Search

முடி உதிர்வு, அடிக்கடி தலைவலி... வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமாம்..!

நம் நரம்பு மண்டலத்தில் உள்ள செல்களையும், ரத்தத்தில் உள்ள செல்களையும் ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வைட்டமின் பி12 மிகவும் அவசியமானதாகும். நம் உடலின் அனைத்து செல்களில் மரபுக் கூறுகளான டிஎன்ஏ-வை உருவாக்கவும் இதுதான் உதவிகரமாக அமைகிறது. ஆகவே, நாம் அருந்தும் பானங்கள் மற்றும் உண்ணும் உணவுகள் மூலமாக வைட்டமின் பி12 சத்தை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

விலங்கு இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது. விட்டமின் பி12 இல்லை என்றால் நம் உடலில் ரத்தசோகை ஏற்படக் கூடும். நரம்பியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பிரச்சனைகள் உண்டாகுவதற்கு அது காரணமாக அமையும்.

பி12 பற்றாக்குறை இருப்பதை அறிவது எப்படி?

தொடக்க காலத்தில் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது எந்தவித அறிகுறியும் இருக்காது. இது மிக தீவிரமாக மாறிய பின்னர் ரத்தசோகையாக உருவெடுக்கிறது என்றாலும், அதற்கு முன்னரே இந்த கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். சில அறிகுறிகளைக் கொண்டு இதை நாமே கணிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முடிகளில் அறிகுறி

நமது ரோம கால்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி12 உதவிகரமாக இருக்கிறது. இதில் பற்றாக்குறை ஏற்படும்போது நமது ரோமக் கால்கள் முறையாக வளர்ச்சி அடையாது. இதன் காரணமாக முடி உதிரக் கூடும். சிலருக்கு வாய்ப்புண் மற்றும் மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மற்ற பொதுவான அறிகுறி

முடி உதிர்வு, இளநரை போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாமல் உடல்சோர்வு, மயக்கம், தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வெளிரிய நகங்களும் கூட வைட்டமின் பி12 பற்றாக்குறை அறிகுறிதான். கிருமித்தொற்று, மூச்சு இரைப்பு, தசை பலகீனம், வலி போன்றவையும் இதன் அறிகுறிகள் தான்.

மூளையை பாதிக்கும்

வைட்டமின் பி12 பற்றாக்குறையால் மூளையின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். நினைவாற்றல் பிரச்சனை, கவனத்திறன் குறைபாடு, மன அழுத்தம், திடீர் கோபம், எண்ணங்களில் தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்த பற்றாக்குறையை நாம் போக்க முடியும். அதே சமயம், பற்றாக்குறை மிகுதியாக இருந்தால் பி12 சத்து மாத்திரைகள் அல்லது ஊசி போன்றவற்றை மருத்துவர் பரிந்துரை செய்வார்.

விலங்கு இறைச்சி, குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கானாங்கெளுத்தி, டுனா, சால்மன் போன்ற மீன்களில் பி12 சத்து மிகுதியாக இருக்கிறது. இதேபோன்று முட்டையிலும் பி வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றன. பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். 




Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment