இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் கேஜெட்களில் ஒன்றாக இருக்கிறது ஸ்மார்ட்போன். இவை இல்லாமல் போனால் நம் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும் என்று சொல்வது மிகையாகாது.
எனினும் இந்த டிஜிட்டல் உலகில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் போன்ற டிவைஸ்கள் நம் கண் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. குறிப்பாக நீண்ட நேரம் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரால் கடைபிடிக்கப்பட்டு வரும் மோசமான பழக்கமாக மாறி இருக்கிறது.
மொபைலை வெயிலில் வைத்து பயன்படுத்தினால் பகுதியளவு குருட்டுத்தன்மை ஏற்பட கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
வெயிலில் மொபைல்களை பயன்படுத்தியதால் பார்வை குறைபாட்டை எதிர்கொண்ட 2 பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸ் இதழில் கடும் வெயிலில் இருந்த போதும் தனது மொபைலை தொடர்ந்து பயன்படுத்தியதால் இயல்பான பார்வை திறனில் குறைபாட்டை ஒரு பெண் எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெயில் நேரங்களில் வெளியே செல்லும் போது மொபைலை பயன்படுத்துவதில் மும்முரம் காட்டினால் கண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.
பாதிக்கப்பட்ட பெண் வெயிலில் வைத்து மொபைலை பயன்படுத்திய போது அந்த ஃபோனின் ஸ்கிரீனில் சூரியனின் சக்தி வாய்ந்த பிரதிபலிப்பு வெளிப்பட்டதை தொடர்ந்து சில தீவிர விழித்திரை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பெண்ணிற்கு பகுதியளவு குருட்டுத்தன்மை ஏற்பட்டது என நம்பப்படுகிறது. இதே காரணத்தால் ஆண் ஒருவருக்கும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் solar maculopathy-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இளவயதினரும் பாதிக்க கூடும்..
பாதிக்கப்பட்ட இருவரில் பெண்ணுக்கு 20 வயது, ஆணுக்கு 30 வயது என கூறப்பட்டுள்ளது. இதில் பெண் கடற்கரையில் மொபைல் போனை பயன்படுத்தினார் என்றும், ஆண் ஒரு ஸ்கை ரிசார்ட் மொட்டை மாடியில் அமர்ந்து மணிக்கணக்கில் டேப்லெட் பயன்படுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இள வயதினருக்கும் கூட இந்த கண் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.
சோலார் மாகுலோபதி.?
மாகுலோபதி என்பது நம்முடைய ரெட்டினாவின் (விழித்திரை) பின்புறத்தை பாதிக்க கூடிய ஒரு நோயாகும். கண்ணில் உள்ள விழித்திரையின் மையத்திற்கு அருகில் உள்ள ஃபோவாவைச் சுற்றியுள்ள ஒரு ஓவல் மஞ்சள் நிற பகுதி மாக்குலா (macula) என்று அழைக்கப்படுகிறது. இது கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி ஆகும். மாகுலோபதியால் பாதிக்கப்படுபவர்கள் முற்றிலும் பார்வையை இழக்க மாட்டார்கள் என்றாலும் விழித்திரையில் பார்வை மிக கூர்மையாக இருக்கும் சென்ட்ரல் விஷனை இழக்கிறார்கள்.
சோலார் மாகுலோபதியின் போது, சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படுவதால் விழித்திரை மற்றும் மாகுலாவில் பாதிப்பு ஏற்படலாம். தற்போது solar maculopathy-ஆல் பாதிக்கப்பட்டுள்ள பெண் துவக்கத்தில் தொலைவில் இருக்கும் வடிவங்களை வேறுபடுத்துவதில் சிரமத்தை சந்தித்துள்ளார். பரிசோதனைக்கு பின் பார்வையின் மையத்தில் ஏற்படும் permanent central scotoma பாதிப்பு என்று கண்டறியப்பட்டது.
முன்னெச்சரிக்கை..
சோலார் மாகுலோபதி பொதுவாக சூரியனை நேராக பார்ப்பதால் ஏற்படுவது என்றாலும் பாதிக்கப்பட்ட இருவருமே அப்படி செய்யவில்லை. எனவே டிவைஸ்களின் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும் கடுமையான சூரிய கதிர்வீச்சு அடுத்த சாத்தியமான ஆபத்து காரணியாக இருக்கிறது தெரிகிறது. எனவே சூரிய கதிர்வீச்சு அதிகம் இருப்பதை உணரும் பகுதியில் டிவைஸை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் அல்லது பொருத்தமான ஃபில்ட்டருடன் கூடிய சன்கிளாஸை பயன்படுத்தலாம்.
சூரிய கதிர்களில் வெளிப்படும் UVA மற்றும் UVB கதிர்வீச்சு கண்புரை அல்லது மாகுலர் சிதைவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இறுதியில் பார்வை குறைவதற்கும் வழிவகுக்கும். எனவே கண்களைப் பாதுகாக்க வெயிலில் செல்லும் போது தரமான சன்கிளாஸ்களை அணிய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
No comments:
Post a Comment