‘பகலில் தூங்கினால் உடல் எடை அதிகரித்துவிடும்’ என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அது தவறு.
வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, நீண்ட நேரம் தூங்கினால்தான் ஆபத்து. வீட்டில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, பகல் நேர தூக்கம் தவிர்க்க முடியாதது. இன்று பெரும்பாலான இல்லத்தரசிகள் பகல் நேர தூக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், பணியாற்றுபவர்கள் கூட, விடுமுறை நேரத்தில் பகல் நேர தூக்கத்தை கடைப்பிடிப்பது உண்டு.
நாம் இரவில் 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவோம். குளிர் காலத்தில் பகலில் தூங்குவதற்கும், கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் தூங்குவதற்கும் வேறுபாடு உண்டு. கோடைக்காலத்தில் பகல் நேரம் அதிகமாக இருக்கும் மற்றும் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் மூளை சோர்வடையும்.
காலை முதல் மதியம் வரை மூளை மற்றும் உடலிற்கு அதிக வேலை கொடுக்கும்போது, சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் 15 நிமிடம் தூங்கினால் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகிவிடும்.
ஒரு சிலர் உடல் உழைப்பு இல்லாமல், மூளைக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய வகையிலான பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிக சோர்வின் காரணமாக, சில சமயங்களில் மூளை உறக்க நிலைக்குக் கொண்டு செல்லும். இவ்வாறு தானாகவே உறக்கம் வரும் நேரத்தில், பத்து நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. இதனால் உடல் எடை அதிகரிக்காது. பகலில் சிறிது நேரம் தூங்குவதால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும். பகலில் தூங்குவது இதயத்திற்கு நல்லது. ரத்த அழுத்தம் குறையும். நினைவாற்றலை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், மனநிலையை சீராக வைக்கவும் உதவும்.
கோடைக்காலத்திலும், உடல் உழைப்பே இல்லாமல் பகல் பொழுதில் தூங்கினால், நோய்களுக்கான களமாக உடல் மாறி விடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேவையான அளவு உழைப்பை உடல் மேற்கொண்டு விட்டது எனும் பட்சத்தில், சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
அதற்காக வெகுநேரம் தூங்க வேண்டாம். மதிய வேளையில் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடம் வரை மட்டுமே தூங்குவது நல்லது. அதற்கு மேலே தூங்கினால், ஒரு கட்டத்தில் மதிய தூக்கத்திற்கு உடல் அடிமையாகி விடும்.
No comments:
Post a Comment