இயற்கையின் கொடையான மழைநீரை முறையாக சேமித்து வைக்காமல், ‘விண்ணின் மழைநீர் மண்ணின் உயிர் நீர்’ என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். போதாக்குறைக்கு உலகம் முழுவதும் மாறிவரும் காலநிலை மாற்றத்தால், உயர்ந்து வரும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்ககூடும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. பனிப்பாறைகள் உருகுவது, கடல் சீற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை, காற்றில் பசுமை வாயுக்கள் கலப்பு உயருவது, புற ஊதாக்கதிர் வீச்சு போன்ற பிரச்சனைகள் மனித இனத்தை ஏற்கனவே அச்சுறுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
வானத்தில் இருந்து பொழியும் மழை நீரே மிகவும் சுத்தமானது, அதனை முறையாக சேமித்து குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், மழை நீரை குடிப்பது மிகப்பெரிய ஆபத்து என ஆய்வுக்கட்டுரை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின்படி, மழை நீரில் பிஎஃப்ஏஎஸ் எனப்படும் நச்சு இரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளதால், பூமியின் அனைத்து பகுதிகளிலும் பொழியும் மழை நீரை குடிப்பது பாதுகாப்பானது கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.Per- and பாலிஃப்ளூரோஅல்கைல் (poly-fluoroalkyl) எனப்படும் பேக்கேஜிங், ஷாம்பு அல்லது ஒப்பனை பொருட்களில் காணப்படும் ரசாயனம் மழைநீரில் காணப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் ‘நிரந்தர ரசாயனங்கள்’ என அழைக்கப்படும் இவை காலப்போக்கி சிதைவடைவதும் கிடையாது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியருமான இயன் கசின்ஸ் கூறுகையில், "நாங்கள் எடுத்த அளவீடுகளின்படி, பூமியில் எந்த பகுதியில் பொழியும் மழை நீரும் குடிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, அண்டார்டிகா அல்லது திபெத்திய பீடபூமி போன்ற மனிதர்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் கூட அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அளவை விட மழைநீரில் அதிக கெமிக்கல் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. மழைநீரில் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு அளவை விட 14 மடங்கு அதிக கெமிக்கல் இருப்பதால், அதனை நேரடியாக குடிப்பது நல்லதல்ல என எச்சரிக்கப்பட்டுள்ளது
மழைநீரை அருந்துவது கருவுறுதல், குழந்தைகளின் வளர்ச்சி தாமதங்கள், உடல் பருமன் அல்லது சில புற்றுநோய்கள் (புரோஸ்டேட், சிறுநீரகம் மற்றும் டெஸ்டிகுலர்), கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பூமியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மாசால், கடந்த 20 ஆண்டுகளாக மழை நீரும் அதனை மனிதர்கள் நேரடியாக குடிக்கும் தன்மையை படிப்படியாக இழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஒரே ஒரு ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால், சுற்றுச்சூழலின் PFAS அளவுகள் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இந்த ஆய்வின் மூலம் சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழைநீரை நேரடியாக குடிப்பதை தவிர்த்தாலும் ஆறுகள், ஓடைகள், உணவுப் பொருட்களில் கலந்துள்ள மாசில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment