Search

கண்களில் இந்த பிரச்சனைலாம் இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்!

 நமது உடல் சரியாக செயல்பட கொலஸ்ட்ரால் எனும் ஒரு வகை கொழுப்பு தேவைப்படுகிறது, அதேசமயம் அந்த கொலஸ்ட்ரால் ஆனது நமது ரத்தத்தில் அதிகரித்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  இவை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஸ்லோ பாய்ஸனாக செயல்பட்டு நமக்கு மரணத்தை அளிக்கிறது.  அதிக கொலஸ்ட்ரால் இதயத்தை மட்டும் பாதிக்காது, கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.  


அதிக கொலஸ்ட்ராலின் சில பொதுவான அறிகுறிகள் நம் கண்களின் தோற்றத்தை அல்லது கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மாற்றி பார்வை திறனை பாதிக்கலாம்.  அதிக கொலஸ்ட்ராலால் கண்கள் பகுதியில் ஏற்படும் மூன்று வகையான பாதிப்புகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
1) சாந்தெலஸ்மா:
 
கண்களைச் சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் ஒரு தட்டையான அல்லது சற்று உயர்ந்த மஞ்சள் நிறப் பகுதி தோன்றும். இது அதிக கொழுப்புடன் தொடர்புடைய மிகவும் பொதுவான கண் அறிகுறியாகும்.  சாந்தெலஸ்மாஸ் பார்வையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, இந்த அறிகுறி இருந்தால் உங்கள் உடலில் அதிக கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.  அதிக எடையுள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களிடத்தில் இந்த சாந்தெலஸ்மா காணப்படுகிறது.


2) கார்னியா ஆர்கஸ்: 
கார்னியாவின் சுற்றளவைச் சுற்றி ஒரு வெள்ளை வளையத்தை தோன்றுவதை கார்னியல் ஆர்கஸ் என்று அழைக்கிறோம்.  இந்த வெள்ளை வளையம் இயற்கையாகவே வயதானவர்களிடத்தில் காணப்படுகிறது என்றாலும் இது அதிக கொலஸ்ட்ரால் அளவுகளின் விளைவாக எந்த வயதிலும் ஏற்படலாம்.  கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு இது உருவாகிறது, அதேசமயம் கார்னியல் ஆர்கஸ் பார்வையை பாதிக்காது, இதற்கு சிகிச்சை கொழுப்பைக் குறைப்பது தான்.

3) விழித்திரை நரம்பு அடைப்பு: 
கண்ணின் பின்புறத்தில் ஒளியை உணரக்கூடிய விழித்திரை எனும் திசு உள்ளது, விழித்திரைக்கு தமனி மற்றும் நரம்பு வழியாக இரத்தம் அனுப்பப்படுகிறது.  நரம்புகளில் பிளாக் ஏற்படும்போது விழித்திரை நரம்பு அடைப்பு ஏற்படுகிறது, விழித்திரை தமனி அடைப்பு பக்கவாதம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமனி பிளாக் ஆவதால் ஏற்படுகிறது.  நரம்பு பிளாக் ஆகும்போது ​​இரத்தமும் திரவமும் கலந்து விழித்திரையில் கசியும், அப்போது ​​வீக்கம் காரணமாக உங்கள் மையப் பார்வை பலவீனமடையும்.  மங்கலான பார்வை, பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது கோடுகள், கண்ணில் வலி மற்றும் பார்வையில் மாற்றம் போன்றவை இவற்றிற்கான அறிகுறியாகும்.  இதற்கு சிகிச்சை கொழுப்பைக் குறைப்பது தான்.


0 Comments:

Post a Comment