இன்றைய வாழ்க்கை முறையில் பலவித நோய்கள் நம்மை பாதிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் பின்பற்றும் உணவு முறை என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பல நேரங்களில் நமக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகிறது. இதை நாம் சாதாரண ஒன்றாக கருதிவிடுகிறோம்.
ஆனால், இது உங்களின் கணையத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பாக கூட இருக்கலாம். கணையம் என்பது வயிற்றில் உள்ள ஒரு முக்கிய உறுப்பு ஆகும். இது வயிற்றின் கீழ் பகுதிக்கு பின்னால் உள்ளது. இது செரிமான செயல்முறைக்கு உதவும் நொதிகளை வெளியிடுகிறது மற்றும் ரத்த சர்க்கரையை நிர்வகிக்க தேவையான ஹார்மோன்களை இது உற்பத்தி செய்கிறது.
இந்த உறுப்பில் தான் செரிமான பாதிப்புகளின் அறிகுறியாக கணைய புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த வகை புற்றுநோயின் அபாயங்கள் பல்வேறு காரணிகளால் ஏற்படகிறது. வயது, புகைபிடித்தல், அதிக எடை, கணைய புற்றுநோயின் குடும்ப வரலாறு மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல காரணிகளால் கணைய புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.
கணைய புற்றுநோய் அறிகுறிகள் பொதுவாக ஆரம்ப கட்டங்களில் ஏற்படாது, ஆனால் புற்றுநோய் செல்கள் வளரும் போது இதற்கான அறிகுறிகள் தென்படும். எனவே உங்களுக்கு ஏதேனும் புதிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பது அவசியம். கணைய புற்றுநோயால் ஏற்படக்கூடிய அஜீரணத்தின் சில அறிகுறிகள் உள்ளன. அஜீரணம் என்பது பலருக்கு பொதுவான பிரச்சனையாகும், பெரும்பாலானவர்களுக்கு இது புற்றுநோயின் அறிகுறி அல்ல.
இருப்பினும், இது நீண்ட காலமாக தொடர்ந்து இருந்தால் அல்லது மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் சரியாகவில்லை என்றால், கணைய புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் அஜீரணத்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட கூடும். இது உங்கள் மார்பில் வலி மற்றும் எரியும் உணர்வை தரும். அத்துடன் இது உங்கள் வாயில் கசப்பான, வித்தியாசமான சுவையையும் உண்டாகும். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஜீரணம், பசியின்மை மற்றும் குமட்டல் ஆகியவை பொதுவானவை.
இந்த புற்றுநோயானது உங்கள் உடலின் உணவை ஜீரணிக்க மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை பாதிக்கும் போது இந்த அறிகுறிகள் ஏற்படும். அத்துடன் செரிமான செயல்முறைகளை மெதுவாக்கும் போது இந்த அறிகுறிகள் ஏற்படலாம். அஜீரண கோளாறுகளை தவிர, வலியும் கணைய புற்றுநோயின் பொதுவான அறிகுறியாக உள்ளது. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 7 பேர் வலியை அனுபவிப்பதால் தங்கள் மருத்துவர்களிடம் செல்வதாக புற்றுநோய் ஆராய்ச்சிகள் கூறுகிறது.
இந்த வலி வயிற்றில் தொடங்கி முதுகிலும் பரவலாம். மேலும் நீங்கள் படுக்கும்போது இந்த வலி மோசமாகிவிடும், நீங்கள் முன்னோக்கி உட்காரும்போது நன்றாக உணரலாம். உங்கள் உணவை சாப்பிட்ட பிறகும் இது மோசமடையலாம். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு முதுகுவலி மட்டுமே ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருக்கும் மற்றும் பெரும்பாலும் முதுகின் நடுவில் உணரப்படும்.
ஒருவேளை வலி இல்லை என்றால், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு முதலில் மருத்துவர்களைப் பார்க்கச் செல்லும்போது மஞ்சள் காமாலை இருப்பதாக அறியலாம். பித்தத்தில் நிறைய மஞ்சள் நிறமிகள் இருப்பதால் சருமத்தை மஞ்சள் நிறமாக்கும். மேலும் கண்களின் நிறத்தின் மூலம் அறியலாம். கணைய புற்றுநோயின் வேறு சில அறிகுறிகளாக கருதப்படுபவை, மிகவும் சோர்வாக உணர்தல் அல்லது ஆற்றல் இல்லாமை போன்று உணர்வது ஆகும். மேலும், அதிக உடல் வெப்பநிலை, நடுக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மலத்தில் ஏற்படும் பிற மாற்றங்கள் ஆகியவையும் இதற்கான அறிகுறியாகும்.
No comments:
Post a Comment