நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான இதயம் இயல்பான முறையில் செயல்படாமல் ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. நம் இதயம் எந்தெந்த வகையில் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இதயம் சார்ந்த நோய்கள் திடீரென்று நிகழ்ந்துவிடுவதில்லை, பல ஆண்டுகளின் தொடர் விளைவுகள் எதிரொலியாகவும், நாம் கடைப்பிடிக்கும் மோசமான பழக்க, வழக்கங்கள் காரணமாகவும் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன.
உலகெங்கிலும் இதயநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 18 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இதய நோயால் உயிரிழக்கும் மொத்த மக்களில் 3ல் ஒரு பங்கு சதவீதத்தினர் 70 வயதுக்கு முன்பாக இளம் வயதிலேயே உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிலையம் தெரிவிக்கிறது.
இளம் வயதினரின் உயிரை பறிக்கும் இதய நோய்கள் :
பிரபல இந்திய பாடகர் கேகே அண்மையில் இதய பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்த நோய் இளம் வயதினரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்ற விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக 40 வயதை ஒட்டிய இளம் வயதினருக்கான ஆபத்துகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
மன அழுத்தம் :
அளவுக்கு அதிகமான மன அழுத்தம் காரணமாக இதயத்திற்கு செல்லும் குழாய்களில் அழற்சி ஏற்படும் என்றும், இது நல்லதல்ல என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மன அழுத்தம் காரணமாக நம் உடலின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதுவும் கூட இதய நோய் ஆபத்து அதிகரிக்க காரணமாக அமையும். உடல் இயக்கமின்மை, தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற காரணங்களும் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும்.
போதுமான தூக்கமின்மை
போதிய தூக்கம் இல்லை என்றால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் அதிகரிக்கக் கூடும். அதில் ஒன்று இதய நோய் பாதிப்பு ஆகும். தூக்கமின்மை பிரச்சனையால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும்.
அதிகப்படியாக மது அருந்துவது
நீங்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதன் காரணமாக உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இதய செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இது மட்டுமல்லாமல் உடல் பருமனுக்கும் மதுப்பழக்கம் வழிவகை செய்யும்.
உடல் பருமன்
கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் கண்ட உணவுகளையும் சாப்பிடுவது, மோசமான வாழ்வியல் பழக்க, வழக்கங்கள் ஆகியவை உடல் பருமன் அதிகரிக்க காரணமாகும். இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பதால் நமது ரத்த தட்டுக்களில் படிமங்கள் உண்டாகின்றன. நம் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது மட்டுமல்லாமல் ரத்த அடர்த்தி அதிகரித்து அடைப்புகள் ஏற்படவும் காரணமாக அமைகின்றன.
பிற ஆபத்துகள்
நமது வீட்டில் யாருக்கேனும் இதய நோய் பிரச்சனைகள் இருந்தால், அதுகுறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசமான உணவுப் பழக்கத்தை கைவிட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் வரமால் கட்டுப்படுத்துவது நல்லது.
அறிகுறிகளும், எச்சரிக்கைகளும்...
* மூச்சுத்திணறல்
* நெஞ்சு வலி
* நெஞ்சுப் பகுதியில் இறுக்கம்
* கைகள், கழுத்து, தாடை, மேல் வயிறு போன்ற இடங்களில் வலி
* உடல்சோர்வு
* சீரற்ற இதய துடிப்பு
No comments:
Post a Comment