இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே எளிமையான வகையில் வருமானம் ஈட்டலாம். உங்கள் வருமானத்தின் அளவையும், வழியையும் தீர்மானம் செய்வது நீங்கள் எத்தகைய தொழிலை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதே. பெரும்பாலும் தினசரி பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு தொழில் தொடங்குவது உடனடி வருமானத்தை தரும். சிறிது அதிக உழைப்பு மற்றும் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீண்ட கால வருமானத்தை ஈட்ட முடியும். அவை குறித்து இங்கே பார்ப்போம்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பு:
தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் எளிதாக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணமாக தோசை மாவு, இட்லி பொடி, மசாலா பொடி மற்றும் ரெடிமேட் மிக்ஸ், லஞ்ச் பாக்ஸ் என்ற வீட்டு உணவு தயாரித்து விற்பனை செய்யலாம். குறைந்த முதலீடு, நேரம் மற்றும் உழைப்பின் மூலம் தினசரி வருமானம் பெற இது சிறந்தது. தொடர் வாடிக்கையாளர்களை பெற்ற பின்பு அதிக வருமானம் ஈட்ட முடியும்.
ஆன்மிகம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு:
உங்கள் பகுதியில் உள்ள பெண்கள் அல்லது உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து விளக்கு திரி, ஊதுவர்த்தி, சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் குங்குமம் போன்ற ஆன்மிகம் சார்ந்த பொருட்களை நீங்கள் தயார் செய்து விற்பனை செய்யலாம். இது நிரந்தர வருமானம் கிடைக்க சிறந்த வழி. இப்பொருட்களுக்கு என்றும் விலை குறைவு ஏற்படாது. தவிர, இப்பொருட்கள் தினசரி பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை எப்போதும் இருக்கும். அதேபோல் இத்தொழில் மூலம் உங்களுடன் சேர்ந்து உங்களைச் சார்ந்த அல்லது உங்களுடன் இணைந்து வேலை செய்பவர்களுக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்கும். மேலும், இவற்றின் முதலீடும் குறைவாகவே இருக்கும்.
இதர பொருட்கள்:
மெழுகுவர்த்தி, மேசை மற்றும் ஷோகேஸ் அழகுப் பொருட்கள், குளியல் மற்றும் துணி சலவை செய்யும் சோப், பவுடர்கள், வீட்டை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள், கால்மிதி, துடைப்பம், பேனா, வளையல், புத்தகம் மற்றும் பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டுகள், சருமத்துக்குப் பயன்படுத்தும் லோஷன், எண்ணெய், பவுடர், கிரீம்கள், ஜெல் மற்றும் கூந்தலுக்குப் பயன்படுத்தும் டை, ஷாம்பு மற்றும் கண்டிசனர் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம். தவிர, ஆடை வடிவமைப்பு, எம்பிராய்டரி, ஆரி மற்றும் இதர தையல் வேலைகள் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம். இவை தினசரி பயன்பாட்டுக்குத் தேவைப்படுபவையாக இருப்பினும், இதன் பயன்பாடு நீண்ட நாட்கள் வரை வரும். எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக தொழில் தொடங்கி சில காலங்களுக்குப் பின்னரே லாபம் கிடைக்கும். ஆகையால் உங்களுடைய தயாரிப்பு ஒரு நிலையான பெயரை அடையும் வரை காத்திருப்பது அவசியம்.
0 Comments:
Post a Comment