பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த, கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
``100 கிராம் மாங்காயில் 10 கிராம் கார்போஹைட்ரேட்டும், 44 கலோரிகளும் இருக்கும். நீரிழிவு உள்ளவர்கள் மாங்காய் சாப்பிடலாம். ஆனாலும் நாம் சாப்பிடும் அளவை கவனிக்க வேண்டியது முக்கியம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்கூட பச்சை மாங்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காய், முளைகட்டிய பயறு உள்ளிட்டவை சேர்த்த சாலட்டில் மாங்காயும் சிறிது சேர்த்துச் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதிலுள்ள நார்ச்சத்தும் நீரிழிவுக்காரர்களுக்கு நல்லதுதான். மாங்காய் சாப்பிடலாம் என்பதால் அதே விதி நன்கு பழுத்த மாம்பழத்துக்கும் பொருந்தாது. 100 கிராம் மாம்பழத்தில் 17 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதனாலேயே அது நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்றதென அர்த்தமில்லை.
`கிளைசீமிக் லோடு' என்றொரு வார்த்தை நீரிழிவுக்காரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
சாதம், மைதா உணவுகள் என கார்போஹைட்ரேட் உணவுகளை எடுக்கும்போது அதன் விளைவாக நம் உடலில் குளுக்கோஸின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசீமிக் லோடு.
எனவே, நீரிழிவு கட்டுக்குள் இல்லாதவர்கள், அதாவது ஹெச்பிஏ1சி (HbA1c ) அளவு 7-க்கு மேல் உள்ளவர்கள், அரிசி உணவுகள், மைதா உணவுகள், மாம்பழம் போன்றவற்றை உண்பதால் ரத்தச் சர்க்கரையின் அளவு இன்னும் அதிகரிக்கும். இன்சுலின் போட்டுக்கொள்வோர் என்றால் அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். எனவே நீரிழிவு உள்ளவர்கள், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு மாம்பழம் சாப்பிடலாம். அடுத்து எவ்வளவு சாப்பிடலாம் என்ற கேள்வி வரும். 2 நாள்களுக்கொரு முறை சிறிய மாம்பழத்தில் பாதி சாப்பிடலாம். நிச்சயம் தினம் சாப்பிடக்கூடாது.
மாம்பழம்
சிலருக்கு ஹெச்பிஏ1சி அளவானது 11 என்றெல்லாம் உச்சத்தில் இருக்கும். அவர்கள் மாம்பழத்துக்கு ஆசைப்படவே கூடாது. ஹெச்பிஏ1சி என்பது மூன்று மாதங்களில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு எப்படியிருக்கிறது என்பதற்கான அளவீடு. எனவே மாம்பழம் சாப்பிட ஆசைப்படுவோர், அதற்கு முன் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்துவிட்டால் பிரச்னை இல்லை."
No comments:
Post a Comment