சைனஸ் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்... - Agri Info

Adding Green to your Life

August 7, 2022

சைனஸ் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்...

 அனைத்து வயதினருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ள பொதுவான பிரச்னைகளில் ஒன்று சைனசைடிஸ். பொதுவாக சைனஸ் பிரச்சனை என்று இது குறிப்பிடப்பட்டாலும் புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி என்றும் இந்த சிக்கல் குறிப்பிடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் சைனஸ் பிரச்சனை வரலாம். குளிர் மற்றும் பனிக்காலம் வந்தாலே சிலர் தொடர் தலைவலி மற்றும் தும்மலால் கடுமையாக அவதிப்படுவார்கள். அதே போல தூசுக்கள் இருக்கும் ஏரியாவிற்கு சென்றால் விடாமல் தும்மி கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் சைனஸ் பிரச்னையாக தான் இருக்கும்.

சைனஸ்கள் (Sinuses) என்பது மூக்கின் பின்புறம், கன்னத்து எலும்புகள், கண்கள் மற்றும் நெற்றிக்கு இடையில் இருக்கும் ஏர் பாக்கெட்ஸ்கள் (air pockets) ஆகும். நமது மூக்கை சுற்றி மொத்தம் 4 காற்று பைகள் இருக்கிறது. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன. இந்த ஏர் பாக்கெட்ஸ்களே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த சைனஸின் புறணி (lining) சளியை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கின்றன. இந்த மெல்லிய திரவம் நாசி குழி வழியாக நம் உடலுக்குள் நுழையும் வெளி துகள்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.

இந்த புறணியில் ஏற்படும் அழற்சியானது நாசிப் பாதைகளில் அதிகப்படியான சளியை உருவாக்கலாம், இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். இந்த நிலை சைனசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஜலதோஷத்தின் மற்றொரு ஆபத்தான பக்கம் தான் இந்த சைனஸ் பிரச்சனை. ஜலதோஷம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 2 வாரங்களுக்குள் சரியாகி விட வேண்டும். ஆனால் 2 வாரங்கள் கடந்தும் ஜலதோஷம் சரியாகவில்லை என்றால் ஒருவேளை அது சைனஸ் கோளாறாக இருக்க கூடும்.

சைனஸ்கள் பிரச்சனை அல்ல. நம் குரலின் ஆழம் மற்றும் தொனிக்கு சைனஸ்களும் பொறுப்பு ஆகும். அவை நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 4 ஏர் பாக்கெட்ஸ்கள் ஆகும். இவற்றில் உருவாகும் சளி அல்லது மெல்லிய திரவம் நம் மூக்கின் உட்புறத்தை ஈரமாக வைத்திருக்கும். மேலும் இது தூசி, அலர்ஜி மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆனால் நம்மை பாதுகாக்கும் சைனஸில் திரவம் தேங்குவதால் கிருமிகள் வளர்ச்சியடைந்து, சைனஸ் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ஏன் திரவம் தேங்கும்..?

நம்முடைய சைனஸால் உற்பத்தி செய்யப்படும் சளி பொதுவாக சிறிய சேனல்கள் (small channels) மூலம் நம் மூக்கில் ட்ரெயின் ஆகிறது. ஆனால் சைனசிடிஸில், சைனஸ் லைனிங் வீக்கமடைவதால் இந்த சேனல்கள் தடுக்கப்படுகின்றன. சைனசிடிஸ் என்பது பொதுவாக சளி அல்லது காய்ச்சல் வைரஸ் மேல் சுவாசக் குழாயிலிருந்து சைனஸ்களுக்கு பரவுவதன் விளைவாகும். ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே சைனஸில் பாக்டீரியா தொற்று ஏற்படுகின்றன.

சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அல்லது சொத்தை பல் அல்லது பூஞ்சை தொற்று சில நேரங்களில் சைனஸ் வீக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு மூக்கு துவார தடுப்பு தண்டு, பிறந்ததில் இருந்து வளைந்தே இருக்கும். இதனால் ஒரு துவாரம் பெரிதாகவும், மற்றொரு துவாரம் சிறிதாக இருக்கும். இதனால் சைனஸ் தாக்கும் போது இவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும். ஒவ்வாமை, சளி அல்லது சுற்றுச்சூழல் மாசு காரணமாக மூக்கில் உள்ள திசுக்களில் ஏதாவது வீக்கம் ஏற்பட்டால், அது சைனஸின் பாதைகளை தடுக்கலாம். இதனால் சைனஸ்கள் வெளியேற முடியாது போவதால் ஒருவர் வலியை உணரலாம்.

சைனஸின் அறிகுறிகள்:

பெரும்பாலும் ஜலதோஷத்திலிருந்து பிரித்தறிய முடியாதவையாக இருக்கின்றன சைனஸின் அறிகுறிகள். 1-2 வாரங்களில் ஜலதோஷ அறிகுறிகள் சரியாகவில்லை என்றால், தொற்று மோசமடையாமல் இருக்க உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம். சளி போன்ற மேல் சுவாசக் குழாய் தொற்றுக்கு பிறகு பொதுவாக சைனஸ் ஏற்படும்.ஒருவருக்கு தொடர்ந்து சளி இருந்தால் மற்றும் கீழே உள்ள அறிகுறிகளை வெளிப்படுத்தினால் அவருக்கு சைனஸ் இருக்கலாம். இதன் அறிகுறிகள் பெரும்பாலும் சளி அறிகுறிகளை ஒத்திருக்கும் என்றாலும் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு: முகத்தில் ஏற்படும் வலி அல்லது உணரப்படும் அழுத்தம், மூக்கடைப்பு, கடும் தலைவலி, அதிக காய்ச்சல், தொடர் இருமல் அல்லது தும்மல், வாசனை உணர்வு குறைவது உள்ளிட்டவை.

கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி ஏற்படும். தலையை கீழ் நோக்கி கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி உண்டாகும். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலர் சளியை சிந்தி வெளியேற்றும் போது கூடவே ரத்தமும் சேர்ந்து வரும். சில நேரங்களில் வெளிவரும் சளி கடும் துர்நாற்றத்துடன் இருக்கும். தீவிர சைனஸ் பிரச்னை இருந்தால் மூக்கை தொட்டாலே கடுமையாக வலிக்கும். சிலருக்கு இரவு நேரத்தில் இருமலும், காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மலும் வரும். மேல் தாடை மற்றும் பற்களில் வலி, பல் வலியோடு சேர்ந்து காதுகளிலும் வலி உருவாகும். இங்கே அறிகுறிகள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

தொண்டை எரிச்சல் மற்றும் இருமல்

சைனஸில் இருந்து வெளியேறும் திரவம் தொண்டையின் பின்பகுதியில் வெளியேறுவதால், அது எரிச்சலை ஏற்படுத்தும், குறிப்பாக நீண்ட காலத்திற்கு. இது ஒரு தொடர்ச்சியான மற்றும் எரிச்சலூட்டும் இருமலுக்கு வழிவகுக்கும். தூங்கும் போது இது இன்னும் மோசமாக இருக்கும் அல்லது படுக்கையில் இருந்து எழுந்த பிறகு காலையில் இதனால் அவதி ஏற்படும். நிமிர்ந்து தூங்குவது அல்லது உங்கள் தலையை உயர்த்தி படுப்பது இருமலின் தீவிரத்தை குறைக்க உதவும்.

தொண்டை வலி..

சைனஸின் விளைவாக தீவிர தொண்டை வலி ஏற்படலாம் மற்றும் குரல் கரகரப்பானதாக மாறலாம். அடிக்கடி இருமல் மற்றும் தொண்டையை செருமி சளியை துப்புவது கரகரப்பான குரலை மோசமாக்கும்.

வாய் துர்நாற்றம்..

பாதிக்கப்பட்ட சைனஸால் ஒருவர் உடலில் உற்பத்தி செய்யப்படும் சளி துர்நாற்றம் வீசும் மற்றும் தொண்டை வழியே வாய்க்குள் செல்லும். இதனால் வாய் துர்நாற்றமடிக்கும். அடிக்கடி வாயை கொப்பளிப்பது, நாக்கை க்ளீன் செய்வது, நிறைய தண்ணீர் குடிப்பது இந்த அறிகுறியைக் குறைக்க உதவும்.

காது அடைப்பு..

சைனஸ் பிரச்சனை உள்ளவர்களு காது பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. காது மடல்களில் இருந்து ஆரம்பிக்கும் வலி பின் காதுகளுக்குள் தீவிர வலியாக உருவெடுக்கும் திடீரென காதுகளில் அடைப்பு ஏற்படலாம்.

அழுத்தம்..

முகத்தில் மென்மை அல்லது அழுத்தம் இருக்கலாம். நோய் தொற்று முன்பக்க சைனஸில் இருந்தால் தவிர, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக முக வலியை அனுபவிப்பதில்லை..


No comments:

Post a Comment