்குப் போய் இயற்கை வழியில் விவசாயம் செய்ற விவசாயிகளைச் சந்திச்சு பேசுனேன். நம்மாழ்வார் ஐயா கருத்துகள், இயற்கை தொடர்பான புத்தகங் களையும் படிக்க ஆரம்பிச்சேன். ஓரளவு இயற்கை விவசாயம் தொடர்பா தெரிஞ்சுகிட்ட பிறகு, 2016-ம் வருஷம் என்னோட வீட்டு மொட்டை மாடியில மாடித்தோட்டம் அமைக்க ஆரம்பிச்சேன். நாட்டுக் காய்கறி, கீரை விதை களைத்தான் பயன்படுத்துனேன். விதை முளைச்சு, செழிப்பா வளர்றதைப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமா இருந்தது. முதல் காய்களை அறுவடை செய்யும்போது ஆர்வமும் மகிழ்ச்சியும் அதிகமாச்சு’’ என்றவர் தனது மாடித்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.



‘‘மண்புழு உரம், மீன் அமிலம் தயாரிக்கப் பயிற்சி எடுத்து அதை என்னுடைய மாடித் தோட்டத்துக்கு மட்டும் பயன்படுத்திக்கிட்டு வந்தேன். அறுவடை செய்யுற காய்கறிகளை என்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள்ல பதிவு பண்ணிகிட்டு வந்தேன். அதைப் பார்த்த சிலபேரு அவங்க தோட்டத்துக்கு இயற்கை உரங்கள் வேண்டும், மாடித்தோட்டம் அமைக்கணும்னு கேட்டாங்க. அப்படிக் கேட்டவங்களுக்காக இயற்கை உரங்களைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். அதுக்காகச் சின்னதா பண்ணை அமைச்சு மண்புழு உரம், மீன் அமிலம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், 3ஜி கரைசல், கழிவுச் சிதைவு உரம்னு இயற்கை இடுபொருள்களைத் தயார் பண்ணி கேக்குறவங்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன்.

சின்ன பண்ணையா இருக்குறதால, அதிக அளவு தயாரிக்க இடவசதி இல்ல. அதனால மணப்பாறையைச் சுற்றியுள்ள கிராமங்கள்ல இருக்க ஆதரவற்ற பெண்களுக்கு உரம் தயாரிக்கப் பயிற்சி கொடுத்து, அவங்க தயாரிச்சுக் கொடுக்குற உரங்களை நானே வாங்கி விற்பனை செய்றேன். இப்ப கர்நாடகா, ஆந்திரானு பக்கத்து மாநிலங்கள்ல இருந்தும் எங்ககிட்ட உரம் வாங்குறாங்க. அவர்களுக்குக் கூரியர் மூலமாக அனுப்புறோம்.

இயற்கையான முறையில நாட்டு விதைகளை மட்டுமே பயன்படுத்தி மாடித் தோட்டமும் அமைச்சு கொடுக்குறேன். இதுவரைக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாடித்தோட்டம் அமைச்சு கொடுத்திருக்கேன். சுற்றியுள்ள கிராமங்கள்ல இருக்க மாணவர் களுக்கு இயற்கை விவசாயம் பற்றி வகுப்புகளையும் நடத்திக்கிட்டு வர்றேன். அவர்களுக்கு நாட்டுக் காய்கறி விதைகளை இலவசமாக் கொடுத்து, செடி, கொடி, மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்துறேன். இது மூலமா இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறை நிச்சயமா மீட்டெடுக்க முடியும்னு நம்புறேன். என்னோட பசங்க மூலமா விதைப்பந்துகள், விதைப் பென்சில் தயாரிச்சு கொடுக்குறோம்’’ என்றவர் நிறைவாக,

‘‘மண்புழு உரம் கிலோ 12 ரூபாய், பஞ்சகவ்யா லிட்டர் 100 ரூபாய், மீன் அமிலம் லிட்டர் 200 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். அது மூலமா செலவு போக மாசம் 50,000 ரூபாய் லாபம் கிடைக்குது. லாப பணத்துல ஒவ்வொரு மாசமும் 8,000 ரூபாய் எடுத்து பழ மரக்கன்றுகளை வாங்கி இலவசமாக் கொடுப்பேன். பறவைகளோட உணவுக்காகத்தான் பழ மரக்கன்றுகளைக் கொடுக்கிறேன். இயற்கையை நான் நேசிச்சேன். அந்த இயற்கை எனக்கு இப்ப மனசுக்குத் திருப்தியான வருமானத்தைக் கொடுத்துட்டு இருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, சித்ராதேவி,

செல்போன்: 81222 37668.

January 14, 2022

பைக்கை முறையாகப் பராமரிப்பது எப்படி?

January 14, 2022 0
பைக்கை முறையாகப் பராமரிப்பது எப்படி?

 


மழைக் காலமோ, வெயில் காலமோ - நம்முடைய பைக்கை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். வெயில் காலம் என்றால் அதிகம் வெயில் படாத இடத்தில் நிறுத்தி வைப்பது, பைக் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்வது என பராமரிப்பு முறைகள் இருக்கும். இதுவே, மழைக்காலம் என்றால் மழை நீரில் அதிகம் நனையாமல் வைத்துக் கொள்வது, தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களில் நிறுத்தி வைப்பது என அதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், முறையான வழிமுறைகள் எல்லோருக்கும் தெரியுமா என்றால் கேள்விக்குறி தான். இப்படிப் பல கேள்விகளுக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் சிவசங்கர் பதில் கூறினார்.

மழைக் காலத்தில் எந்தெந்த விதங்களில் பைக் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன, அதனை எப்படித் தடுப்பது?

மழைக் காலங்களில் நமது பைக்கில் தண்ணீர் புகுவதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். நாம் சரியாகப் பார்க்கவில்லை; அல்லது சரியாக ஓட்டவில்லை என்றால் இன்ஜினில்கூட தண்ணீர் புகுந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு வகைகளில் நம்முடைய பைக்கில் தண்ணீர் இறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் நாம் நிறுத்தி வைத்திருக்கும்போது மழை பெய்து நம்முடைய பைக்கில் தண்ணீர் புகுவது, இரண்டாவது மழையின்போது தேங்கியிருக்கும் நீரில் நாம் பைக்கை ஓட்டி, அதன் மூலம் தண்ணீர் பைக்கின் உள்ளே செல்வது.

அதிக மழைக்காலம் என்றால், நம்முடைய பைக்கைச் சமதளத்தில் அல்லது கொஞ்சம் மேடான பகுதியில் நிறுத்தி வைப்பது மிகவும் சிறந்தது. பள்ளமான இடத்தில் நிறுத்தி வைக்கும்போது தண்ணீரின் மட்டம் உயர்ந்தால் அது சைலன்ஸர் வழியே பைக்கின் உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமதளத்தில் நிறுத்துவது நல்லது. அடுத்து, மழைநீரில் நனையாமல் பைக் கவர் கொண்டு பைக்கை மூடி வைப்பது சிறந்தது. இதன் மூலமும் ஏதாவது ஒரு வழியில் மழை நீர் பைக்கில் புகுவதைத் தடுக்க முடியும்.

இரண்டாவது நாம் பைக்கை ஓட்டும்போது, தண்ணீர் நிறைந்திருக்கும் பகுதியைத் தவிர்த்து விடுவது நல்லது. ஒருவேளை அந்தப் பாதையில் சென்றே ஆக வேண்டும் என்றாலும், ஃபுட்ரெஸ்ட் மற்றும் சைலன்ஸரின் கீழே தண்ணீர் இருக்கிறது, பைக்கின் டயர் மட்டும் கொஞ்சம் மூழ்கும் அளவுதான் தண்ணீர் இருக்கிறது என்றால் மட்டும், குறைவான வேகத்தில் அந்தப் பாதையைக் கடக்கலாம். சைலன்ஸர் அல்லது ஃபுட்ரெஸ்ட் அளவு தண்ணீர் இருக்கிறதென்றால் கண்டிப்பாக அந்தப் பாதையில் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.

சரி, நாம் பாதுகாப்பாக இருந்தும் பைக்கில் தண்ணீர் சென்றதற்கான அறிகுறி இருக்கிறதென்றால், அதாவது சைலன்ஸரின் உள்ளே தண்ணீர் சென்று விட்டதென்று தெரிந்தால், பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சி கூடச் செய்ய வேண்டாம். ஸ்டார்ட் மட்டுமல்ல, பைக்கின் சாவியைக்கூட திருப்ப முயற்சி செய்ய வேண்டாம். நாம் சாவியைத் திருப்ப முயற்சி செய்தால் பைக்கின் பேட்டரியில் இருந்து கரன்ட் பாஸாகி ஷார்ட் சர்க்யூட் ஆகி பைக்கின் எலெக்ட்ரிக்கல் பாகங்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கிக் அடிக்கவே அடிக்காதீர்கள். தண்ணீரில் மூழ்கிய பைக்கை கிக் அடிக்க அல்லது ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தால் இன்ஜினுக்குள் தண்ணீர் செல்வதற்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொடுத்தது போல் ஆகிவிடும். பின்னர், மொத்த இன்ஜினையும் பிரித்துத்தான் பழுது பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

பைக்கை சென்டர் ஸ்டாண்டு போட்டு நிறுத்தியிருந்தால், சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தலாம். தண்ணீர் கொஞ்சம் வடிவதற்கான வழியாக அது இருக்கும். அதன் பிறகு அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்புக்கு போன் செய்து கூறினால், நம்முடைய பைக்கை டோ செய்து கொண்டு சென்று முறையாக சர்வீஸ் செய்து விடுவார்கள். அதிக செலவில்லாமல் முடிந்துவிடும்.



பைக் ஓட்டும்போது, என்னவிதமான பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பது?

பாதுகாப்பு என்று வரும்போது ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் என்று துவங்கி, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம். அருகில்தானே செல்கிறோம் என்று அலட்சியமாக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்யாதீர்கள். 20 கிமீ வேகத்தில் சென்று தலையில் பலத்த காயம் அடைந்தவர்கள் கூட இருக்கிறார்கள். எனவே, பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

எந்தக் காலமாக இருந்தாலும், பைக்கை குறிப்பிட்ட இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். காரணம், அப்போதுதான் பிரேக், ஆக்ஸிலரேட்டர், க்ளட்ச் மற்றும் செயின் ஆகியவற்றுக்குத் தேவையான லூப்ரிகேஷன் கிடைக்கும்.

நம் பைக்குக்கும் ரோடுக்கும் இடையே பாலமாக இருப்பது டயர் மட்டும்தான். ரோடு கிரிப் இருந்தால்தான் நாம் பிரேக் பிடித்தால்கூட சரியான இடைவெளியில் வண்டி நிற்கும். பிரேக் பிடிக்கும்போது ஸ்கிட் ஆகாமல் இருப்போம். ரோடு கிரிப்புக்கு டயர் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டியது அவசியம். நாம் அதிகம் பயணம் செய்யச் செய்ய டயர்கள் தேய்மானம் ஆகிக் கொண்டே வரும். நமது டயரில் டயர் வியர் இன்டிகேட்டர் என்று ஒன்று இருக்கும். அதற்குக் கீழே டயர் தேய்ந்துவிட்டது என்றால், நாம் டயரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

நாம் பைக்கை சர்வீஸ் விடும்போது, நம்முடைய பைக்கின் டயர் கண்டிஷன் பார்த்து, மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று அவர்களே கூறி விடுவார்கள். . மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது 3,000 கிமீ ஒரு முறையோ பைக்கை சர்வீஸ் செய்வது நல்லது.

மழைக்காலங்களில் பிரேக்கிங் குறித்த டிப்ஸ்?

