குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புற்றுநோயையும் குறிக்கிறது. இந்த நோய் பொதுவாக குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதும் பரவி மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நோய் 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களிடையே அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும், நாள்பட்ட மலச்சிக்கல் குடல் புற்றுநோய்கான முக்கிய காரணியாக கருதப்படுகிறது. மோசமான அல்லது பொருத்தமற்ற கழிப்பறை பழக்கங்களும் இந்த புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. மலம் கழிக்க நாம் உட்காரும் முறைகள் கூட மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.
எப்படி உட்காருவது சிறந்தது.? இயற்கையான முறையில் மலம் கழிக்காமல், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை பயன்படுத்தி காலை கடன்களை கழிப்பது மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியன் மாடல் கழிப்பறையில் இரண்டு கால்களையும் அழுத்தி வைத்து உட்காரும் போது, இயற்கையாகவே அழுத்தம் உருவாகி கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. ஆனால் மேற்கத்திய கழிப்பறைகளில் அமரும் போது, நாற்காலி போல் அமர்வதால் குடல் பகுதிகளில் ஏற்படும் முடிச்சுக்கள் செரிமான பாதையை சேதப்படுத்துகின்றன. மேலும் குந்துதல் முறையில் சிறு குடலுக்கும் பெரிய குடலுக்கும் இடையே உள்ள இலியோகேகல் வால்வு தானாகவே அடைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மேலும் இந்த முறையில் புபோரெக்டலிஸ், அந்தரங்க எலும்புடன் இணைக்கப்பட்ட தசை, ஆகிய அனைத்தும் அதிக முயற்சி இல்லாமல், எளிதாக குடல் இயக்கத்தை மேற்கொள்ள அனுமதிக்கின்றன.
வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும்.? மேற்கத்திய கழிப்பறைகளில் அமர்ந்த நிலையில் மலம் கழிக்கும் போது, அது இலியோகேகல் வால்வு இயற்கையாக மூடுவதை தடை செய்கிறது. இதனால் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கான சரியான அழுத்தம் கிடைக்காமல், புபோரெக்டலிஸ் தசையும் இறுக்கமடைவதால் கழிவை வெளியேற்ற நீங்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.
குடல் புற்றுநோய்க்கான பிற காரணங்கள்: டாய்லெட்டை பயன்படுத்தும் முறையைத் தவிர உணவு முறையும் குடல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. ரெட் மீட் அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிக அளவில் உட்கொள்வதும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதும் குடல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, அதிக எடை, மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையும் குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே குடல் புற்றுநோய் இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்: குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் தங்கள் குடல் இயக்கங்களில் மாற்றங்களை அனுபவிக்கின்றனர். அடிக்கடி மலம் கழிப்பது, ரத்தம் கலந்த மலம், அடிவயிற்று வலி, வீக்கம் , சாப்பிட்ட பிறகு அசெளகரியமான உணர்வு, பசியின்மை , திடீர் எடை இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.
குடல் புற்றுநோயை தடுக்கும் முறைகள்: குடல் புற்றுநோய் உருவாக மலச்சிக்கல் தான் பிரதான காரணம் என்பதால், தினமும் அதிகளவிலான தண்ணீர் குடிக்கும் வேண்டும். கொழுப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும். குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும் கிவி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளவும். தினந்தோறும் ஜாக்கிங் உள்ளிட்ட வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment