சைனஸுக்கு நிரந்தரத் தீர்வு என்ன? - Agri Info

Adding Green to your Life

January 3, 2022

சைனஸுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?

 சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத் தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய் வருகிறது.

குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக் குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும். முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும். நேரமே இல்லை” எனப் பல காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர் கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக் கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம். குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல. இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை) தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும் அழுக்குப் போக என்றால், இரவில் மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே, இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல் முதலில் மிக அவசியம்.



நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ் நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன் தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பெருவாரியான நேரங்களில், சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும் நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி, நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள hypersensitivityயைச் சீராக்காமல், இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம். அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்துவாருங்கள்.

யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப் பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும். நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம் இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில் சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.

உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில் உள்ள piperine, piperidine சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால், நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.

No comments:

Post a Comment