கோடைக்காலத்தில், வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக பெரும்பாலானவர்கள் ஏ.சி. பயன்படுத்துவார்கள். தொடர்ந்து அதிகப்படியான பயன்பாட்டால் மின்சாரக்கட்டணம் உயர்வதும் பரவலாக நடக்கும். சரியான முறையில் ஏ.சி.யை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
மாலை நேரத்தில், வீட்டில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து குளிர்ந்த காற்றை உள்ளே வர அனுமதிப்பதன் மூலம், அதிக நேரம் ஏ.சி.யை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
150 சதுர அடி அறைக்கு 1.5 டன் திறன் கொண்ட ஏ.சி. தேவை. எனவே அறையின் அளவை கணக்கீடு செய்து ஏ.சி.யை தேர்வு செய்ய வேண்டும்.
தற்போது சந்தையில் வந்துள்ள இன்வெர்ட்டர் ஏ.சி.களை பயன்படுத்துவதன் மூலம், மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்த முடியும். அது எவ்வளவு ஸ்டார் கொண்டது என்பதை அறிந்து, பின் ஏ.சி. நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது சிறந்தது.
பலர் ஏ.சி.யை 20 முதல் 22 டிகிரி வெப்பநிலையில் இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் 24 டிகிரிக்கு மேல் இயக்குவதே நல்லது. இதன் மூலம் ஆரோக்கியம் பாதிப்பதைத் தடுப்பதோடு, மின்சாரச் செலவையும் குறைக்க முடியும்.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை, ஏ.சி.யின் காற்று வடிகட்டியை சுத்தப்படுத்தவேண்டியது அவசியம். சரியான கால இடைவெளியில் ஏ.சி.யை பழுதுபார்ப்பது, தேவையற்ற செலவுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
இரவு பகலாக ஏ.சி.யை பயன்படுத்தும்போது, அறையில் உள்ள கதவு, ஜன்னல்களை அடைத்து, திரைச்சீலைகளைக் கொண்டு மூடி பயன்படுத்த வேண்டும்.
ஏ.சி. பயன்படுத்தும் அறையில் இரும்பால் செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அறையில் திறந்த நிலையில் உள்ள அலமாரிகளை பி.வி.சி. திரைகளைக்கொண்டு மூடுவது நல்லது.
புத்தகங்கள், துணிகள் போன்றவற்றை ஏ.சி. இயந்திரத்தின் நேர் எதிரே இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏ.சி. பொருத்தப்பட்ட அறையில், மேற்கூரையில் இயங்கும் மின்விசிறி பொருத்துவதைவிட, டேபிள் பேன் எனும் சுவற்றில் பொருத்தும் மின்விசிறி பயன்படுத்துவதே சிறந்தது.
தண்ணீர் வடியும் குழாயை சரியான முறையில் வடிகாலோடு இணைக்க வேண்டும். வடிகுழாய் மேலும் கீழும் இருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் மீண்டும் ஏ.சி. இயந்திரத்துக்கே வந்து, அறைக்குள் கொட்டுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
மேற்கூறிய குறிப்புகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏ.சி.யின் ஆயுள் காலத்தை அதிகப்படுத்துவதோடு, மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க முடியும்.
No comments:
Post a Comment