மழைக் காலமோ, வெயில் காலமோ - நம்முடைய பைக்கை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். வெயில் காலம் என்றால் அதிகம் வெயில் படாத இடத்தில் நிறுத்தி வைப்பது, பைக் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்வது என பராமரிப்பு முறைகள் இருக்கும். இதுவே, மழைக்காலம் என்றால் மழை நீரில் அதிகம் நனையாமல் வைத்துக் கொள்வது, தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களில் நிறுத்தி வைப்பது என அதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், முறையான வழிமுறைகள் எல்லோருக்கும் தெரியுமா என்றால் கேள்விக்குறி தான். இப்படிப் பல கேள்விகளுக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் சிவசங்கர் பதில் கூறினார்.
மழைக் காலத்தில் எந்தெந்த விதங்களில் பைக் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன, அதனை எப்படித் தடுப்பது?
மழைக் காலங்களில் நமது பைக்கில் தண்ணீர் புகுவதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். நாம் சரியாகப் பார்க்கவில்லை; அல்லது சரியாக ஓட்டவில்லை என்றால் இன்ஜினில்கூட தண்ணீர் புகுந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு வகைகளில் நம்முடைய பைக்கில் தண்ணீர் இறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் நாம் நிறுத்தி வைத்திருக்கும்போது மழை பெய்து நம்முடைய பைக்கில் தண்ணீர் புகுவது, இரண்டாவது மழையின்போது தேங்கியிருக்கும் நீரில் நாம் பைக்கை ஓட்டி, அதன் மூலம் தண்ணீர் பைக்கின் உள்ளே செல்வது.
அதிக மழைக்காலம் என்றால், நம்முடைய பைக்கைச் சமதளத்தில் அல்லது கொஞ்சம் மேடான பகுதியில் நிறுத்தி வைப்பது மிகவும் சிறந்தது. பள்ளமான இடத்தில் நிறுத்தி வைக்கும்போது தண்ணீரின் மட்டம் உயர்ந்தால் அது சைலன்ஸர் வழியே பைக்கின் உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமதளத்தில் நிறுத்துவது நல்லது. அடுத்து, மழைநீரில் நனையாமல் பைக் கவர் கொண்டு பைக்கை மூடி வைப்பது சிறந்தது. இதன் மூலமும் ஏதாவது ஒரு வழியில் மழை நீர் பைக்கில் புகுவதைத் தடுக்க முடியும்.
இரண்டாவது நாம் பைக்கை ஓட்டும்போது, தண்ணீர் நிறைந்திருக்கும் பகுதியைத் தவிர்த்து விடுவது நல்லது. ஒருவேளை அந்தப் பாதையில் சென்றே ஆக வேண்டும் என்றாலும், ஃபுட்ரெஸ்ட் மற்றும் சைலன்ஸரின் கீழே தண்ணீர் இருக்கிறது, பைக்கின் டயர் மட்டும் கொஞ்சம் மூழ்கும் அளவுதான் தண்ணீர் இருக்கிறது என்றால் மட்டும், குறைவான வேகத்தில் அந்தப் பாதையைக் கடக்கலாம். சைலன்ஸர் அல்லது ஃபுட்ரெஸ்ட் அளவு தண்ணீர் இருக்கிறதென்றால் கண்டிப்பாக அந்தப் பாதையில் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.
சரி, நாம் பாதுகாப்பாக இருந்தும் பைக்கில் தண்ணீர் சென்றதற்கான அறிகுறி இருக்கிறதென்றால், அதாவது சைலன்ஸரின் உள்ளே தண்ணீர் சென்று விட்டதென்று தெரிந்தால், பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சி கூடச் செய்ய வேண்டாம். ஸ்டார்ட் மட்டுமல்ல, பைக்கின் சாவியைக்கூட திருப்ப முயற்சி செய்ய வேண்டாம். நாம் சாவியைத் திருப்ப முயற்சி செய்தால் பைக்கின் பேட்டரியில் இருந்து கரன்ட் பாஸாகி ஷார்ட் சர்க்யூட் ஆகி பைக்கின் எலெக்ட்ரிக்கல் பாகங்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கிக் அடிக்கவே அடிக்காதீர்கள். தண்ணீரில் மூழ்கிய பைக்கை கிக் அடிக்க அல்லது ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தால் இன்ஜினுக்குள் தண்ணீர் செல்வதற்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொடுத்தது போல் ஆகிவிடும். பின்னர், மொத்த இன்ஜினையும் பிரித்துத்தான் பழுது பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.
பைக்கை சென்டர் ஸ்டாண்டு போட்டு நிறுத்தியிருந்தால், சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தலாம். தண்ணீர் கொஞ்சம் வடிவதற்கான வழியாக அது இருக்கும். அதன் பிறகு அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்புக்கு போன் செய்து கூறினால், நம்முடைய பைக்கை டோ செய்து கொண்டு சென்று முறையாக சர்வீஸ் செய்து விடுவார்கள். அதிக செலவில்லாமல் முடிந்துவிடும்.
பைக் ஓட்டும்போது, என்னவிதமான பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பது?
பாதுகாப்பு என்று வரும்போது ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் என்று துவங்கி, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம். அருகில்தானே செல்கிறோம் என்று அலட்சியமாக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்யாதீர்கள். 20 கிமீ வேகத்தில் சென்று தலையில் பலத்த காயம் அடைந்தவர்கள் கூட இருக்கிறார்கள். எனவே, பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
எந்தக் காலமாக இருந்தாலும், பைக்கை குறிப்பிட்ட இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். காரணம், அப்போதுதான் பிரேக், ஆக்ஸிலரேட்டர், க்ளட்ச் மற்றும் செயின் ஆகியவற்றுக்குத் தேவையான லூப்ரிகேஷன் கிடைக்கும்.
நம் பைக்குக்கும் ரோடுக்கும் இடையே பாலமாக இருப்பது டயர் மட்டும்தான். ரோடு கிரிப் இருந்தால்தான் நாம் பிரேக் பிடித்தால்கூட சரியான இடைவெளியில் வண்டி நிற்கும். பிரேக் பிடிக்கும்போது ஸ்கிட் ஆகாமல் இருப்போம். ரோடு கிரிப்புக்கு டயர் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டியது அவசியம். நாம் அதிகம் பயணம் செய்யச் செய்ய டயர்கள் தேய்மானம் ஆகிக் கொண்டே வரும். நமது டயரில் டயர் வியர் இன்டிகேட்டர் என்று ஒன்று இருக்கும். அதற்குக் கீழே டயர் தேய்ந்துவிட்டது என்றால், நாம் டயரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
நாம் பைக்கை சர்வீஸ் விடும்போது, நம்முடைய பைக்கின் டயர் கண்டிஷன் பார்த்து, மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று அவர்களே கூறி விடுவார்கள். . மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது 3,000 கிமீ ஒரு முறையோ பைக்கை சர்வீஸ் செய்வது நல்லது.
மழைக்காலங்களில் பிரேக்கிங் குறித்த டிப்ஸ்?
பிரேக் பிடிப்பதைப் பொறுத்தவரை, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டு பிரேக்குகளையும் ஒருசேரப் பிடிப்பதே சிறந்தது. நாம் சில நேரங்களில் டிஸ்க் பிரேக் இருக்கிறது என்று முன்பக்க அல்லது பின்பக்க பிரேக்கை மட்டும் பிடிப்போம். அது ஒரு தவறான அணுகுமுறை. இரு பிரேக்குகளையும் ஒன்றாகப் பிடிக்கும் போது, குறைந்த தூரத்திலேயே பைக் நின்றுவிடும். மேலும், இரு பிரேக்கையும் பிடிக்கும்போது நமது பைக் ஸ்கிட் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. நாம் ஒரு பக்க பிரேக்கை மட்டும் பிடிக்கும்போது, மறுபக்கச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். அது நம் பைக் ஸ்கிட் ஆக வழிவகுக்கும்.
மழை நேரத்தில் தண்ணீர் இருக்கும் ரோட்டில் செல்லும்போது ஸ்கிட் ஆவதற்கான வாய்ப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே, பிரேக் பிடிக்கும்போது ஆக்ஸிலரேட்டரில் நம் கவனம் இருக்கக்கூடாது. உடனடியாக பிரேக் பிடிக்க வேண்டும். மேலும், பிரேக் பிடிப்பதற்கு முன்னால் க்ளட்ச்சைப் பிடிக்காமல் இருப்பது சிறந்தது. பிரேக்கை முதலில் பிடித்து வேகம் குறைந்தவுடன் க்ளட்ச்சைப் பிடிப்பதுதான் சரியான வழிமுறை. மேலும், மழைக்காலங்களில் குறைவான வேகத்தில் சென்றால்தான், பிரேக் பிடிக்கும்போது பைக் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.
அதிக மைலேஜ் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் பைக்கைத் தேவையில்லாத நேரங்களில் ஆன்/ஆஃப் செய்வது, அல்லது ஆன் செய்து ஐடிலிங்கில் வைத்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம். சிக்னலில் நின்றிருக்கும்போதுகூட பைக்கை ஆஃப் செய்து வைத்திருக்கலாம். முக்கியமான ஒரு விஷயம், பைக்கை முறையாக சர்வீஸ் செய்தால் கொஞ்சம் அதிக மைலேஜ் கிடைக்கும். பைக்கின் சக்கரங்கள் எந்த ஒரு தடங்களும் இன்றி ஃப்ரீயாக ரொட்டேட் ஆக வேண்டும். செயின் ப்ளே சரியாக இருக்க வேண்டும். லூஸாக இருந்தாலும் மைலேஜ் குறையும். ஏர் ஃபில்டர் சுத்தமாக இருக்க வேண்டும். ஸ்பார்க் ப்ளக் சரியாக இயங்க வேண்டும். இவற்றையெல்லாம் நம்மால் நேரம் ஒதுக்கிப் பார்க்க முடியாது. மேலும், இதையெல்லாம் சரிபார்க்க நாமும் பழகியிருக்க மாட்டோம். எனவேதான் சர்வீஸ் சென்டரில் அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும். அவர்கள் இதனையெல்லாம் சரிபார்த்து விடுவார்கள். இதன் மூலம் 4 அல்லது 5 கிமீ மைலேஜ் நாம் வைத்திருக்கும் பைக்குக்கு ஏற்ப நமக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.
No comments:
Post a Comment