உடலில் அதிக வேலைப்பளுவைச் சுமக்கும் உறுப்புகளில் ஒன்று பல். பற்களின் ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், ‘சர்க்கரை நோயாளிகள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
``சர்க்கரைநோய் வந்தால் கால்கள் பாதிக்கப்படும் என்பது பலருக்குத் தெரியும். ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு பற்களையும் பாதிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை’’ என்கிறார் பல் மருத்துவர் கல்பனா. சர்க்கரை நோயாளிகளுக்கான பல் ஆரோக்கியம் குறித்து விளக்குகிறார் அவர்.
``சர்க்கரை நோயாளிகளுக்குப் பற்களில் பிரச்னை ஏற்பட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருந்தால்தான் சிகிச்சையளிக்க முடியும். இவர்களுக்கு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால், ரத்தச் சர்க்கரை அளவை சீராகவைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோயாளிகள் பற்களைப் பாதுகாக்க 10 விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
01. தினமும் இரண்டு முறை பல் துலக்குவது எல்லோருக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
02. மிருதுவான நார்ப்பகுதி (Bristle) உள்ள பிரஷ்ஷைப் பயன்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரஷ்ஷைக் கட்டாயம் மாற்ற வேண்டும்.
03. சர்க்கரை நோயாளிகள் ஃப்ளோரைடு கலந்த டூத்பேஸ்ட்டால் பல்துலக்க வேண்டும்.
04. பல் இடுக்குகளிலுள்ள உணவுப் பொருள்களை நீக்க, `டென்டல் ஃப்ளாஸ்’ (Dental Floss) எனப்படும் ஒருவித நூலைப் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
05. வாய் சுகாதாரத்தில் குறைபாடு ஏற்பட்டால், பாக்டீரியா அதிகரிக்கும். எனவே, எந்த உணவைச் சாப்பிட்டாலும் சுத்தமான நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். அசைவ உணவுகளை உண்டதும் பல்துலக்க வேண்டும்.
06. புகையிலை, மதுப்பழக்கம் போன்றவை ஈறுகளில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் புகைப்பழக்கம் இருந்தால், பற்கள், ஈறுகளில் தீவிர பாதிப்புகள் உண்டாகும். பற்களை இழக்கவும் நேரிடலாம். எனவே, அந்தப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
07. சர்க்கரை நோயாளிகளுக்கு உமிழ்நீர் சுரக்கும் அளவு குறைவதால், அடிக்கடி வாய் வறண்டுவிடும். ‘சுகர்லெஸ் சூயிங்கம்’ மெல்லுவது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்.
08. பல்செட் பயன்படுத்துபவர்கள் தினமும் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்னர் பல்செட்டைக் கழற்றி வைத்துவிட வேண்டும்.
09. ஈறுகள் கீழே இறங்கி, பல் ஆடும் நிலையிலிருந்தால், மயக்க ஊசி போட்டு ஈறுகளைச் சரிசெய்யும் ‘டீப் கிளீனிங்’ (Deep Cleaning) சிகிச்சையைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஈறுகளிலுள்ள அழுக்குகள் எலும்பை அரித்துவிடும். ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டால், மருத்துவரை அணுகி பாதிப்பைக் கண்டறிய வேண்டும்.
10. ஈறுகள் அதிகம் சிவந்துபோயிருந்தாலோ, வீக்கம், ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment