உடல் உணர்த்தும் நோய் அறிகுறிகள் - Agri Info

Adding Green to your Life

April 17, 2022

உடல் உணர்த்தும் நோய் அறிகுறிகள்

 நமது உடல் அபூர்வ ஆற்றல்களை கொண்டது. சில நோய்கள் தாக்குவதற்கு முன்னால், அறிகுறிகளை உணர்த்தி நம்மை விழிப்புடன் இருக்கச்செய்யும். அறிகுறிகளை உணர்ந்து உடனடியாக பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால் அந்த பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்துவிடலாம். உடல் உணர்த்தும் உண்மைகளில் கவனிக்கவேண்டியவை என்னென்ன தெரியுமா?



* நீண்ட தூரம் உட்கார்ந்து கால்களை தொங்க போட்டபடி பயணம் மேற்கொள்ளும்போது காலில் வீக்கம் ஏற்பட்டால், அது பயணத்தின் பாதிப்பால் ஏற்பட்டது என்று அலட்சியப்படுத்திவிடவேண்டாம். அது ஒருவேளை இதயத்தில் அல்லது சிறுநீரகத்தின் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கலாம். அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

* காலையில் தூங்கி எழுந்ததும் சிலருடைய முகம் வீங்கிய நிலையில் காணப்படும். ஒரு சில நாட்கள் அவ்வாறு காணப்பட்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி அவ்வாறு வீங்கி காணப்பட்டால், சிறுநீரக நோய் பாதிப்பை உணர்த்தும் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

* அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்பட்டால் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ரத்தசோகையோ, தைராய்டு பாதிப்பின் வெளிப்பாடாக அது இருக்கக்கூடும்.

* உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைகளை மேற்கொள்ளாமல் திடீரென்று உடல் எடை குறைந்தால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. சர்க்கரை நோய், புற்றுநோய், காசநோய் போன்றவைகளில் பாதிப்பு இருந்தால் உடல் எடை இழப்பு ஏற்படும்.

* தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது தலைவலி தோன்றினால், டாக்டரை சந்தித்து ரத்த அழுத்தத்தை பரிசோதியுங்கள்.

* உடல் எடை இழப்பு ஏற்படுதல், அதிக தாகம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலில் ஏற்படும் புண்கள் ஆறாமல் இருத்தல் போன்றவை ஏற்பட்டால், அவை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

* அடிக்கடி ஜீரணகோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாக தோன்றுதல் போன்றவை இருந்தால் அவை ஈரல் வீக்கத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

* கால் பாதம் வெடித்துக்காணப்படுதல், இளநரை போன்றவை ஏற்பட்டால் உடலில் பித்தம் அதிகரித்திருப்பதை உணர்ந்துகொள்ளலாம். கால் பெருவிரல் அல்லது கை பெருவிரல் முனைப்பகுதி சுருங்கி, வீக்கத்துடன் அவ்வப்போது வலித்துக்கொண்டிருந்தால் அது கவுட் என்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

* உடல் மெலிதல், முகம் சுருங்கிப்போகுதல் போன்றவை இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். இருமலே இல்லாமல்கூட காசநோய் ஏற்படுவதுண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* தொப்புளின் முன்பாகம் ஆப்பிளின் முன்பகுதி போன்று வீக்கத்துடன் காணப்பட்டால், அதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

* கர்ப்பகாலத்தில் ஒருசில பெண்களுக்கு திடீரென்று ஈறுவீக்கம் காணப்படும். அவர்கள் உடனடியாக டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும். அந்த பெண்களுக்கு உயர்ரத்தம் அழுத்தம் இருக்கவாய்ப்புண்டு. அவர்களுக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் சூழலும் உருவாகலாம்.

No comments:

Post a Comment