Search

குறைந்த செலவில் உடல் எடையைக் குறைக்கலாம்

 பெரும்பாலான பெண்களின் முக்கிய பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்கது உடல் எடை அதிகரிப்பு. எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கங்களை மாற்றுவது, குறைந்த அளவிலான உணவுகளை சாப்பிடுவது என பல வழிகள் உள்ளன. 



இதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது உணவு முறை. இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குறைந்த செலவில் உடல் எடையைக் குறைப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவற்றை பார்ப்போமா...

1) காய்கறிகள்:
எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். வழக்கமாக காய்கறிகளை வாங்கும் இடங்களை விட, சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைவாக இருக்கும். அதனால், நேரடியாக உள்ளூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கினால் புதிய, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை குறைவான விலையில் வாங்கலாம்.

2) திட்டமிட்டு பொருட்களை வாங்குதல்:
பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும்போது தேவையற்ற பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொருட்கள் வாங்கும் முன்பு தேவையான மற்றும் சத்தான உணவு பொருட்கள் பற்றிய பட்டியலை தயாரிக்க வேண்டும். அதற்கு முன்பு வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை, ஒரு முறை சரிபார்த்து விடுவது நல்லது. வாங்கும் பொருட்களை காலாவதி தேதி முடிவதற்குள் பயன்படுத்த வேண்டும்.

3) ஊட்டச்சத்து நிறைந்த கலோரி குறைவான உணவுகள்:

பழங்கள்
ஆரஞ்சு, மாதுளை, கொய்யாப் பழம் மற்றும் ஆப்பிள் போன்ற கலோரி குறைவாக இருக்கும்  பழவகைகளில் புரதம் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகின்றன.

கீரைகள்
விலை மலிவான கீரைகளில் உடல் எடையைக் குறைப்பதற்கான சத்துக்கள் உள்ளன.  அவற்றை தினசரி உணவில் சேர்க்கும்போது கால்சியம் மற்றும் பொட்டாசியம் உடலில் அதிகரிக்கிறது.
காய்கறிகளில் கேரட், பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடியது.

4) இயற்கையாக கொழுப்பை கட்டுப்படுத்தும் மசாலாப் பொருட்கள்:
உடல் எடையைக் குறைக்க உதவும் மசாலாப் பொருட்களான வெந்தயம், மஞ்சள், மிளகு, லவங்கப்பட்டை, இஞ்சி, குடைமிளகாய், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மசாலாப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்.

5) சத்தான உணவுப் பழக்கம்:
அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் வேகவைத்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வறுத்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
 காலையில் காபிக்கு பதில் புத்துணர்ச்சியூட்டும் மூலிகை தேநீர் குடிக்கலாம். லெமன் டீ, கிரீன் டீ, இஞ்சி டீ, சீரக தேநீர், செம்பருத்தி தேநீர் மற்றும் மிளகுக்கீரை தேநீர் ஆகியவற்றை தாராளமாகப் பருகலாம்.
தயிரில் அதிகமான கலோரி இல்லாததால், காலை உணவுக்கு 3 கப் தயிர் சாப்பிட்டாலே உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

0 Comments:

Post a Comment