கடன் வாங்க விண்ணப்பிக்கும் போது ‘சிபில் ஸ்கோர்’ என்று ஒன்றை சொல்வார்கள். இந்த சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.
வீட்டுக் கடனுக்கு மட்டுமல்ல. தனிநபர் கடன்களுக்கும் இது பொருந்தும். வீட்டு உபயோக பொருள் போன்ற சிறிய கடன்களுக்கு இது பொருந்தாது.
கடன் தகவல் நிறுவனம் (சுருக்கமாக சிபில்), 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை திரட்டுவதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப்பணி. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
வீடு கட்ட, வாகனம் வாங்க, திருமண செலவு என வாழ்க்கையின் பல தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படி கடன் வாங்கி பயன் அடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும். வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதன் அடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும்.
இந்த புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம் கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிடைக்காது.
நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும். இந்த கடன் புள்ளிகளை பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது.
ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக உங்கள் வாழ்க்கை துணையை சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும் என இத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment