TNPSC EXAMS | வெற்றிக்கான மூன்று சூத்திரங்கள்! | TNPSC போட்டித்தேர்வு - Agri Info

Adding Green to your Life

June 3, 2022

TNPSC EXAMS | வெற்றிக்கான மூன்று சூத்திரங்கள்! | TNPSC போட்டித்தேர்வு

 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் புதிய பகுதி ‘வெற்றி மேடை உனதே’. வருமான வரித் துறை கூடுதல் ஆணையரும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியாளருமான வீ.நந்தகுமார் ஐஆர்எஸ், நல்ல பல வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை இத்தொடரில் உங்களுக்காக வழங்க உள்ளார். வாசிக்கத் தயாராகுங்கள். இனி, ‘வெற்றி மேடை உனதே!’

- 1 -

போட்டித் தேர்வு எனும் பந்தயக் களத்தில் இருவேறு மாணவர்களை சந்தித்துக்கொண்டே வருகிறேன். இதில் வெல்பவர்களைவிட தோற்பவர்களே அதிகம். அவர்களை தோல்வியாளர்கள் என்பதைவிட வெற்றியைவிட்டு சற்று விலகி நிற்பவர்கள் என்றே கூறவேண்டும். ஏனென்றால், இந்த பிரபஞ்சத்தில் தோற்றவர்கள் என்று யாருமே கிடையாது. மனிதனாகப் பிறப்பெடுத்ததே உயிரியல் உலகில் ஓர் உயிரணுவின் வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.

அப்படி வெற்றியைவிட்டு விலகி நிற்பவர்களிடம் பேசும்போது அவர்கள் கூறுவது, பொதுவான காரணங்களாகவே உள்ளன. ‘‘பயிற்சி வகுப்புக்குசெல்ல முடியவில்லை, பயிற்சிக்கான புத்தகங்கள் கிடைக்கவில்லை, சரியான வழிகாட்டுதல் இல்லை, தொடர் பயிற்சி எடுக்க முடியவில்லை, நேரம் போதவில்லை..’’ என்பன போன்ற சுய காரணங்கள் முதல் ரகம்.

‘‘நன்றாகத்தான் படித்தேன், எதிர்பார்த்த மாதிரி வினாத்தாள் இல்லை, என் சூழ்நிலை சரியில்லை..’’ என்பன போன்ற சூழ்நிலை காரணங்கள் இரண்டாவது ரகம்.

இதையும் தாண்டி சிலர் சொல்லும் காரணம் ஒன்று உண்டு. ‘‘நன்றாகத்தான் எழுதினேன், சூழ்நிலையும் ஒத்துழைத்தது. ஆனால் என் கெட்ட நேரம் 2 மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்துவிட்டேன்’’ என்பார்கள்.

100 கேள்விகள் கொண்ட ஒரு தேர்வை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை அதில் 50 கேள்விகளுக்கு சரியாக விடையளித்து, 50 மதிப்பெண் பெற்றால் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்று விடலாம் என்றும் வைத்துக்கொள்வோம். தோற்றவரிடம் கேட்டால், ‘‘48 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தேன். ஜஸ்ட் 2 மார்க்குல போய்டுச்சு’’ என்பார்.

இதுபோன்றவர்களின் இலக்கு குறைந்தபட்ச தேவை எதுவோ, அதை நோக்கியே இருந்திருக்கிறது. 50 எடுத்தால் தேர்ச்சி என்றால், அந்த 50-ஐ நோக்கியே பயணிப்பார்கள். 70, 80 என்பது இவர்களது இலக்காக இருப்பதில்லை.

பார்க்கப்போனால், முழு மதிப்பெண் 100 என்றால், நமது இலக்கும் அந்த உச்சபட்ச எல்லையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச எல்லையை உறுதியாக எட்ட முடியும்.

எவ்வளவு கட்-ஆஃப் மதிப்பெண்ணோ, அதை மட்டும் எட்டினால் போதும் என்று நினைப்பவர்களின் அணுகுமுறையில் நிறைய தடைகள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். அந்த தடைகளை எப்படி உடைப்பது என்பதை, நீண்ட நாள் போட்டித் தேர்வு பயிற்சி அளித்த என் அனுபவங்களில் இருந்து கற்றுத்தர விரும்புகிறேன்.

எந்தெந்த காரணங்களால் போட்டித் தேர்வில் தோல்விகள் நேர்கிறது? அவற்றை எப்படி களைவது என்பதை சொல்வதுடன், வெற்றிக்கான காரணங்கள் எவை என்பது பற்றியும் சொல்லித்தர விரும்புகிறேன்.

வெற்றிக்கான சூத்திரங்கள் மூன்றுவழிகளில் காத்திருக்கின்றன. ஒன்று,கவனக் குவிப்போடு தயாராவது, இரண்டாவது, பயிற்சி எடுத்துக்கொண்டு தயாராவது, மூன்றாவது நாம் படிப்பதெல்லாம் தேர்வில் வருமா என்பதை கணித்து தயாராவது.

ஆக, எந்த ரூபத்திலாவது நாம் வெற்றியின் பக்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணமே, போட்டித் தேர்வர்கள் மனதில் கொள்ளவேண்டிய பிள்ளையார் சுழி.

இக்கட்டுரையில் வெற்றிக்கான சிந்தனை, வெற்றிக்கான செயல் இரண்டையும் பார்ப்போம்.

முதலில் போட்டியாளர்கள் பற்றிபார்ப்போம். பொதுவாக, பள்ளிப்பருவத்தில் இருந்தே போட்டி என்று வந்துவிட்டால் குறிப்பிட்ட ஒருசிலரே பெயர் கொடுப்பதை பார்த்திருப்போம். போட்டிக்கென்று பிறந்தவர்கள் போலவே இருப்பார்கள். அவர்கள் பெயர் கொடுக்காவிட்டாலும், ஆசிரியர்களே அவர்களது பெயரை எழுதிக்கொள்வார்கள். 40 பேர் கொண்ட ஒரு வகுப்பில், போட்டிகளில் பங்கேற்பவர்கள் 7, 8 பேர்தான் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.

அப்படி வேடிக்கை பார்ப்பவர்கள்கூட, பின்னாளில் படித்து முடித்து வேலைக்கு என்று முயற்சிக்கிறபோது பிறரோடு போட்டி போட்டுத்தான் ஆகவேண்டி உள்ளது.

ஆனால் பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுக்கும்போது, பேச்சுத் திறமையுள்ள மாணவனைப் பார்த்து தயங்கி, நாம் பெயர் கொடுக்காமல் ஒதுங்கிப் போவதுபோல, போட்டித் தேர்வுகளிலும் யாரோ ஒரு அறிவாளியோடு நாம் போட்டி போட வேண்டி இருக்குமோ என்று பயந்து, போட்டித் தேர்வுகளை கண்டு தப்பித்து ஓடுகிறோம்.

உண்மையில் இங்கு 3 விதமான போட்டியாளர்களே உண்டு. ஒன்று, அறிவிப்பு வெளியானதும் விண்ணப்பித்துவிட்டு, பின்பு ஏறத்தாழ மறந்துவிட்டு கடைசி நாளில் பெயருக்கு படித்துவிட்டு தேர்வுக்கு செல்பவர்கள்.

இரண்டாவது, விண்ணப்பித்தபிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து தயாராகிறவர்கள்.

மூன்றாவது, விண்ணப்பித்த நாளில் இருந்தோ, அல்லது அதற்கும் முன்பிருந்தோ, தமது எண்ணம், செயல், நேரம் அனைத்தையும் அர்ப்பணித்து தேர்வுக்கு என்றே தயாராகும் ஒரு சிறிய குழுவினர்.

இந்த மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே. இவர்கள் எல்லாம் கவனக் குவிப்போடு கடமையாற்றுபவர்கள்.


No comments:

Post a Comment