நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றும் பொழுது அல்லது காலையில் எழுந்திருக்கும் பொழுது, நீண்ட நேரம் நடந்த பிறகு அல்லது நீண்ட நேரம் வேலை செய்த பின்பு மூட்டுகளில் அல்லது எலும்பு பிராதனமாக இருக்கும் பகுதிகளில் குத்துவது போன்ற வலி தோன்றுகிறதா.? குறிப்பாக, முதுகு வலி, தோள்பட்டை வலி மற்றும் இடுப்புப் பகுதியில் அடிக்கடி இவ்வாறு வலி தோன்றினால் எலும்புகள் பலவீனமாக இருக்கின்றன என்று அர்த்தம். எலும்புகள் தான் நம்முடைய உடல், இந்த வடிவில் இந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்ற வடிவத்தை வழங்குகின்றன.
எலும்புகள் பலவீனமாகும் போது காயங்கள் ஆறுவதற்கு தாமதமாகும். அடிக்கடி எலும்புகள் உடையும் சாத்தியம் ஏற்படும். பலவீனமான எலும்புகள் நம்முடைய பேலன்ஸை தடுமாற செய்யும். எலும்புகளை உறுதியாக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமான உணவுகள் அவசியம். இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிட்டு வந்தால், எலும்புகள் உறுதியாக இருக்கும்.
கீரை வகைகள்: எலும்புகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு உதவும் ஊட்டச்சத்து கால்சியம். அதனுடன், இணை-ஊட்டச்சத்துக்களாக மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு மினரல்களும் எலும்புகளின் அடர்த்திக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், பல உணவுகளில் இல்லாத வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் ஆகிய இரண்டு சத்துக்களும் எலும்புக்கு அவசியம். இந்த அனைத்து சத்துக்களும் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக அளவில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இவை அல்கலைன் தன்மையைக் கொண்டிருப்பதால், உடலில் இருக்கும் பிஎச் அளவையும் சரி செய்து, உங்களுடைய எலும்பு அடர்த்தியை சரியான அளவில் பாதுகாக்க உதவுகிறது. தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிட்டு வருவது எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
பால் மற்றும் பால் பொருட்கள்: எலும்புகள் ஆரோக்கியம் என்று சொன்னாலே கால்சியம் தான் அதன் அடிப்படை ஊட்டச்சத்து. உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் அடர்த்தி குறைவதோடு மட்டுமல்லாமல் பலவீனமாக்கி எளிதில் உடைந்து போகும். இதனால் தான் குழந்தைகளுக்கு அவர்கள் வளரும் பருவத்தில் பால் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகள் கொடுக்கப்படுகின்றன. அனைத்து வகையான பால் பொருட்களிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பால், வெண்ணெய், தயிர், சீஸ், பன்னீர் என்று உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பால் பொருட்களில் இருந்தே பெறலாம். பால் பொருட்கள் அலர்ஜி என்று உள்ளவர்கள் தாவரங்களில் இருந்து பெறப்படும் பால் வகையின் மூலம் தங்களுடைய உடலுக்கு தேவையான கால்சியத்தைப் பெறலாம்.
கடல் உணவுகள் மற்றும் மீன்: கடல் உணவுகளில் பொதுவாக அதிக மினரல்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் எலும்புகள் உறுதியாவதற்கு தேவையான வைட்டமின் டி சத்து கடல் உணவுகளில் அதிகமாக இருக்கின்றது. உங்கள் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவை. பலவிதமான கடல் உணவுகள் மற்றும் மீன்களில் வைட்டமின் டி சத்துடன் கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை எலும்பின் அடர்த்தியை அதிகரித்து வயதாகும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பலவித எலும்பு குறைபாடுகளை தவிர்க்க உதவும். சைவ உணவு சாப்பிடுபவர்கள் இயற்கையாகவே வைட்டமின் டி சத்தை சூரிய ஒளியின் மூலமாக பெற முடியும்
விதைகள்: கால்சியம் தவிர புரதம் மற்றும் வேறு சில மினரல்களும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவை. மக்னீசியம், ஜிங்க், வைட்டமின் ஈ, ஃபோலேட் ஆகிய அனைத்து மினரல்களும், பாதாம், பிஸ்தா, முந்திரி, சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள் ஆகியவற்றில் அதிகம் இருக்கின்றன.
ஆரஞ்சு பழம்: உடலுக்கு தேவையான கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி சத்து அவசியம். இந்த சத்து, உடலின் இணைக்கும் திசுக்கள் மற்றும் எலும்பு மஜ்ஜைகள் அனைத்தும் உருவாக கொலாஜன் அவசியம். எனவே, ஆரஞ்சு பழம் சாப்பிடுவது கொலாஜன் உற்பத்தி செய்ய உதவும்.
No comments:
Post a Comment