முகக்கவசத்தால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுமா? ~ மருத்துவர் தரும் விளக்கம் - Agri Info

Adding Green to your Life

August 13, 2022

முகக்கவசத்தால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுமா? ~ மருத்துவர் தரும் விளக்கம்

 தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் "முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மாறாக முகக்கவசம் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும்" என்றும் தெரிவித்திருந்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதமும் தவறு என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசாணையை ரத்து செய்யக் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.


முகக்கவசம் சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துமா என சென்னையைச் சேர்ந்த நுரையீரல் மற்றும் சுவாசநோய் மருத்துவர் சிந்துராவிடம் கேட்டோம்...

"முகக்கவசம் அணிவதால் சுவாசப் பிரச்னை ஏற்படாது. மாறாக சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் அணிவது பெரும் பாதுகாப்பானது. N 95 முகக்கவசம் மிகவும் பாதுகாப்பானது. 95 சதவிகிதம் காற்றை வடிகட்டி அனுப்புவதால்தான் அது N 95 என்று சொல்லப்படுகிறது. சர்ஜிக்கல் முகக்கவசத்திலேயே 3 அடுக்குகள், 1 அடுக்கு என இருவகை உள்ளது. அதுவும் சரி, துணியால் ஆன முகக்கவசமும் சரி, இரண்டும் காற்றை வடிகட்டாது. நேராகப் பேசுகையில் எச்சில் தெறிப்பு மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்கும்.

நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு, ILD (Interstitial lung disease), COPD (Chronic obstructive pulmonary disease) போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். புகைப்பழக்கம், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பிரச்னைக்கு ஆளாக நேரிடுகிறது. அவர்கள் முகக்கவசம் அணியும்போது ஆக்ஸிஜன் வரத்து குறைவதைப் போன்று உணர்ந்து சிரமத்துக்கு ஆளாவார்கள்.

நுரையீரல் பிரச்னை உடையவர்களுக்குதான் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் அவர்கள் முகக்கவசம் அணிந்தே தீர வேண்டும். வீட்டுக்குள் போட வேண்டிய தேவை இல்லை. பொது இடங்களுக்குச் செல்லும்போது மட்டும் அணிந்து கொள்ளலாம். வீட்டில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிந்து சுவாசிக்க மூச்சடைப்பது போல் இருக்கும். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஓட்டம், உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் தேவைப்படும் என்பதால் அப்போது முகக்கவசம் அணியக்கூடாது" என்றவர் கொரோனா மட்டுமன்றி காற்று மாசிலிருந்து காத்துக் கொள்ளவும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என்கிறார்.

"முகக்கவசம் அணிவதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்பதைத் தாண்டியும் பல பயன்கள் இருக்கின்றன. தூசி ஒவ்வாமை இருக்கிறவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது, இன்றைக்கு வாகனப் புகை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் காற்று அதிகளவில் மாசுபட்டிருக்கிறது. மாசுபாடான காற்றை நேரடியாக சுவாசிப்பதால் வரும் விளைவுகளைத் தடுக்கவும் முகக்கவசம் அணியலாம். மார்பிள் கட்டிங், மர வேலைகள் செய்கிறவர்களும், நுண் பொருள்கள் சுவாசம் வழியே உட்புக வாய்ப்பிருக்கும் சூழலில் பணிபுரிகிற அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளில் இவை குறிப்பிடப்பட்டிருந்தாலும் நிறைய இடங்களில் இதனைப் பின்பற்றுவதில்லை. அதனை அரசு கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயம் N 95 கவசம் அணிய வேண்டும்" என்றவரிடம் ஒரு முறைக்கு மேல் முகக்கவசத்தைப் பயன்படுத்துவது நல்லதா என்று கேட்டதற்கு...

"முகக்கவசம் ஒரு முறை பயன்படுத்துவதற்குத்தான். N 95 முகக்கவசம் இப்போது விலை குறைந்து 25 ரூபாய்க்குக் கிடைக்கிறது. உடல் நலத்துக்காக நாளொன்றுக்கு 25 ரூபாய் செலவிடுவதற்கு ஏன் யோசிக்க வேண்டும். துணியாலான முக்ககவசத்தைத் துவைத்துப் பயன்படுத்தலாம். சர்ஜிக்கல் மாஸ்கை ஒரு நாள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். N 95 முகக்கவசத்தை துவைக்க முடியாது என்பதால் கொஞ்ச நேரம் வெயிலில் வைத்து நான்கு நாள்கள் வரை பயன்படுத்தலாம். எதுவாகினும் முகக்கவசம் மிகவும் நல்லது. பெருந்தொற்று அல்லாத நாள்களிலும் சூழலுக்கேற்ப பயன்படுத்தினால் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்." என்கிறார் சிந்துரா.


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment