Search

தூக்கம் வருவதற்குரிய முத்திரைகள்

 முத்திரைகள் செய்யும் பொழுது நமது பண்புகள் மாறிவிடும். அன்பு, கருணை மலரும். கோபம் நீங்கும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும். அதனால் நமக்கு நித்திரை கை கூடும். ஒரு மனிதனுடைய உடலில் பஞ்ச பூதங்களும் சமமான விகிதத்தில் இயங்கினால் ஆழ்ந்த நித்திரை கை கூடும். பஞ்ச பூதங்களை சமப்படுத்துவது முத்திரைகளாகும்.


முத்திரைகளை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்ய வேண்டும். ஒரு முத்திரையை இரண்டு நிமிடம் செய்தால் போதும். சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து பயிற்சி செய்யலாம். தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக வைத்து செய்யவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.


தூக்கம் வருவதற்கு பல விதமான யோகமுத்திரை சிகிச்சையை அளிக்கின்றோம். நம்பிக்கையுடன் பயிலுங்கள். நிச்சயம் நல்ல தூக்கம் வரும். இந்த பயிற்சியினால் எந்த ஒரு பக்க விளைவும் வராது. மாறாக இந்த முத்திரைகளினால் மற்ற பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.

பிராண முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள், கூர்ந்து தியானிக்கவும். பின் மோதிரவிரல், சுண்டுவிரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற இருவிரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும் இரு கைகளிலும் செய்யவும். பின் கைகளை சாதாரணமாக வைக்கவும்.

பிரமர முத்திரை: நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராகயிருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் ஆள்காட்டி விரலை மடக்கி நடுவிரல் நுனியை கட்டைவிரல் நுனியோடு அழுத்திப் பிடித்து மற்ற இரு விரல்களையும் நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

சின் முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.

அர்த்த பத்மாசனம்: விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் நீட்டவும். வலது காலை மடக்கி இடது கால் தொடை மீது வைக்கவும். பின் இடது காலை மடித்து படத்தில் உள்ளது போல் கொண்டு வரவும். இந்த ஆசனத்தில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.இதேபோல் காலை மாற்றி இரண்டு நிமிடங்கள் இருக்கவும். ஒவ்வொரு காலிலும் இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வலது பக்க, இடது பக்க மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாயும். மூளை செல்கள் நன்கு இயங்கும். மன அமைதி கிட்டும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். இரவு படுக்கும் பொழுது மட்டும் படுப்பதற்கு முன்பாக பிராண முத்திரையை இரண்டு நிமிடம் செய்துவிட்டு படுக்கவும். 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தூக்கம் வரும்.

யோகக் கலைமாமணி
பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com

0 Comments:

Post a Comment