20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகாலையில் பலர் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சியை காண முடிகிறது. வார இறுதி நாட்களில் குழுக்களாக இணைந்து இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போது எல்லாம் இசிஆர் சாலைகளில் சைக்கிள் ரைடு செல்கிறார். இவ்வாறு நாடு முழுவதும் சைக்கிள் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இவ்வாறு சைக்கிள் ஓட்டும் பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 3 உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பசுமை இல்ல வாயு: காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கையில் மிக முக்கியமானது பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது ஆகும். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்றும் ஐபிசிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகத்தில் வெளியாகும் கார்பனில் 24 சதவீத கார்பன், மேட்டார் வாகனங்களில் இயக்கத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. எனவே, இதற்கு மாற்றான போக்குவரத்து முறையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து: கார்பன் அளவை குறைக்க இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்தி வருகிறது. இதன்படி நகரங்களில் சைக்கிள் ஓட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைத் தவிர்த்து மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுளளது.
உலக சைக்கிள் தினம்: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாப்படுகிறது. உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதால் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க ஆண்டுதோறும் சைக்கிள் தினம் கொண்டாடப்படும் என்று 2018-ம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
150 கிராம் கார்பன்: சைக்கிளில் இருந்து எந்த வாயுவும் வெளியாவது இல்லை. ஒருவர் தனது காரை விட்டு விட்டு சைக்கிளை பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஓரு கிலோ மீட்டருக்கு 150 கிராம் கார்பன் வெளியாவதை தடுத்துள்ளார். 7 கி.மீ சைக்கிள் ஓட்டினால் 1 கிலோ கார்பன் வெளியாதை தடுக்கிறார். எனவே, கார்பன் வெளியாதை தடுப்பதில் சைக்கிள் பயன்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
தொற்றா நோய்கள்: வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக மனிதர்கள் உடற்பயிற்சி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், சர்க்கரை நோய்களின் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே, உலகம் முழுவதும் உடற்பயிற்சி அவசியத்தை உணர்த்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சைக்கிளிங் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் தினசரி 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் வாரத்திற்கு 1,000 கலோரிகளை எரித்து உடல் நலத்துடனும், 1 கிலோ கார்பனை குறைத்து சுற்றுச்சூழல் நலமாக இருக்க உதவுவோம்.
No comments:
Post a Comment