எது வெற்றி என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஆசைப்பட்டதை அடைவது, கனவுகளை நனவாக்குது, போட்டிகளில் ஜெயிப்பது, எதிலும் முன்னணியில் நிற்பது,
தேர்வில் வெற்றிபெறுவது, நல்ல வேலையில் சேருவது, பதக்கங்களை வெல்வது, பிசினஸ், அன்பான குடும்பம், நிறைய பணம், சொந்த வீடு, கார், பங்களா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி வெற்றியின் நிறைவு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. உண்மையான வெற்றி எது என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது. அதை அவரவரே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் திறமையானவரா இல்லையா என்பதை நீங்கள் அடையும் வெற்றியைப் பொறுத்துத்தான் இந்த உலகம் உணர்ந்துகொள்கிறது.
உயர்ந்த நோக்கம், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம், கடினமான உழைப்பு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, சரியான திட்டமிடல், நம்மால் முடியும் என்ற நம்பிக்கை. இந்த ஆறு விஷயங்களை நாம் கடைபிடித்தாலேயே போதும். வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. வெற்றி நம்மைத் தேடி வரும்.
இலக்கு
நம்முடைய இலக்கு எது என்று நாம் முதலில் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நம் வெற்றிக்கான இலக்குதான், நாம் என்ன செய்யப் போகிறோம், எதில் நாம் வெற்றிபெறப் போகிறோம், எதில் நாம் சாதிக்கப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும். அந்த இலக்கை அடைய நாம் மேற்கொள்ளும் வழிமுறைகள்தாம் நமக்கு வெற்றியைத் தரும்.
உயர்ந்த நோக்கம்
நாம் வெற்றிபெற நமது நோக்கம் முக்கியப் பங்காற்றுகிறது. நமது நோக்கம், எண்ணம், ஆசை உயர்ந்ததாக இருக்க வேண்டும். இவை நம்மை வெற்றியின் பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.
பணக்கார இளைஞன் ஒருவன் விலையுயர்ந்த தன் காரின் அருகே நின்றுகொண்டிருந்தான். ஏழைச் சிறுவன் ஒருவன் அந்த காரையே ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். பணக்கார இளைஞன் சிரித்துக்கொண்டே, “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது” என்றான். சிறுவன் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” அந்த இளைஞன் கேட்டான். ஏழைச் சிறுவன் சொன்னான், “இல்லை! அப்படியோர் அண்ணனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”.
அந்தச் சிறுவனைப் போன்ற உயர்ந்த நோக்கம்தான் நமக்குத் தேவை.
வாங்கும் இடத்தில் இல்லாமல் வழங்கும் இடத்தில் இருப்பதே சிறந்தது என்பதை அந்தச் சிறுவன் உணர்ந்திருக்கிறான். அந்தச் சிறுவனைப் போல நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
உத்வேகம்
நம் ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் வேண்டும். அந்த உத்தேகம்தான், பின்னர் நாம் அடையப்போகும் வெற்றிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது.
சரியான திட்டமிடல்
வெற்றி பெற முக்கியத் தேவை, சரியான திட்டமிடல். வெற்றியை நோக்கி நாம் முதல் அடியை எடுத்துவைப்பதற்கு முன்பே, வெற்றியின் இலக்கை அடையும் பாதையைச் சரியாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிடல் இல்லாத எந்த ஒரு பயணமும் சரியான இலக்குக்கு நம்மைக் கொண்டுபோய் சேர்க்காது! சரியாகத் திட்டமிடுங்கள். திட்டமிடுவதற்கு முன் பலமுறை யோசனை செய்யுங்கள்.
கடின உழைப்பு
சரியான இலக்கை நிர்ணயித்தல், உயர்ந்த நோக்கம், சரியான திட்டமிடல், கடின உழைப்பு ஆகியவை இருக்க வேண்டும்.
உழைப்பு இல்லாத இலக்கு, நோக்கம், திட்டமிடல் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போன்று பயனற்றது. இப்போது நாம் கடுமையாக உழைத்தால்தான் அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்.
நம்பிக்கை
நம்பிக்கை, எரிபொருள் போன்றது. அது இருக்கும்வரை நம்மை இயக்கிக்கொண்டே இருக்கும். வெற்றியை நோக்கிய நமது பயணம் சுலபமாக இருக்கும். தன்னம்பிக்கை இல்லாத முயற்சி, எரிபொருள் இல்லாத வாகனம் போன்றது. ஒரே இடத்தில் தேக்கிவிடும். நம் மீது நாம் நம்பிக்கைவைக்காமல் வேறு யார் வைக்க முடியும்?
ஒரு மனிதனை ஒரே ஒருவரால் மட்டுமே உள்ளும் புறமும் அறிந்திருக்க முடியும். அந்த மனிதனின் பலம், பலவீனங்களை அறிந்திருக்க முடியும். அந்த நபர், அவரேதான்! பலவீனத்தை உதறுவோம். பலத்தை அதிகப்படுத்துவோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment