நன்றாக தூங்கி, அடுத்த நாளை தொடங்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழும்போது வில்லன் போன்று தோன்றி பாடாய்ப்படுத்துகிறது கழுத்து வலி. அது அன்றைய முழுபொழுதையும் அவஸ்தையாக்கிவிடும். கழுத்து வலி வரும், போகும் என்றாலும் அதை சாதாரண விஷயமாக நினைத்து தள்ளிவிடவும் முடியாது.
செய்யும் வேலையின் பாதிப்பு, காயங்கள், தசை-எலும்பின் ஆரோக்கிய குறைபாடு, முதுகெலும்பு டிஸ்க் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது. வாழ்வியல் முறை மற்றும் சிலவிதமான உடற்பயிற்சிகளால் ஓரளவு வரை கழுத்து வலியை கட்டுப்படுத்தலாம்.
உட்கார்ந்த நிலையிலே அதிக நேரம் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும் இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
கழுத்தை லேசாக அசைத்து கழுத்து தசைகளை இலகுவாக்குங்கள். எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள். நிமிர்ந்த நிலையில் இருக்க துணைபுரியும் குஷன் அல்லது தலையணையை அதற்காக பயன்படுத்துங்கள்.
கம்ப்யூட்டரில் வேலைபார்க்கும்போது கண்களுக்கு நேராக ஸ்கிரீன் வரும்விதத்தில் மானிட்டரை அமைத்திருங்கள். கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்தினால், இடை இடையே கண்களுக்கும், கழுத்திற்கும் லேசான பயிற்சி கொடுங்கள்.
தூங்கும்போது உயரம் குறைந்த தலையணையை பயன்படுத்துங்கள். அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், தலையை ஒருபுறமாக சாய்த்துவைக்கும் நிலையை தவிர்த்திடுங்கள். படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்.
பஸ்சிலோ இதர வாகனங்களிலோ நீண்ட நேரம் பயணிக்கும்போது `நெக் காலர்' பயன்படுத்துங்கள். வேலை பார்க்கும் நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தை கடக்கும்போதும் கழுத்தை நான்கு முறை வட்டமாக சுற்றுங்கள்.
தலையை குனிந்து தாடை நெஞ்சில்படும் விதத்தில் பத்து வினாடிகள் வையுங்கள். இடது பக்க காதை இடது தோளில் சாயுங்கள். 10 வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, அதுபோல் வலது பக்க காதை வலது தோளில் சாய்த்து செய்யுங்கள்.
செல்போனில் பேசி முடித்ததும் தலையை வலது, இடது புறமாக சில தடவை திருப்புங்கள். தலையை மெதுவாக வட்டத்தில் சுற்றுங்கள்.
வலியை கட்டுப்படுத்தும் வழிகள்:
* கழுத்து வலிக்கும்போது அந்த இடத்தில் சுடுநீர் நிரப்பிய பேக்கைவைத்து ஒத்தடம் கொடுங்கள். வலி கட்டுப்படும்.
* காட்டன் துணியை சுடுநீரில் முக்கிப் பிழிந்து கழுத்தை சுற்றி இலகுவாக கட்டிவைத்தாலும் வலி குறையும்.
* நேராக பார்த்தபடி தலையை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி கொண்டு வாருங்கள்.
* தலையின் பின்னால் இரு கைகளையும் கட்டியபடி தாடை நெஞ்சில் படும் அளவுக்கு குனியுங்கள்.
* முடிந்த அளவு தலையை உயர்த்தியும், பின்பு தாழ்த்தியும் பத்து முறை செய்யுங்கள். சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும். அதனால் எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதும் நல்லது.
Click here to join whatsapp group for daily health tip
0 Comments:
Post a Comment