வாய்ப்புண் வரக் காரணங்களும், பின்பற்ற வேண்டிய உணவு முறையும் - Agri Info

Adding Green to your Life

July 14, 2022

வாய்ப்புண் வரக் காரணங்களும், பின்பற்ற வேண்டிய உணவு முறையும்

 குழந்தை முதல் முதியோர் வரை வாய்ப்புண் எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது வரும் சாத்தியம் அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

காரணங்கள்

> நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

> வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும்.

> இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

> கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். மிகச் சூடாகக் காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

சரியான உணவு

  • மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தல்,
  • ஸ்டீராய்டு, வலி மரத்துப் போகச் செய்யும் களிம்பு இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.
  • லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும்.
  • பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

எப்படித் தடுக்கலாம்?

வாய்ச்சுத்தம் காப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

என்ன சாப்பிட வேண்டும்?

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதைத் தடுப்பதற்குச் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளைக் கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment