சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து மிக உணவுப் பழக்கம் ஆகியவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஆரோக்கியம் என்று வரும் போது என்ன உணவை எடுத்து கொள்கிறோம் என்பதுடன் எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியம்.
சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வதே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நம் உடல் நல்ல நிலையில் இயங்க இரவு நேர தூக்கம் எவ்வளவு அவசியம் என்று தெரியும். அந்த இரவு தூக்கத்தை பெறும் முன் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சில உணவுகளை இரவில் சாப்பிடாமல் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. பண்டைய மற்றும் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம் பொதுவாக இரவு 7 மணிக்கு மேல் உணவுகள் எடுப்பதை தவிர்க்க அறிவுறுத்துகிறது. அதே போல சில உணவுகளை இரவில் தவிர்க்கவும் சொல்கிறது. ஆரோக்கியமாக இருக்க ஆயுர்வேதம் கீழ்காணும் உணவுகளை இரவில் தவிர்க்க பரிந்துரைக்கிறது
தயிர்: காலை அல்லது மதியம் சாப்பிடுவதை போல இரவில் தயிர் சாப்பிட கூடாது என நம் வீட்டு பெரியவர்கள் நம்மை எச்சரிப்பதை அடிக்கடி கேட்டிருப்போம். அவர்கள் சொல்வது உண்மை தான். இரவில் தயிர் சாப்பிடுவது ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படவில்லை. ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் தயிர் எடுத்து கொள்வது உடலில் கபம் மற்றும் பித்த தோஷத்தை அதிகரிக்க கூடும். தயிரில் இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இரண்டும் கலந்திருக்கிறது. இதை இரவில் சாப்பிடுவதால் நாசி பாதையில் சளி உருவாகலாம். இருமல் மற்றும் மலச்சிக்ல் ஏற்படலாம்.
கோதுமை: ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி ஒருவர் இரவு நேரத்தில் கோதுமையை பயன்படுத்தி செய்யப்படும் எந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நம் உடல் இரவு நேரத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்து கொள்ளும். அதே போல பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கோதுமை மாவை எந்த வடிவத்திலும் இரவு சாப்பிட்டால் அது உங்கள் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்த கூடும்.
பச்சை காய்கறிகள் (ரா சாலட்ஸ்): பொதுவாக சாலட்டுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இரவு நேரத்தில் ஒருவர் பச்சையாக காய்கறிகள் அல்லது பழங்களை கொண்டு சாலட்டுகளை தயார் செய்து சாப்பிடுவது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக காய்கறிகளை நன்றாக வேகவைத்து சாலட்டுகளை செய்து இரவில் சாப்பிடலாம். இரவில் நமது செரிமானம் இயல்பாகவே குறைவாக இருக்கும் என்பதால் செரிமானம் குறைவாக இருக்கும். நன்கு செரிக்காத உணவுகள் உடலில் நச்சுகள் குவிய வழிவகுக்கும். மேலும் ரா சாலட்களை உட்கொள்வது இரவு தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
மைதா: சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை இரவில் சாப்பிட கூடாது என பரிந்துரைக்கிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள். குறிப்பாக மைதாவில் நார்ச்சத்து இல்லாததால் ஸ்வீட் பாய்சன் என குறிப்பிடப்படுகிறது. மைதா எவ்வளவு ருசியாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஜீரணிக்க மிகவும் கடினமானது. பகலில் சாப்பிட்டாலே இது ஜீரணிக்க கடினம் என்று கூறப்படும் நிலையில் இரவில் மைதாவால் செய்யப்படும் பதார்த்தங்களை சாப்பிடுவது ஜீரணத்தில் தாமதம், மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கூடவே வளர்சிதை மாற்றத்தையும் மைதா நுகர்வு மெதுவாக்குகிறது.
உப்பு: இரவில் அதிக சோடியம் உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இரவு 7 மணிக்குப் பிறகு உணவில் அதிக உப்பைத் தொடர்ந்து சாப்பிடுவதால், நம் இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
No comments:
Post a Comment