30 வயது தொட்டுட்டீங்களா..? இந்த 7 விஷயத்தை தொடாதீங்க.. எலும்பு ஜாக்கிரதை!! - Agri Info

Adding Green to your Life

October 14, 2022

30 வயது தொட்டுட்டீங்களா..? இந்த 7 விஷயத்தை தொடாதீங்க.. எலும்பு ஜாக்கிரதை!!

 பொதுவாக நம் உடலில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட எலும்புகள் உள்ளன. ஒருவருக்கு எலும்பு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். நம் எலும்புகளில் சேமிக்கப்படும் தாதுக்கள் நம்முடைய எலும்பு ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.

அதிக அளவு தாதுக்கள் கொண்டிருந்தால் அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகள் என அர்த்தம். பெரும்பாலானவர்கள் தங்கள் 20 வயது முதல் 35 வயது வரை தங்கள் எலும்புகளில் அதிக தாது அடர்த்தியை கொண்டிருக்கிறார்கள். ஆனால் 35 வயதிற்குப் பிறகு இது தலைகீழாக மாறுகிறது. அறிகுறிகள் ஏதுமின்றி எலும்புகளில் காணப்படும் தாது அடர்த்தி குறைகிறது. இதனால் எலும்புகளில் பலவீனம் ஏற்படலாம்.

எனவே 30 வயதை தாண்டிய பிறகு ஒருவர் தனது எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது. குழந்தை மற்றும் இளமை பருவத்தில் எவ்வாறு வலுவான எலும்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதே போல வயது ஏற ஏற எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க போதுமானவற்றை செய்வதும் முக்கியம். மேலும் 30-களில் இருப்பவர்கள் தங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்ய கூடாது என்பதையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

அதிக உப்பு மற்றும் சர்க்கரை..

சிலர் எப்போதுமே தங்கள் எடுத்து கொள்ளும் உணவில் உப்பு மற்றும் சர்க்கரை தூக்கலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த இரண்டையும் அதிகம் சேர்ப்பது உடலில் இருந்து வெளியேறும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. கால்சியம் குறைபாடு எலும்புகளை பலவீனமாக்கி விடுகிறது.

காஃபின்:

சில நேரங்களில் பலரும் உணராமல் இருக்க கூடிய ஒன்று டீ, கோகோ, சாக்லேட் மற்றும் காபி போன்ற பானங்களில் உள்ள காஃபின் உடலின் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்க செய்கிறது. அதிக அளவு காஃபின் நுகர்வு எலும்பு தாது இழப்பு, குறைந்த பிஎம்டி மற்றும் குறைந்த கால்சியம் உள்ளடக்கம் உள்ளிட்ட தீவிர எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை:

அதிக உடல் உழைப்பின்றி அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கால்சியத்தை இழக்க காரணமாகிறது. எனவே தினசரி நடைபயிற்சி, ஓடுவது அல்லது வொர்கவுட்கள் போன்ற செயல்பாடுகள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

விலங்கு புரதம்:

மீன், கோழி, சிவப்பு இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு புரதங்களை அதிகம் உட்கொள்ள கூடாது. சீரான அளவே எடுத்து கொள்ள வேண்டும். விலங்கு புரதங்களின் அதிக நுகர்வு எலும்புகளில் இருந்து கால்சியத்தை சிறுநீர் வழியே வெளியேற்றி விடும்.

சாஃப்ட் டிரிங்ஸ்:

குளிர்பானங்கள் அதிகம் குடிக்கும் பழம் கொண்டிருப்பது கண்டிப்பாக எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய பழக்கம் ஆகும். ஏனென்றால் இவற்றில் நிறைந்திருக்கும் சர்க்கரை, காஃபின் மற்றும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கால்சியத்தை வெளியேற்றுகின்றன.

புகை மற்றும் புகையிலை பழக்கம்:

30 வயதை கடந்த ஒருவர் புகை மற்றும் புகையிலையை மென்று தின்னும் பழக்கத்தை கொண்டிருந்தால் அது அவரது எலும்பு ஆரோக்கியத்தையும் சேர்த்து தான் பாதிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இதிலிருக்கும் நிகோடின் உடலின் கால்சியம் உறிஞ்சும் திறனில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குறைந்த தசை நிறை:

குறைந்த தசை நிறை கொண்ட நபர்கள் தங்கள் எலும்பு மற்றும் உடலில் குறைவான அளவு கால்சியத்தை மட்டுமே சேமித்து வைக்க முடிவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment