நீரிழிவு நோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் நீரிழிவு நோய் அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவிற்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு குழந்தைகள் இரையாகி வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளில் டைப் 2 நீரிழிவு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் பாதிக்கப்பட்டு வரும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையால், இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக ஏற்கனவே கருதப்பட்டுவரும் நிலையில், இந்திய குழந்தைகளும் டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Canada Journal of Diabetes வெயிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகம் முழுவதும் குழந்தைகளில் டைப் 2 நீரிழிவு நோய் சில ஆண்டுகளாக வலுவான அதிகரிப்பை கண்டுள்ளது. ஆப்பிரிக்கா, அரபு, ஆசியா, ஹிஸ்பானிக், பழங்குடியினர் அல்லது தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டி காட்டியுள்ளது. டைப் 1 நீரிழிவு நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாக இருக்கும் நேரத்தில் டைப் 2 நீரிழிவு நோய் என்பது பொதுவாக உடல் பருமன், மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படுவது ஆகும்.
குழந்தைகளில் டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு...
டைப் 1 நீரிழிவு நோயானது டைப் 2 நீரிழிவு நோய் போல சமீப காலமாக அதிகரித்து வருகிறது, அதே விகிதத்தில் இல்லாவிட்டாலும், ஆண்டுக்கு 3-5% என்ற வீதத்தில் அதிகரிப்பதாக பிரபல மூத்த குழந்தை நல மருத்துவர், டாக்டர். அபிஷேக் குல்கர்னி கூறி இருக்கிறார். இந்தியாவை பொறுத்த வரை 0-14 வயதுக்குட்பட்ட 1 லட்சம் குழந்தைகளில் 3 பேர் டைப்1 நீரிழிவு நோயால் புதிதாக பாதிக்கப்படுவது கண்டறியப்படுகிறது. எனினும் டைப்1 நீரிழிவு நோய்க்கான பரவல் டேட்டாவானது சில குறிப்பிட்ட மாநிலங்களில் 1 லட்சம் குழந்தைகளில் 18 பேர் என கூறுகிறது. இருப்பினும் தற்போது சீரான தேசிய தரவு இல்லை என்கிறார் அபிஷேக் குல்கர்னி. சிகிச்சை பரிந்துரை யூனிட்ஸ்களுக்கு மாதத்திற்கு 5 முதல் 10 புதிய டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளில் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகள்..
குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு குழந்தைகளில் கவனிக்க வேண்டிய நீரிழிவு நோயின் சில அறிகுறிகள் இங்கே.. அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம், அதிகரித்த பசி உணர்வு, திடீர் எடை இழப்பு, சோம்பல், எரிச்சல் அல்லது நடத்தை மாற்றங்கள், மங்கலான பார்வை, வயிற்று வலி, அடிபட்டால் காயங்கள் மிக மெதுவாக ஆறுவது. மேற்காணும் அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை குழந்தைகள் வெளிப்படுத்தினால் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று குழந்தைகளுக்கு இரு டைப் நீரிழிவு நோய்க்கான பரிசோதனையையும் பெற்றோர்கள் மேற்கொள்ள அறிவுறுத்துகிறார் அபிஷேக் குல்கர்னி.
சிகிச்சை என்ன?
- டைப் 1 நீரிழிவு நோய்க்கு பல தினசரி டோஸ் ஊசிகள் அல்லது இன்சுலின் பம்ப்கள் வழியாக தொடர்ச்சியான இன்சுலின் உட்செலுத்துதல் மூலம் பாசல் போலஸ் இன்சுலின் சிகிச்சை தேவைப்படுகிறது.
- டைப் 2 நீரிழிவு நோயை மெட்ஃபோர்மின், ஜிஎல்பி1 ரிசெப்டர் அனலாக்ஸ் உள்ளிட்டவற்றுடன் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் திறம்பட நிர்வகிக்க முடியும்.
ஆன்டி-டயபடிக் டயட்..
டைப் 1 நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதுடன் குறிப்பாக குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை பின்பற்ற வேண்டும். டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் மேற்கூறிய டயட்டை பின்பற்றலாம். இருப்பினும் உடல் பருமன் மற்றும் அதிக எடையை கட்டுப்படுத்த உணவுமுறையின் அடிப்படையில் மொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்க வேண்டியிருக்கலாம். தினசரி 45 நிமிட மிதமான தீவிரம் கொண்ட பயிற்சிகள் அல்லது வாரத்தில் குறைந்தது 5 நாட்களுக்கு விளையாட்டு 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமான உணவு கொள்கைகளை பெற்றோர்களின் கண்காணிப்பில் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
0 Comments:
Post a Comment