வீட்டுத்தோட்டம்திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சித்ராதேவி. வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளார். ஒரு காலைப் பொழுதில் அவருடைய வீட்டில் சந்தித்தோம். ‘‘திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புத்தூர்தான் என்னோட சொந்த ஊர். விவசாய குடும்பம். எங்க நிலம் வானம் பார்த்த பூமியா இருந்ததால விவசாயம் செய்ய முடியாம, கூலி வேலைக்கும் கொத்தனார் வேலைக்கும் போக ஆரம்பிச்சாங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ரொம்ப ஆர்வம்.
வீட்டுக்குப் பக்கத்துல சின்னச் சின்ன செடிகளை நட்டு வளர்ப்பேன். அது வளர்றதைத் தினமும் பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கும். என்கூடப் பிறந்தது 5 அக்கா தங்கச்சிகள். நான்தான் முதல் பட்டதாரி. கணினி தொடர்பான முதுகலைப் படிப்பை முடிச்சுட்டு, 2 வருஷம் ஒரு நிறுவனத்துல வேலை பார்த்தேன். ஆனாலும், விவசாயம் செய்யணும்ங்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்ல. இந்நிலையில எனக்குத் திருமணம் ஆச்சு.
என்னுடைய கணவர் துபாயில இருக்க ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்திட்டு இருந்தார். திருமணம் முடிஞ்சு, அவர் மறுபடியும் வேலைக்காகத் துபாய் போறப்ப நானும் அவர்கூடப் போனேன்.
அந்த நாட்டுல பாலைவனத்துல விவசாயம் பண்றதைப் பார்க்க ஆச்சர்யமா இருந்தது. பக்கத்துல இருந்த ஷார்ஜா, சவுதி அரேபியா நாடுகளுக்கும் போய் அங்க எப்படி விவசாயம் செய்றாங்கன்னு பார்த்தேன். பாலைவனத்தில, குறைஞ்ச மழை. அதுலயே விவசாயம் செய்யும் போது நம்ம நாட்டுல எவ்வளவு வளங்கள், வழிகள் இருக்கு. நம்ம ஊர்ல ஏன் விவசாயம் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. உடனே கணவர்கிட்ட பேசுனேன்.
அவர் வேலையைவிடச் சொன்னேன். அதை விட்டுட்டு இந்தியா வந்துட்டோம். எங்க முடிவுக்கு வீட்டுல பலத்த எதிர்ப்பு. எல்லோர்கிட்டயும் திட்டுகளும் ஏச்சுகளும் வாங்குனோம். ஆனாலும், என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
அவர் இங்கேயே வேலை பார்க்க ஆரம்பிக்க, நான் நாட்டு விதைகளைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பிச்சேன். இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகளைக் கத்துகிட்டேன். பல ஊர்களுக்குப் போய் இயற்கை வழியில் விவசாயம் செய்ற விவசாயிகளைச் சந்திச்சு பேசுனேன். நம்மாழ்வார் ஐயா கருத்துகள், இயற்கை தொடர்பான புத்தகங் களையும் படிக்க ஆரம்பிச்சேன். ஓரளவு இயற்கை விவசாயம் தொடர்பா தெரிஞ்சுகிட்ட பிறகு, 2016-ம் வருஷம் என்னோட வீட்டு மொட்டை மாடியில மாடித்தோட்டம் அமைக்க ஆரம்பிச்சேன். நாட்டுக் காய்கறி, கீரை விதை களைத்தான் பயன்படுத்துனேன். விதை முளைச்சு, செழிப்பா வளர்றதைப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமா இருந்தது. முதல் காய்களை அறுவடை செய்யும்போது ஆர்வமும் மகிழ்ச்சியும் அதிகமாச்சு’’ என்றவர் தனது மாடித்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
‘‘மண்புழு உரம், மீன் அமிலம் தயாரிக்கப் பயிற்சி எடுத்து அதை என்னுடைய மாடித் தோட்டத்துக்கு மட்டும் பயன்படுத்திக்கிட்டு வந்தேன். அறுவடை செய்யுற காய்கறிகளை என்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள்ல பதிவு பண்ணிகிட்டு வந்தேன். அதைப் பார்த்த சிலபேரு அவங்க தோட்டத்துக்கு இயற்கை உரங்கள் வேண்டும், மாடித்தோட்டம் அமைக்கணும்னு கேட்டாங்க. அப்படிக் கேட்டவங்களுக்காக இயற்கை உரங்களைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். அதுக்காகச் சின்னதா பண்ணை அமைச்சு மண்புழு உரம், மீன் அமிலம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், 3ஜி கரைசல், கழிவுச் சிதைவு உரம்னு இயற்கை இடுபொருள்களைத் தயார் பண்ணி கேக்குறவங்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன்.
சின்ன பண்ணையா இருக்குறதால, அதிக அளவு தயாரிக்க இடவசதி இல்ல. அதனால மணப்பாறையைச் சுற்றியுள்ள கிராமங்கள்ல இருக்க ஆதரவற்ற பெண்களுக்கு உரம் தயாரிக்கப் பயிற்சி கொடுத்து, அவங்க தயாரிச்சுக் கொடுக்குற உரங்களை நானே வாங்கி விற்பனை செய்றேன். இப்ப கர்நாடகா, ஆந்திரானு பக்கத்து மாநிலங்கள்ல இருந்தும் எங்ககிட்ட உரம் வாங்குறாங்க. அவர்களுக்குக் கூரியர் மூலமாக அனுப்புறோம்.
இயற்கையான முறையில நாட்டு விதைகளை மட்டுமே பயன்படுத்தி மாடித் தோட்டமும் அமைச்சு கொடுக்குறேன். இதுவரைக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாடித்தோட்டம் அமைச்சு கொடுத்திருக்கேன். சுற்றியுள்ள கிராமங்கள்ல இருக்க மாணவர் களுக்கு இயற்கை விவசாயம் பற்றி வகுப்புகளையும் நடத்திக்கிட்டு வர்றேன். அவர்களுக்கு நாட்டுக் காய்கறி விதைகளை இலவசமாக் கொடுத்து, செடி, கொடி, மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்துறேன். இது மூலமா இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறை நிச்சயமா மீட்டெடுக்க முடியும்னு நம்புறேன். என்னோட பசங்க மூலமா விதைப்பந்துகள், விதைப் பென்சில் தயாரிச்சு கொடுக்குறோம்’’ என்றவர் நிறைவாக,
‘‘மண்புழு உரம் கிலோ 12 ரூபாய், பஞ்சகவ்யா லிட்டர் 100 ரூபாய், மீன் அமிலம் லிட்டர் 200 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். அது மூலமா செலவு போக மாசம் 50,000 ரூபாய் லாபம் கிடைக்குது. லாப பணத்துல ஒவ்வொரு மாசமும் 8,000 ரூபாய் எடுத்து பழ மரக்கன்றுகளை வாங்கி இலவசமாக் கொடுப்பேன். பறவைகளோட உணவுக்காகத்தான் பழ மரக்கன்றுகளைக் கொடுக்கிறேன். இயற்கையை நான் நேசிச்சேன். அந்த இயற்கை எனக்கு இப்ப மனசுக்குத் திருப்தியான வருமானத்தைக் கொடுத்துட்டு இருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
தொடர்புக்கு, சித்ராதேவி,
செல்போன்: 81222 37668.
No comments:
Post a Comment