பிரேக் பிடிப்பதைப் பொறுத்தவரை, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டு பிரேக்குகளையும் ஒருசேரப் பிடிப்பதே சிறந்தது. நாம் சில நேரங்களில் டிஸ்க் பிரேக் இருக்கிறது என்று முன்பக்க அல்லது பின்பக்க பிரேக்கை மட்டும் பிடிப்போம். அது ஒரு தவறான அணுகுமுறை. இரு பிரேக்குகளையும் ஒன்றாகப் பிடிக்கும் போது, குறைந்த தூரத்திலேயே பைக் நின்றுவிடும். மேலும், இரு பிரேக்கையும் பிடிக்கும்போது நமது பைக் ஸ்கிட் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. நாம் ஒரு பக்க பிரேக்கை மட்டும் பிடிக்கும்போது, மறுபக்கச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். அது நம் பைக் ஸ்கிட் ஆக வழிவகுக்கும்.

மழை நேரத்தில் தண்ணீர் இருக்கும் ரோட்டில் செல்லும்போது ஸ்கிட் ஆவதற்கான வாய்ப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே, பிரேக் பிடிக்கும்போது ஆக்ஸிலரேட்டரில் நம் கவனம் இருக்கக்கூடாது. உடனடியாக பிரேக் பிடிக்க வேண்டும். மேலும், பிரேக் பிடிப்பதற்கு முன்னால் க்ளட்ச்சைப் பிடிக்காமல் இருப்பது சிறந்தது. பிரேக்கை முதலில் பிடித்து வேகம் குறைந்தவுடன் க்ளட்ச்சைப் பிடிப்பதுதான் சரியான வழிமுறை. மேலும், மழைக்காலங்களில் குறைவான வேகத்தில் சென்றால்தான், பிரேக் பிடிக்கும்போது பைக் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.


அதிக மைலேஜ் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் பைக்கைத் தேவையில்லாத நேரங்களில் ஆன்/ஆஃப் செய்வது, அல்லது ஆன் செய்து ஐடிலிங்கில் வைத்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம். சிக்னலில் நின்றிருக்கும்போதுகூட பைக்கை ஆஃப் செய்து வைத்திருக்கலாம். முக்கியமான ஒரு விஷயம், பைக்கை முறையாக சர்வீஸ் செய்தால் கொஞ்சம் அதிக மைலேஜ் கிடைக்கும். பைக்கின் சக்கரங்கள் எந்த ஒரு தடங்களும் இன்றி ஃப்ரீயாக ரொட்டேட் ஆக வேண்டும். செயின் ப்ளே சரியாக இருக்க வேண்டும். லூஸாக இருந்தாலும் மைலேஜ் குறையும். ஏர் ஃபில்டர் சுத்தமாக இருக்க வேண்டும். ஸ்பார்க் ப்ளக் சரியாக இயங்க வேண்டும். இவற்றையெல்லாம் நம்மால் நேரம் ஒதுக்கிப் பார்க்க முடியாது. மேலும், இதையெல்லாம் சரிபார்க்க நாமும் பழகியிருக்க மாட்டோம். எனவேதான் சர்வீஸ் சென்டரில் அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும். அவர்கள் இதனையெல்லாம் சரிபார்த்து விடுவார்கள். இதன் மூலம் 4 அல்லது 5 கிமீ மைலேஜ் நாம் வைத்திருக்கும் பைக்குக்கு ஏற்ப நமக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.

ஃபிளாட் வாங்கப் போகிறீர்களா? இதை எல்லாம் கொஞ்சம் கவனிங்க!

January 14, 2022 0
ஃபிளாட் வாங்கப் போகிறீர்களா? இதை எல்லாம் கொஞ்சம் கவனிங்க!

 


ரியல் எஸ்டேட்

கடந்த எட்டு வருடங்களாக கோமாவில் கிடந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது எழுந்து சோம்பல் முறிக்கிறது. முக்கியமாக, கோவிட் கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதித்ததில் கட்டுமான வேலைகள் ஸ்தம்பித்து சப்ளை பாதிக்கப்பட்டது. வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, ஆள்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் வீடு மற்றும் மனை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து டிமாண்டும் பாதிப்படைந்தது.

ரியல் எஸ்டேட் உயிர்த்தெழும் காரணங்கள்...

ஆனால், பெரிய அளவில் தடுப்பூசி மக்களைச் சென்றடைந்ததாலும், கோவிட் தாக்கம் குறைந்ததாலும் ரியல் எஸ்டேட் துறை தற்போது உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளது. புராப்டைகர் டாட்காம் கூற்றின்படி, கடந்த ஐந்து மாதங்களாக வீடு விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கடந்த இரண்டு வருடங்களாக வீடு வாங்கும் எண்ணத்தை ஒத்திப் போட்டவர்கள் தற்போது மும்முரம் காட்டி வருகின்றனர்.

2. வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை பலருக்கும், “வசதியான சொந்த வீடு வேண்டும்” என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

3. 2020 ஜனவரியில் 8% என்ற அளவில் இருந்த வீட்டுக் கடன் வட்டி, தற்போது 6.65% என்ற அளவில் குறைந்துள்ளது. அரசும் பல்வேறு வகைகளில் சாமான்ய மக்களை வீடு வாங்க ஊக்குவித்து வருகிறது.

4. பணம் என்ற ஆக்ஸிஜன் கிடைக்காமல் தத்தளித்து வந்த பில்டர்கள், லாபம் குறைந்தாலும் பரவாயில்லை என்று வீடுகளின் விலையை ஓரளவுக்குக் குறைத்து வருகின்றனர்.

5. சிமென்ட், ஸ்டீல் இவற்றின் விலை கடந்த ஆறு மாதங்களில் 20% வரை உயர்ந்திருப்பதால், இனி கட்டப்போகும் வீடுகள் விலை உயரலாம் என்ற முன்ஜாக்கிரதை உணர்வும் மக்களிடையே எழுந்துள்ளது.

6. கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து சிறுநகரங் களில் இருந்து மாநகரங்கள் நோக்கிவரும் சிறு குடும்பங்கள், வீடு வாங்குவதை முதலீடாகப் பார்க்காமல், அடிப்படைத் தேவை என்று உணர்கின்றன என ரியல் எஸ்டேட் துறை உயிர்த்தெழுவதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.


ஃபிளாட் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்...


ஃபிளாட் வாங்க விரும்புபவர்கள் முதலில் பில்டரின் தரம் பற்றி நன்கு அறிய வேண்டும். பில்டரின் மற்ற புராஜெக்டுகள் எவை, அங்கு கட்டுமானத்தின் தரம் எப்படி உள்ளது, குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்கிறாரா என்பது போன்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். ஒருவேளை, ஃபிளாட் கட்டப்படாமல் போனால், ரீஃபண்ட் குறித்த விவரங்கள் என்ன என்று முழுமையாகக் கவனிக்க வேண்டும். வீடு வாங்கும் சாமான்ய மக்களின் நலனைக் காக்க 2016-ல் அரசு ஆரம்பித்துள்ள ‘ரெரா’ (RERA) வெப்சைட்டில் நீங்கள் விரும்பும் ஃபிளாட் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பில்டர் தரும் ஆவணங்களை சட்டப் பூர்வமாக சரியாக இருக்கிறதா என்பதைத் தவறாமல் பார்க்க வேண்டும்.

மூன்று வகையான ஃபிளாட்டுகள்...

ஃபிளாட்டுகள் தரும் வசதிகளை உணர்ந்து வாங்க விரும்புபவர்கள் மூன்று வகையான ஃபிளாட்டுகள் கிடைப்பதைப் பார்க்கலாம். ப்ரீலான்ச் (Prelaunch) ஃபிளாட்டுகள், கட்டப்பட்டு வரும் ஃபிளாட்டுகள் மற்றும் குடியேறுவதற்குத் தயார் நிலையில் இருக்கும் ஃபிளாட்டுகள் – இவற்றில் எதை வாங்குவது, எது வாங்கினால் லாபம், எதில் அதிக வசதி கிடைக்கும், இவற்றின் நிறை, குறை என்ன என்று பார்ப்போம்.

1. ப்ரீலான்ச் ஃபிளாட்டுகள்

பில்டரின் கருத்தாக்கத்தில் மட்டுமே உருவாகி இன்னும் நடைமுறையில் உருப்பெறாதிருப்பவை இவை. பலவித அனுமதிகள் மற்றும் ‘ரெரா’ ரெஜிஸ்ட்ரேஷன் போன்ற ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு இன்னும் உட்படாதவை. அனுமதிகளைப் பெற்று ஃபிளாட்டுகள் ஓரளவு உருவம் பெற்று, சந்தையில் லான்ச் செய்யப்படும்போது குறிப்பிடப் படும் விலையைவிட 15% - 20% வரை குறைவான விலையில் கிடைப்பவை என்பதால், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் இவை இருப்பதில் ஆச்சர்யமில்லை.

பில்டர்களுக்குத் தேவைப்படும் ஆரம்பகட்ட முதலீடு எளிதாகக் கிடைப்பதால், அவர்கள் இந்த மாதிரியான முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். எந்த மாடியில், எந்தத் திசை பார்த்த ஃபிளாட் வேண்டும், பார்க் வியூவ், பீச் வியூவ், ஸ்விம்மிங் பூல் வியூவ் போன்றவற்றில் எது தேவை என்று குறிப்பிட்டுக் கேட்டுப் பெற முடியும்.

ப்ரீலான்ச் ஃபிளாட்டுகள் வாங்குவதில் சில குறைகளும் உண்டு. இன்னும் ஆரம்பிக்கப்படாத இந்த ஃபிளாட்டுகள் பற்றிய தகவல்கள் (Project details) அதிகம் கிடைக்காது. கிடைக்கும் தகவல்களும் மாற்றத்துக்குள்ளாக வாய்ப்புண்டு என்பதால், இவற்றுக்கு வங்கிக் கடன் கிடைப்பது கடினம். அனுமதிகள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டால், வேலை ஆரம்பிக்காது. அதிக காலம் காத்திருக்க நேர்ந்தால், விலை யேற்றம் தவிர்க்க இயலாததாகி விடும். இதனால் முதலீட்டாளர் களின் லாபக்கணக்கு தவறும். சில சமயம், ஃபிளாட்டுகள் கட்டப்படாமலேயேகூட போக லாம். அப்போது பில்டரிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவது கடினமாகலாம்.

ஆகவே, இவற்றில் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். செக் மூலம் பணம் கட்டுவதும், கட்டிய பணத்துக்கு ரசீது பெறுவதும் மிக முக்கியம்.

ப்ரீலான்ச் ஃபிளாட்டுகள் ஹை ரிஸ்க், ஹை ரிட்டர்ன் வகையைச் சேர்ந்தவை. முதல் முறையாக சொந்த வீடு வாங்குபவர்கள் இவற்றைத் தவிர்க்கலாம்.


2. கட்டப்பட்டு வரும் ஃபிளாட்டுகள்

இவை 30% - 70% வரை முடிவடைந்த நிலையில் உள்ளவை. இவற்றில் அநேகமாக 20% - 30% வரை ஏற்கெனவே விற்பனையாகி இருக்கும். பலவித அனுமதிகள், ‘ரெரா’ ரெஜிஸ்ட் ரேஷன் ஆகியவை நிறைவேறி யிருக்கும். ஏதாவது பிரச்னைகள் எழும்பட்சத்தில் விரைவில் நிவாரணம் கிடைக்க ‘ரெரா’வின் கீழ் அமைந்த அபல்லேட் ட்ரிப்யூனல் (Appellate Tribunal) உதவும் என்பதால், இவற்றில் செய்யப்படும் முதலீடு பாது காப்பு நிறைந்தது. முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட ஃபிளாட்டு களைவிட 10% - 20% விலை குறைந் தவையாக இவை இருக்கும்.

இவற்றில் இருக்கக்கூடிய குறைகளில் முதன்மையானது, பில்டருக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படுதல் அல்லது கட்டுமானப் பொருள்களின் விலை ஏறுதல் போன்ற காரணங்களால் வேலை தடைப்படுதல் மற்றும் நின்று போவதாகும். இதனால் வாடகை வீட்டில் வசிப்போர், வங்கிக் கடன் வாங்கி வீடு வாங்கும் பட்சத்தில் ஒரே நேரத்தில் வாடகை மற்றும் இ.எம்.ஐ என இரண்டையும் கட்டுமாறு நேரலாம்.

ஃபிளாட்டை உடைமை யாக்கிய பின்பே (After possession) கிடைக்கக்கூடிய வரிவிலக்குகள் (செக்.24/80இ.இ./80சி) கிடைக் காமல் போகலாம். தவிர, கேப்பிடல் கெயின்ஸ் வரியைத் தவிர்க்க வீடு வாங்குபவர்களுக்கும் சில சங்கடங்கள் உண்டு. பழைய வீடு விற்று மூன்று வருடங்களுக்குள் புது வீடு வாங்கும் வேலையை முடிக்க இயலாவிட்டால் 20% வரை கேப்பிடல் கெயின்ஸ் வரி, செஸ் மற்றும் சர்சார்ஜ் ஆகியவற்றைக் கட்ட வேண்டி யிருக்கும்.

முதலில், வாக்களிக்கப்பட்ட வசதிகள், கட்டிமுடித்தபின் குறை வதற்கும், இல்லாமல் போவதற்கும் கூட வாய்ப்புகள் உண்டு. வழக்க மான செலவுகளான ரெஜிஸ்ட் ரேஷன் சார்ஜ், ஸ்டாம்ப் டியூட்டி தவிர, 5% ஜி.எஸ்.டி வரியும் அதிகப் படியாக இந்த வகை ஃபிளாட்டு களுக்கு விதிக்கப்படுகிறது.

3. குடியேறுவதற்குத் தயாராக உள்ள ஃபிளாட்டுகள்

வாடகை வீட்டில் குடியிருப் போர் பணம் கட்டி, ரெஜிஸ்டர் செய்ததும் குடிபோக முடியும் என்ற நிலையில் இந்த வகை ஃபிளாட்டுகள் இருப்பதால், இ.எம்.ஐ. ஆரம்பிக்கும்போது வாடகைச் செலவு இருக்காது. நம் கண்முன் காட்டப்படும் அத்தனை வசதிகளும் கண்டிப்பாக நமக்கு கிட்டும். இவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.

குறை என்று பார்த்தால், கட்டி முடிக்கப்பட்ட ஃபிளாட்டு களுக்கு அதிக விலை தர வேண்டியிருக்கும். ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டதால், கட்டுமானப் பொருள் களின் தரம், அடித்தளத்தின் உறுதித்தன்மை ஆகியவற்றை சரிபார்க்க இயலாது. சில காலமாக விலை போகாத ஃபிளாட்டுகள் எனில், புத்தம் புதிய அழகு இருக்காது; சற்றுப் பழையனவாகத் தெரியக்கூடும். ‘ரெரா’ கட்டுப் பாட்டுக்கு முன்பே கட்டப்பட்ட ஃபிளாட் என்றால் பொதுத் தளங்களில் இந்த ஃபிளாட் பற்றிய தகவல்கள் கிடைக்காது.

கோவிட் கவலை ஒருபுறம் இருந்தாலும், குறைந்த அளவில் உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதம், இன்னும் அதிகரிக்காத ஃபிளாட் விலை மற்றும் அரசு தரும் சலுகைகள் ஆகியவை மக்களை ரியல் எஸ்டேட் பக்கம் திருப்புகிறது.

மேலே கண்ட மூன்று வகை ஃபிளாட்டுகளிலும் நிறை, குறைகள் இருக்கின்றன. ஃபிளாட் வாங்க எண்ணுபவர்கள் இவற்றைக் கவனமாகப் பரிசீலித்து தமக்கேற்ற ஒன்றை தேர்ந்தெடுப்பது அவசியம்.