‘நீட் விலக்கு மசோதா’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இதே வேளையில்தான், ‘நீட்’ தேர்விற்கான அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்விற்காக தனியார் பள்ளி மாணவர்கள் சிறப்பாக தயாராகி வரும் நிலையில், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீராம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சிகளை வழங்கி வருகிறார். குறிப்பாக, தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தின் கீழ் இயங்கும் 6 அரசுப்பள்ளிகளில் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர், நீட் தேர்வு பற்றியும், அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும், நீட் தேர்விற்கு தயாராகும் விதம் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
* அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்த புரிதல் எப்படி இருக்கிறது?
நீட் தேர்வை கடினமான தேர்வாக கருதுகிறார்கள். ‘தேர்வு எழுத வேண்டும்’ என்ற முடிவிற்கு வரும் முன்பே ‘இதில் வெற்றி பெறுவது கடினம்’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள். உண்மையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ரொம்ப சுலபமானதுதான்.
* எல்லோருக்கும் பொதுவான நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் எப்படி சுலபமானதாக மாறும்?
பாடத்திட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு 7.5 சதவீதமாக இருக்கிறது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெறப்படும் 537 சீட்டுகளும், முழுக்க முழுக்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கானது. அதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.
குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியிலேயே படித்து முடித்த மாணவர்களே இந்த இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில், போட்டி வட்டம் சுருங்கி விடுகிறது. தன்னம்பிக்கை கூடிவிடுகிறது.
* நீட் தேர்விற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும்?
மனப்பாடம் என்பதை தவிர்த்துவிட்டு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை புரிந்து படித்தாலே போதும், சிறப்பாக தயாராகி விடலாம். இந்த பார்முலா உங்களது பிளஸ்-2 பொது தேர்வு மதிப்பெண்ணையும் அதிகரிக்கும். நீட் தேர்வில் வெற்றிப்பெறுவதற்கும் வழிகாட்டும்.
* குறிப்பாக எந்தெந்த பாடத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் இயற்பியல், வேதியியல், உயிரியல் இந்த மூன்று பாடத்திட்டங்களில் இருந்துதான், ‘கொள்குறி’ முறையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் உயிரியல் பாடத்தில் இருந்து, 360 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும். அதனால் உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் 12-ம் வகுப்பின் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் கவனம் செலுத்தினாலே, 500 மதிப்பெண்களை எடுத்துவிடலாம்.
* கடந்த வருட நீட் தேர்வில், அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்ற முதல் மதிப்பெண் எவ்வளவு?
பொது பிரிவு தேர்வர்களின் முதல் மதிப்பெண் 710. ஆனால் அரசுப்பள்ளி ஒதுக்கீட்டில் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களின் முதல் மதிப்பெண் 514 மட்டுமே. அதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயக்கம் காட்டக்கூடாது. ஏனெனில் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போடுவதில்லை. அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு போட்டி மற்ற அரசுப்பள்ளி மாணவர்களுடன் மட்டுமே என்பதை தெளிவாக உணர வேண்டும்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு என சிறப்பு நீட் பயிற்சி வழங்கப்படுகிறதா?
கடந்த இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. ஏனெனில் தேர்வு பணி, விடை தாள் திருத்தம் என ஆசிரியர்களின் பணி அட்டவணை பிசியாக இருக்கும் வேளையில், நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றன.
* நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் கடினமானதா?
பொது பார்வையில் சுலபமானதுதான். ஆனால் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பின்தங்கிய குடும்ப சூழலை கருத்தில் கொள்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொஞ்சம் குழப்பமானதாக தெரியலாம். மேலும் விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஒருசில அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே, இந்த பணியை ஆர்வமுடன் முன்னெடுக்கிறார்கள். மருத்துவம் பயில ஆசைப்படும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வின் மூலம் வழிகாட்டுகிறார்கள்.
* அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது எந்தெந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
இன்டர்நெட் மையங்களில் விண்ணப்பிக்கும்போது, பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்களை பொது பிரிவில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் தமிழக அரசின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு சலுகையை தவற விடுகிறார்கள். அதனால் ‘அரசுப்பள்ளி கோட்டா’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல ஓ.பி.சி.-என்.சி.எல். வகைப்பாட்டில் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., பி.சி.எம்.) வரும் அரசுப்பள்ளி மாணவர்கள் ‘ஆல் இந்தியா கோட்டா’ சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை பெறுவதற்கு, வருமான சான்றிதழ் அவசியம்.
* எவ்வளவு செலவாகும்?
பொது பிரிவினருக்கு ரூ.1600, ஓ.பி.சி. மற்றும் ஈ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.1500, எஸ்.சி./எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.900-ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ குறித்து நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
மருத்துவம் பயிலும் ஆசை, அரசுப்பள்ளி மாணவர் களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான், இந்த வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நீட் தேர்விற்கு பிறகு மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்திருக்கிறது. படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என்பதால் மருத்துவர் கனவை நனவாக்கலாம். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தலாம்.
இந்த ஆண்டிலிருந்து தேர்வு எழுதும் நேரமும், கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடக்கும் நீட் தேர்வை, தமிழ் வழியிலும் எழுதலாம்.
* நீட் தேர்வு எப்போது? விண்ணப்பிக்க கடைசி தேதி?
ஜூலை 17-தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, மே 6-ந் தேதி கடைசி நாள். பிளஸ்-2 பொது தேர்வுகள் மே 23-ந் தேதியோடு முடிவடைகிறது என்பதால், பொது தேர்விற்கு பிறகு நீட் தேர்வுக்கு தயாராக 54 நாட்கள் இருக்கின்றன. இதை அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேச மயம், முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment