Search

காய்கறி தோட்டம் அமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

 மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம், பால்கனியில் தோட்டம் என வீட்டின் எந்த பகுதியில் தோட்டம் அமைத்தாலும் செடிகளின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்து அவற்றின் இடம் மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். பலரது வீட்டுத் தோட்டத்திலும் அதிகளவு இடம் பெறுவது காய்கறி செடிகளே. பொதுவாக காய்கறி தோட்டம் அமைக்கும் போது நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை:


காய்கறி தோட்டம் அமைப்பதற்கு சிறிது பொறுமையும், அதிக நேரமும் தேவை. அதேநேரம், காய்கறி தோட்டத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். முதலில் வளர்க்க விரும்பும் காய்கறிகளின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். பின், அவற்றின் அளவை நிர்ணயம் செய்யுங்கள். வீட்டுக்குத் தேவையான அளவு எனில் அதற்கேற்றவாறு நம் நடவு முறையை மாற்றிக் கொள்ளலாம். முதன் முதலில் தோட்டம் அமைப்பவர்கள் புதினா, கொத்தமல்லி, கீரை, மிளகாய் மற்றும் தக்காளி போன்ற செடிகளில் இருந்து தொடங்கலாம்.

செடியின் வகையைத் தேர்வு செய்த பின்னர், அவற்றுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்; தேவையான சூரிய ஒளியின் அளவு, இடம் ஆகியவற்றை முன்னரே கணித்து பின் அந்த செடியை வளர்ப்பதற்கான இடத்தை நிர்ணயிக்க வேண்டும். சில காய்கறிச் செடிகள், கீரைச் செடிகளைஅதிக சூரிய ஒளியில் இருந்து காக்க, பச்சை வலையை செடியின் மேல் பொருத்தி, சிறிதளவு நிழலை உருவாக்கலாம். இது மணலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

திறந்தவெளியில் தோட்டம் அமைப்பவர்கள், காய்கறி செடிகளுக்கென தனியே ஒரு இடத்தை ஒதுக்கி அதில் மட்டும் காய்கறி செடிகளை வளர்க்கலாம். மாடித்தோட்டம் அமைப்பவர்கள், பெரிய டிரே அல்லது தொட்டிகளில் செடி வளர்ப்பை தொடங்கலாம். ஒரே தொட்டிக்குள் இரண்டு முதல் மூன்று வகைச் செடிகளை வளர்க்கலாம். பால்கனியில் செடி வளர்ப்பவர்கள், அடுக்கு வடிவிலான தோட்ட அமைப்பை பின்பற்றலாம். இது குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும்.



காய்கறி தோட்டம் அமைக்கும்போதே அதை எளிதாக பராமரிக்கும் வகையிலும், சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையிலும் வடிவமைப்பது அவசியம். காய்கறி செடிகளைச் சுற்றியோ, அருகிலோ பூச்செடிகள் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். இது காய்கறி செடிகளில் வளரும் களைகளை அப்புறப்படுத்த இடையூறை உண்டாக்கும்.

அடுத்து உரம். செடியைத் தேர்ந்தெடுக்கும்போதே அவற்றுக்குத் தேவையான உரம் குறித்தும் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை வீட்டில் உரம் தயாரித்து பயன்படுத்தலாம். உரத்துடன் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் தண்ணீர். காய்கறி தோட்டம் வைத்திருப்பவர்கள் சரியான நேர இடைவெளியில் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். இதற்கு சொட்டு நீர் அல்லது மிஸ்டு முறையைக் கூட பின்பற்றலாம். 

0 Comments:

Post a Comment