சமீப காலமாக எவ்வித அறிகுறிகளும் இன்றித் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலரும் சட்டென்று மரணித்துவிடுகிறார்கள். இப்படித் தாக்குவது அமைதியான மாரடைப்பு (Silent heart attack) எனப்படுகிறது.
மாரடைப்புடன் தொடர்புடைய அறிகுறிகளோ லேசான அறிகுறிகளோகூட இதில் இருக்காது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாகவே அமைதியான மாரடைப்பைத் தடுக்க முடியும்.
முக்கிய ஆபத்துக் காரணிகள்
சர்க்கரை, உப்பு, கொழுப்பு சேர்ந்த உணவை அதிகமாகச் சாப்பிடுவது இதயத்தைப் பாதிக்கும் நோய்களைப் பெருமளவில் ஏற்படுத்துகிறது.
நோய்த் தடுப்புக்கான ஆலோசனை பெறுவதில் சுணக்கம்
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு ஆகியவை இதயத்திற்கு ஆபத்தானவை. இருப்பினும், பெரும்பாலான நோயாளிகள் இந்த நிலைமை முற்றும்வரை சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்.
உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறை
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4,297 காலடிகள் மட்டுமே நடக்கிறார்கள். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிதமான நடைப்பயிற்சியைவிட இரண்டு மடங்கு அதிகமான நடைப்பயிற்சியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மன அழுத்தம்
அழற்சி ஹார்மோன்களை வெளியிடுவதன் மூலம் மன அழுத்தம் இதயத்தை நேரடியாகப் பாதிக்கலாம். மேலும், மன அழுத்தம் மோசமான உணவு, வாழ்க்கை முறை ஆகிய தேர்வுகளுக்கு வழிவகுத்து, இதயத்தை மறைமுகமாகவும் பாதிக்கலாம்.
கோல்டன் ஹவர்
கோல்டன் ஹவர் என்றும் அழைக்கப்படும் மாரடைப்புக்குப் பிறகான முதல் 60 நிமிடங்கள் முக்கியமானவை. அந்த 60 நிமிடத்துக்குள் ரத்த விநியோகத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும். அது இதயத் தசையைக் காப்பாற்றவும் மரணத்தைத் தடுக்கவும் உதவும்.
புகை பிடித்தல்
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின்படி, புகைப்பிடித்தல் தொடர்பான 5 இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது. 16 முதல் 64 வயதுக்கு உட்பட்ட 25 கோடி புகைப்பிடிப்பவர்களுடன் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாகச் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மாரடைப்பு வந்தால் என்னசெய்ய வேண்டும்?
# தீவிர சோர்வு, நெஞ்சு வலி போன்ற எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் அல்லது கைகளில் வலி ஏற்பட்டாலும் அவற்றை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது
# இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும் தசை சேதத்தைக் குறைக்கவும் கூடிய விரைவில் மருத்துவமனைக்குச் செல்வது முக்கியம். வாகனத்தை ஓட்ட வேண்டாம். ஆம்புலன்ஸை அழைப்பது நல்லது அல்லது வாகனத்தை ஓட்டுவதற்கு அருகிலுள்ள ஒருவரை அழைக்க வேண்டும்.
# ரத்த உறைவைத் தடுக்க, ஆஸ்பிரின் மாத்திரையை (Ecosprin, Sprin, Aspro, Eprin, Delisprin என்ற பிராண்ட் பெயர்களிலும் கிடைக்கும்) எடுத்துக்கொள்ள வேண்டும். நெஞ்சு வலி இருந்தால், வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம். மருத்துவரை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிந்தால், நிலைமையை நேரடியாக விளக்கித் தகுந்த ஆலோசனையை அவரிடம் பெறலாம்.
# சில நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தால், மருத்துவரிடம் விரைந்து செல்லுங்கள். தொடர்ச்சியான வலி, ஆரோக்கியமான அறிகுறி அல்ல. ஒருவேளை அது இதய நோய் இல்லை என்றால், வேறு ஏதோ ஓர் ஆபத்தை உணர்த்தும் அறிகுறி என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அமைதியான மாரடைப்பைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கையும் அது பற்றிய விழிப்புணர்வும் முக்கியமானது. அந்த வகையில் கவனமாக இருந்தால் அமைதியான மாரடைப்பைத் தடுக்கலாம்.
No comments:
Post a Comment