கோடை காலத்தில் தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சுற்றுலா அல்லது உறவினர் வீடுகளுக்கு செல்வதற்கு பெரியவர்களும், குழந்தைகளும் ஆர்வமாக இருப்பார்கள். கொரோனா தொற்றை சமாளித்து மீண்ட இன்றைய சூழலில் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சுற்றுலா பயணத்திற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போது சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, போர்வெல் மோட்டார் சுவிட்ச், தண்ணீர் குழாய்கள், அறைகளில் ஒளிரும் மின்விளக்குகள் ஆகியவை அணைக்கப்பட்டிருப்பதை ஒருமுறைக்கு, இருமுறை பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயணங்களின்போது குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் உடன் இருந்தால், அவர்களுக்கு தேவையான வசதிகளை முன்னதாக திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார மொழி, அங்குள்ள தகவல் தொடர்பு வசதிகள், தங்குமிடம் ஆகியவற்றில் கவனம் வேண்டும். கோடைகாலம் என்பதால் பருத்தி ஆடைகளே நல்லது. மேலும், வெப்பத்தை ஈர்க்கும் அடர்ந்த நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். காரில் செல்பவர்கள் வெயில் அதிகம் இல்லாத காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிக்கலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஓய்வெடுப்பது கட்டாயம். பயணம் செல்லும் வழித்தடங்களில் எங்கெங்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன என்பதையும், வாகன பழுது பார்ப்பு வசதிகள் கிடைக்கும் என்பதையும் அறிந்திருப்பது அவசியம்.
வெளியிடங்களில் சாப்பிடும்போது அசைவ உணவுகள், பழக்கமில்லாத புதிய ரெசிபிகள், எண்ணெய்யில் வறுத்த சிற்றுண்டிகள் ஆகியவற்றை உண்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பயணங்களின்போது ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவு வகைகளே உடல் நலனுக்கு ஏற்றது. வெளியூர் பயணங்களின்போது அவசரத் தேவைக்காக முக்கிய மருந்துகள் அடங்கிய சிறிய முதலுதவி பெட்டியை எடுத்துச்செல்வது அவசியம். அதில், அன்றாடம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தகுந்த அளவுக்கு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான டயாப்பர், பால், பிஸ்கட் ஆகியவற்றை தேவையான அளவு கொண்டு செல்வது நல்லது.
ரெயில் பயணங்களின்போது மற்றவர்கள் தரும் பானங்கள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. கொரோனா தாக்குதல் முற்றிலும் அகலாத நிலையில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், நெரிசலில் இருந்து ஒதுங்கியிருத்தல், ரெயில் பெட்டிகளில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட இதர பகுதிகளை அவசியமில்லாமல் தொடுவதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கவும். அவ்வாறு தொட நேர்ந்தால் சானிட்டைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
No comments:
Post a Comment