அதிக கொழுப்பு ஆரோக்கியத்தின் எதிரி என்பதை எல்லோருமே அறிவோம். உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இதுதான் காரணம். ``உடற்பயிற்சியும் உடலுழைப்பும் இல்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்றவை தவிர சில பழக்கவழக்கங்களும்கூட கொழுப்பை அதிகரிக்கலாம். அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை சாத்தியமாக்கலாம்” என்கிறார் பொது மருத்துவர் சாருமதி. கொழுப்பைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பட்டியலிடுகிறார் அவர்
பசித்த பிறகு சாப்பிடுங்கள்!
நாம் உண்ணும் உணவு செரிமானமாக இரண்டு முதல் நான்கு மணிநேரம்வரை ஆகலாம். அது முழுமையாக செரிமானமாகாதநிலையில் டீ, காபி போன்றவற்றைக் குடிப்பதையும், எண்ணெயில் பொரித்த வடை, போண்டா போன்றவற்றைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். எந்த வேளையாக இருந்தாலும், பசித்த பிறகு சாப்பிடுவதே நல்லது. சாப்பிட்டவுடன் இனிப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கிய உணவுகள்!
வீடு திரும்பியதும் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படும். பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றை வீட்டில்வைத்திருந்தால் அவற்றைச் சாப்பிடலாம். வீட்டில் நம் பார்வையில் படும்படி ஆரோக்கியமான தின்பண்டங்களை வைத்திருப்பது வெளி உணவுகளைத் தவிர்க்க உதவும்.
பயணப் பாதையை மாற்றுங்கள்!
அலுவலகம் செல்லும் வழியில் அல்லது வீடு திரும்பும் வழியிலிருக்கும் கடைகளில் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அப்போது நொறுக்குத்தீனிகள், ஆரோக்கியமில்லாத உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவார்கள். உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும், அவற்றைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். எனவே, அந்தப் பாதையைத் தவிர்க்க வேண்டும்.
துரித உணவு தவிர்ப்போம்!
இன்றைக்கு பீட்சா, பர்கர், ஃபிரைடு ரைஸ் என சத்துகளில்லாத, கொழுப்பு நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. துரித உணவுகளால் ஏற்படும் அபாயத்தை, குடும்பத்தினரோடு பேச வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது விழித்துக்கொண்டால், மற்றவர்களும் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வார்கள்.
நடைப்பயிற்சியை நண்பனாக்குவோம்!
`உடற்பயிற்சி செய்ய நேரமில்லை’ என்பது ஏற்றுக்கொள்ள முடியாத காரணம். நேரமில்லாதவர்கள் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ளலாம். பக்கத்திலிருக்கும் கடைகள், இடங்களுக்கு நடந்து செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். வெளியூர் பயணங்களில், பார்க்க வேண்டிய இடங்களை நடந்தே சுற்றிப் பார்க்கலாம். முடிந்தவரை வாகனப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
வேண்டாம்... கூகுள் சமையல்!
சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் உணவு செய்முறைகள் வீடியோக்களாகப் பதிவிடப்படுகின்றன. ஆரோக்கியத்தை விட்டுவிட்டு, சுவையை மட்டுமே மையப்படுத்தும் சமையல் வீடியோக்களைப் பார்ப்பதையும் அந்த உணவுகளைச் சமைத்து உண்பதையும் தவிர்க்கலாம்.
வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம்!
உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் பல்வேறு ரசாயனங்களைச் சேர்ப்பார்கள். அவை மிக எளிதாகக் கொழுப்பை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, வெளியிடங்களில், சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், தேவையற்ற தொற்றுகளையும் குடல் உபாதைகளையும் தவிர்க்கலாம்.
தேவைக்கேற்ப வாங்குங்கள்!
சாக்லேட், ரொட்டி, குக்கீஸ், இனிப்புகள் மற்றும் நொறுக்குத்தீனிகளை வாங்கி வீட்டில் சேர்த்துவைப்பதைத் தவிர்க்கவும். நொறுக்குத்தீனிகள் இருப்பிலிருந்தால் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.
ஆரோக்கிய உணவு அறிவோம்!
நோய் தாக்கும் தன்மையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் உணவுப் பட்டியலை தயாரிக்க வேண்டும். உதாரணமாகச் சில உணவுகள்...
• அவகேடோ, வால்நட், ஆளி விதைகள் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்.
• பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர், புரொக்கோலி.
• தயிர், மோர் போன்ற ‘நல்ல’ பாக்டீரியா நிறைந்த புரோபயாட்டிக் (Probiotic) உணவுகள்.
• பாலாடைக்கட்டி, யோகர்ட், வேகவைத்த முட்டை போன்ற புரத உணவுகள்.
ஒவ்வாமை தரும் உணவுகளை ஒதுக்குங்கள்!
பால் பொருள்களிலிருக்கும் லாக்டோஸுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்ப்பினால் உண்டாகும் அலர்ஜிக்கு, `பால் ஒவ்வாமை’ (Lactose Intolerance) என்று பெயர். பால் ஒவ்வாமை உள்ளவர்கள் சிறுதானியங்களான சாமை, தினை, கேழ்வரகு, தேங்காய், முட்டை, சோயா, ராஜ்மா, கொண்டைக்கடலை, கீரை மற்றும் அசைவ உணவுகளின் மூலம் பாலிலுள்ள அதே சத்துகளைப் பெறலாம்.
கோதுமை, பார்லி, கம்பு போன்றவற்றிலுள்ள குளூட்டன் என்னும் புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்கள் பீன்ஸ், நிலக்கடலை, நட்ஸ், இறைச்சி, சோயா, கடல்மீன் போன்ற குளூட்டன் புரதம் இல்லாத (Gluten Free) உணவுகளை உட்கொள்ளலாம்.
No comments:
Post a Comment