இந்தியாவில், அதுவும் தென்னிந்தியாவில் தோன்றிய சிறப்பான நிதி சேமிப்பு திட்டம் தான் சிட்பண்ட்ஸ். இந்த அமைப்பு பண்டமாற்றுக் காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பது வியப்புக்குரியது. இத்தகைய சேமிப்பு திட்டத்தை பற்றி சிட் பண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலாளர் சிற்றரசு கூறியதாவது.
பண்டமாற்று காலத்திலேயே சேமிப்புக்காகவும் சிலரின் அவசர தேவைக்கு உதவுவதற்காகவும் இந்த அமைப்பு வழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. நாணயம் பணம் புழக்கத்திற்கு வந்த பின்பு சிட் பண்ட் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பே செயலுக்கு வந்திருப்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.
1894-ம் ஆண்டு ஆவணங்கள் மற்றும் 1934-ம் ஆண்டு திருவாங்கூர் சிட்ஃபண்ட்ஸ் சட்டம் மூலம் இத்தகைய நிதி அமைப்பு சட்டத்தால் முறைமை படுத்தப்பட்டு வந்துள்ளது.
சுதந்திரம் அடைந்து மாகாணங்கள் தனித்தனியாக உருப்பெற்ற உடன் 1961-ம் ஆண்டு சிட் பண்ட் சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டது. மேலும் செம்மைப்படுத்தி சீர்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு சிட்ஃபண்ட் சட்டத்தை கொண்டு வந்தனர். இது இந்தியா முழுமைக்கான சட்டமாக இருந்தது. இதை அமல்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தது. மாநில அரசின் பதிவு துறையே இதையும் கவனித்துக் கொள்கிறது, இவ்வேளையை செய்பவரை ரிஜிஸ்டார் ஆப் சீட்ஸ் என அழைக்கப்படுகிறார்.
சிட் பண்ட் நிறுவனம் பெரும்பாலும் பிரைவேட் லிமிடெட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிட்டு நிறுவனம் புதிதாக ஒரு சீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்றால் எவ்வளவு தொகைக்கு சீட் ஆரம்பிக்க உள்ளார்களோ அந்த குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக ஆர்பிஐ வங்கியில் செலுத்தி சீட்டு நடத்த அனுமதி பெற வேண்டும் அதற்கு பின்னர் எவ்வளவு நபர்கள் அந்த சீட்டிற்கு தேவையோ அத்தனை நபர்களை சேர்த்த பின்னால் அந்த சீட்டை ஆரம்பிப்பதற்கு அனுமதி பெற்றே சீட்டை ஆரம்பிப்பார்கள். இதனால் நிறுவனங்கள் நடத்துகின்ற சீட்டுகளில் சேர்பவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சீட்டு நிறுவனங்கள் சட்டப்படி வட்டிக்கு பணம் கொடுப்பதோ வைப்புத் தொகையாக பணத்தைப் பெற்றுக் கொண்டு வட்டிக் கொடுப்பதோ கூடாது என சட்டம் உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் வட்டிக்கு பணம் கொடுக்கின்ற நிறுவனங்கள் இழப்புக்கு உள்ளாகும் போது அதை சீட்டு நிறுவனங்கள் என்ற தவறான புரிதலில் இருந்து மக்கள் இப்பொழுது பெருமளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஏழை எளிய மக்கள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைவருக்கும் உதவும் வகையில் இருப்பதே இதன் சிறப்பு.
வங்கிகள் அரசு நிதி நிறுவனத்திலிருந்து பணத்தைப் பெற்று பொதுமக்களுக்கு கடன் கொடுத்து உதவுகிறது. ஒரு வகையில் பார்த்தால் சீட்டு கம்பெனிகள் அரசு நிதி நிறுவனத்தில் இருந்து பணம் கடனாக பெறாமல் தாங்கள் வைப்பு நிதியாக அரசு நிதி நிறுவனத்திற்கு செலுத்தி விட்டு மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயனடையும்படி நிதி உதவி கிடைக்க செய்வதை பாராட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு எனும் சிற்றரசு அவர்கள், மத்திய அரசு இந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சட்டங்களை மாற்றி அமைத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய நிதி ஆதார அமைப்பு பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment