இன்றைய சூழலில் உடல் எடையைக் குறைப்பது பலருக்கும் சவாலாக உள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். மருத்துவ மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களும் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஜப்பானியர்கள் அறிமுகம் செய்த 'டவல் உடற்பயிற்சி' பற்றி தெரிந்துகொள்வோம். வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க இந்தப் பயிற்சி உதவுகிறது. ஜப்பானின் புகழ்பெற்ற மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி புகுட்சுட்ஸியால் இந்தப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இது உடல் எடையைக் குறைப்பதுடன், முதுகு வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான சதை மற்றும் உடல் எடை குறையும். 'டவல் உடற்பயிற்சி'
செய்முறை:
1. கை, கால்களை நன்றாக நீட்டி தளர்த்திய நிலையில், தரையில் விரிக்கப்பட்ட பாயின் மேல், மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக்கொள்ளுங்கள்.
2. தொப்புளுக்கு நேர் கீழே, முதுகுக்கு அடியில், ஒரு டவலை நன்றாக சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
3. கால்கள் இரண்டையும் 10 செ.மீ. இடைவெளியில் நகர்த்தி, தோள்பட்டை தரையில் படுமாறு வைத்திருங்கள்.
4. கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையைப் பார்த்தவாறு இருப்பதுபோல் செய்யுங்கள்.
5. இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருக்க வேண்டும். பிறகு உடலை மெதுவாகத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வரவும்.
மேலே குறிப்பிட்ட முறைப்படி தொடர்ந்து பயிற்சி செய்தால், விரைவாக உடல் எடை குறையும் என மருத்துவர் தோஷிகி கூறுகிறார்.
எடைக் குறைப்பு விஷயத்தில், மேற்கொள்ளும் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
அவ்வாறே, இந்த டவல் உடற்பயிற்சியினைத் தினமும் செய்தால் சரியான உடலமைப்பைப் பெற முடியும். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமின்றி, உணவிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
துரித உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், குறைந்த கலோரி கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். தேவையான தண்ணீர் குடித்து, முறையாக உடற்பயிற்சி செய்து, சரியான நேரத்தில் தூங்கி எழுந்து, மனஅழுத்தம் இல்லாமல் வாழ்ந்தால், உடல் இளமையாகவும், அழகாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment