ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் இடைவெளிவிட்டு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இதுநாள்வரை சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், அப்படி நேரக் கட்டுப்பாடு வகுத்து, சாப்பிடுவதால் பெரும்பயன் விளையாது எனப் புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் குறைந்த கேலரி கொண்ட உணவை அல்லது நாளின் எந்த நேரத்திலும் அதே கேலரி கொண்ட உணவை உட்கொள்ளுமாறு ஓராண்டிற்கு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், அப்பழக்கம் உடல் எடைக் குறைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கண்டறியப்பட்டது.
நேரக் கட்டுப்பாடு வகுத்து உண்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதைத் தமது ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃ போர்னியப் பல்கலைக்கழகத்தின் உணவுத்திட்ட ஆய்வாளர் டாக்டர் ஈத்தன் வீஸ் தெரிவித்தார்.
கடந்த மாதத்தின் ‘நியூ இங்கிலாந்து மருத்துவச் சஞ்சிகை’யில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது.
சீனாவின் குவாங்சோ நகர தெற்கு மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்படும் 139 பேரை இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. பெண்கள் நாளொன்றுக்கு 1,200 முதல் 1,500 கேலரி வரையும் ஆண்கள் 1,500 முதல் 1,800 கேலரி வரையும் உட்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
ஓராண்டிற்குப்பின் அவர்களின் எடை சராசரியாக 6.35 கிலோ முதல் 8.16 கிலோ வரை குறைந்தது. ஆனால், இருவகை உணவுப் பழக்கங்களிலும் பெரிய வேறுபாடு காணப்படவில்லை.
ஆனால், இடுப்புச் சுற்றளவு, உடற்கொழுப்பு, உடற்தசை ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படவில்லை.
அதேபோல, இரத்தச் சர்க்கரை அளவு, இன்சுலினுக்கான உணர்திறன், இரத்தப் புரதங்கள், இரத்த அழுத்தம் ஆகியவற்றிலும் எந்த வேறுபாடும் இல்லை.
இதனையடுத்து, குறித்த நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவு கேலரி எடுத்துக்கொள்வதால் உடல் எடைக் குறைப்பில் பெரும்பயனை விளைவிப்பதில்லை என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
இப்படி நேர வரம்பிற்குள் உண்பதால் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த டாக்டர் வீச், கடந்த ஏழு ஆண்டுகளாக நண்பகல் தொடங்கி, இரவு 8 மணிக்குள் உண்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தமது முன்னைய ஆய்வில், ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்ணுமாறும் பசியெடுத்தால் இடையிடையே நொறுக்குத்தீனி சாப்பிடலாம் என்றும் டாக்டர் வீஸும் அவரின் குழுவினரும் 116 பேரைக் கேட்டுக்கொண்டனர்.
அதேபோல, இன்னொரு தரப்பினர் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் தாங்கள் விரும்பியதை உண்ணலாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
இருதரப்பினரின் உடல் எடையும் பெரிய அளவில் குறையாததை முடிவுகள் காட்டின. நேரக் கட்டுப்பாடு வகுத்து உண்டவர்களின் உடல் எடை சராசரியாக 0.9 கிலோவும் மூன்று வேளையும் உண்டவர்களின் எடை 0.6 கிலோவும் குறைந்திருந்தன.
ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து ஆய்வுகளின் இயக்குநர் பேராசிரியர் கிறிஸ்டோபர் கார்ட்னர், “கட்டுப்படுத்தப்பட்ட நேரகால உணவுகள் சந்தர்ப்பத்தில் வேலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,” என்று கூறுகிறார்.
“கிட்டத்தட்ட ஒவ்வொரு வகை உணவும் சிலருக்கு வேலை செய்கிறது,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment