Search

செலவு, சேமிப்பு, முதலீடு... உங்கள் நிதிப் பாதை சரியா..?

 சேமிப்பு


நாம் வாங்கும் சம்பளம் மற்றும் வருமானத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி யை எதிர்காலத் தேவைகளுக் காகச் சேமிப்பது அவசியம். ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தில் 10% முதல் 30% வரை சேமிக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை எனக் கூறப் படுகிறது.


நம்மிடையே பலதரப்பட்ட மக்கள் பல்வேறு விதமாக அவர்களின் சம்பாத்தியத்தை செலவு செய்கிறார்கள்; சேமிக்கிறார்கள்; முதலீடு செய்கிறார்கள். இவர்களை ஐந்து விதமாகப் பிரிக்கலாம். இவர்களில் நீங்கள் எந்தப் பிரிவில் வருகிறீர்கள், நீங்கள் செலவு செய்யும் விதம், சேமிக்கும் விதம், முதலீடு செய்யும் விதம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம்.

1. பணம் எதுவும் மிச்சம் இருக் காது: வருமானம்- செலவு = 0

நம்மில் மிக அதிகம் பேர் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தை அந்த மாத இறுதிக்குள் செலவழிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் செலவுச் சூத்திரமானது வருமானம் - செலவு = 0 என்றுதான் இருக்கிறது.

இவர்கள் மாத ஆரம்பத்தில் ‘டாம் டூம்’ எனச் செலவு செய்துவிட்டு, மாதக் கடைசியில் ரசம், பழைய சாதம் எனச் செலவைக் குறைத்து விடுவார்கள்.

ஆனால், இவர்கள் கடன் வாங்க மாட்டார்கள். அதே நேரத்தில், எதிர்காலத்துக்கு பணத்தைச் சேமிக்க மாட்டார்கள். இது மாதிரியானவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமித்து வந்தால்தான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் சென்று பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி, சொந்த வீடு போன்றவற்றை அடைய முடியும்.




2. கட்டுப்பாடு இல்லாத செலவு: வருமானம் - செலவு = கடன்

சிலர் சம்பாத்தியத்தைக் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் செலவு செய்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் செலவுச் சூத்திரம் வருமானம் - செலவு = கடன் என்று இருக்கும். அதாவது, வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்து விட்டு, அதைச் சமாளிக்க கிரெடிட் கார்டு் கடன், தனிநபர் கடன், தங்க நகைக் கடன் வாங்குபவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் தங்க நகை இவர்களின் கழுத்தில் இருப்பதை விட வங்கியில் அடமானமாக லாக்கரில் அதிக நாள்கள் இருக்கும். இவர்கள் செலவைக் கட்டுப்படுத்தவில்லை எனில், எப்போதும் கடனாளியாகவே இருப்பார்கள்.



3. பண விஷயத்தில் பொறுப்பானவர்கள்: வருமானம் - செலவு = சேமிப்பு

பணத்தைச் செலவழிப்பதில் சிலர் மிகவும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். இவர் களின் மாத வருமானத்தில் செலவு போக உள்ள தொகையைச் சேமிப்பார்கள்.

இவர்களின் செலவுச் சூத்திரம் வருமானம் - செலவு = சேமிப்பு என்று இருக்கும். இவர்கள் தங்கள் பணத்தைப் பெரும்பாலும் பீரோவில் மற்றும் வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதால், அந்தப் பணம் பெரிதாக வளராது.

இவர்களின் பணம், பணவீக்கத்தைத் தாண்டி பெருகாததால், இவர்களின் வாழ்க்கைத் தரமும் பெரிதாக மேம்பட்டி ருக்காது. மிக அதிகமாக சம்பாதிப்பவர்களின் வாழ்க்கைத்தரம்தான் மேம்பட்டதாக இருக்கும்.


4. பண விஷயத்தில் ஒழுங்கைப் பின்பற்றுபவர்கள்: வருமானம் - சேமிப்பு = செலவு

சிலர் தங்களின் சம்பளம் அல்லது சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கு எனத் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள பணத்தை மட்டும் திட்டமிட்டுச் செலவு செய்வார்கள். பணத்தைச் செலவு செய்வதில் நல்ல ஒழுங்கைப் பின்பற்றுபவர்கள் என்று இவர்களைக் குறிப்பிடலாம்.

இவர்களின் செலவுச் சூத்திரம், வருமானம் - சேமிப்பு = செலவு என்பதாக இருக்கும்.

பண விஷயத்தில் ஒழுங்கைப் பின்பற்றுபவர்கள் சம்பளம், போனஸ் என எந்த வரவு வந்தாலும், அதில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது தொகையைத் தனியே வைத்துவிட்டு மீதியைத்தான் செலவு செய்வார்கள். இதனால், இவர்களிடம் எப்போதும் பணம் தாராளமாகப் புழங்கிக் கொண்டிருக்கும்.

அவசரச் செலவுகளைக் கண்டு கலங்க மாட்டார்கள். நீண்ட காலத்தில் இவர்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் அதைக் கொண்டு தங்கநகை, நிலம் போன்றவற்றை வாங்கி வருவார்கள். இப்படி சேர்க்கும் தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடுபவர்களும் இருக்கிறார்கள்.

5. மிகச் சிறந்த புத்திசாலிகள்: வருமானம் - முதலீடு = செலவு

வெகு சிலர், சம்பளம் வந்தவுடன் அதிலிருந்தே குறிப்பிட்டத் தொகையை மாதம்தோறும் வங்கி, தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டம் (ஆர்.டி) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் சீரான முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்.ஐ.பி) போட்டு வருகிறார்கள்.

இவர்களின் செலவுச் சூத்திரம், வருமானம் - முதலீடு = செலவு என்பதாக இருக்கும். இப்படி பணத்தை நேரடியாக முதலீட்டுக்குக் கொண்டு செல்வதால், நீண்ட காலத்தில் அதிக வருமானம் மற்றும் அதிக செல்வம் சேரும்.

நீங்கள் எந்த வகை..?

இந்த ஐந்து வகையில் நீங்கள் எந்தப் பிரிவுக்குள் வருகிறீர்கள் என்பதைப் பாருங்கள். இந்த நான்கு பிரிவு களில், கடைசி இரு பிரிவுக்குள் இருந்தால், நீங்கள் நிச்சயம் பாராட்டுக்குரிய மனிதர்தான்.

நீங்கள் நான்காவது பிரிவில் இருப்பவர் எனில், ஐந்தாவது பிரிவுக்கு வர முயற்சி செய்யவும். தேவைப்பட்டால் நிதி ஆலோச கரின் உதவியை நாட நீங்கள் தயங்கக் கூடாது.

நீங்கள் முதல் மூன்று பிரிவுக்குள் இருந்தால், கடைசி இரு பிரிவுக்குள் வர முயற்சி செய்வது அவசியம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைவரும் ஐந்தாவது பிரிவினரைப்போல, முதலீடு செய்ய வேண்டும்; அதன்பிறகே செலவு செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை!


0 Comments:

Post a Comment