ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம்.
1. செரிமானத்தை மேம்படுத்தும்
பப்பாளி பழத்தில் புரதத்தை ஜீரணிக்க உதவும் சைமோபாபைன் மற்றும் பபைன் போன்ற என்சைம்கள் இருப்பதால், செரிமான செயல்முறை எளிதாக நடைபெறும். மலச்சிக்கல் மற்றும் குடல் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு உண்டு. மேலும் பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
2. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்
புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாக்கும் ஆற்றலும் பப்பாளிக்கு இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. அது ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள லைகோபீன், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் பீட்டா கரோட்டினுடன் இணைந்து அத்தகைய புற்றுநோயை தடுக்கக்கூடியது. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்துக்கு ஆரோக்கியம் சேர்ப்பதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் தவிர்க்கலாம்.
3. இதயத்தைப் பாதுகாக்கிறது
பப்பாளி, இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதற்கும் ஊக்குவிக்கிறது. பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது.
4. மூளையை பாதுகாக்கும்
மூளை செல்களை சிதைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் நோய், அல்சைமர். அறிவுசார் திறன்களை இழக்க செய்துவிடும் ஒருவகை நரம்பியல் கடத்தி நோயும் கூட. பிரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளுக்கு இடையே சம நிலையின்மை நிலவுவதன் விளைவாக செல்கள் சேதம் அடைகின்றன. பப்பாளி மற்றும் புளித்த பப்பாளி சாற்றை உட்கொள்வதன் மூலம், ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால் பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் நோயின் வீரியத்தை குறைக்கலாம்.
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியமானது.
6. கண்களை பாதுகாக்கும்
உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக கண்கள் இருப்பதால் அவற்றை பாதுகாப்பது முக்கியமானது. பப்பாளி, தசை சிதைவு போன்ற நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. இதுமட்டுமல்லாமல் பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இது கார்னியாவை பாதுகாக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்திருப்பதால் விழித்திரை சிதைவை குறைக்கவும், பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
7. வலியை குறைக்க உதவும்
இயற்கை வலி நிவாரணியாக செயல்படும் பப்பேன் என்ற நொதி பப்பாளியில் இருக்கிறது. இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், சில வகையான வலிகளை குறைக்கவும் உதவும். மேலும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட பாபாயின் இருப்பதால், கீல்வாதம் காரணமாக ஏற்படும் மூட்டு வலியை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment